கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Thursday, September 26, 2013

வள்ளிமலை

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வள்ளிமலை

தலபெருமை: 

மலைக்கோயிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் "குமரி வள்ளி'க்கு சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.

தேரோட்ட சிறப்பு: பெரும்பாலும் கோயில்களில் தேரோட்டம் ஒரு நாளில் முடிந்து விடும். ஆனால் இத்தலத்தில் தேர், நான்கு நாட்கள் ரதவீதி (மலைப்பாதை) சுற்றி நிலைக்கு வருகிறது. வழியில் வேடுவ மக்கள் தங்கள் வீட்டுப்பெண்ணான வள்ளிக்கு சீதனமாக அரிசி, வெல்லம், தானியம், காய்கறி, தேங்காய், பழம், ஆடைகள் கொடுக்கின்றனர். விழாவின் கடைசி நாளன்று (மாசி பவுர்ணமி) வள்ளி கல்யாணம் நடக்கிறது. அப்போது வேடுவர் குலத்தினர் தேன், தினைமாவினை தங்கள் மருமகனான முருகனுக்கு படைக்கின்றனர். முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கந்தசஷ்டிக்கு மறுநாள் நடக்கிறது. ஆடிக்கிருத்திகையை ஒட்டி நான்கு நாட்கள் தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது சுவாமி, சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார்.

கோபுரத்தின் கீழ் முருகன்: பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. அருணகிரியாரால் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய "குமரி தீர்த்தம்' என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை, "யானைக்குன்று' என்றழைக்கிறார்கள். இவ்விடங்கள் வனத்திற்குள் இருப்பதால் தகுந்த பாதுகாப்போடு சென்றால் பார்த்து வரலாம். மலையடிவாரத்தில் ஆறுமுகன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கிருந்து 50 கி.மீ., தூரத்தில் திருத்தணி இருக்கிறது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.