தென்மாவட்ட மக்களுக்கு குளுமை தரும் கொடைக்கானல் மலை நகரம் உருவாவதற்கு முன், கோடை வாசல்தாளமாக இருந்தது வில்பட்டி கிராமம். கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது இக்கிராமம்.
ஆதி கொடைக்கானல் என்றழைக்கப்படும் இதன் உண்மையான பெயர் வேடபட்டி. சங்க காலத்திலேயே, கோடைப் பொருநன் பண்ணி என்ற சிற்றரசன், இப்பகுதியை ஆட்சி செய்தார் என்ற செய்தியை, அகநானூற்றில் அறிய முடிகிறது. மேலும், பெருந்தலை சாத்தனார், நோன்சிலை வேட்டுவன் என குறிப்பிடுகிறார். இம்மன்னன், சங்க காலத்தில் முற்கால பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்டு, இப்பகுதியை ஆட்சி செய்தார். பாண்டிய மன்னர்களின் சிறந்த படைத்தளபதியாகவும் இருந்துள்ளார். இதனாலேயே, அவர்களிடம் தென்னவன் மறவன் என்ற சிறப்பு பட்டத்தையும் பெற்றார். வீரம், கொடை பண்பில் சிறந்து விளங்கிய இம்மன்னன், மலையில் பெரிய குழிகளை வெட்டி, அதில் விழும் யானைகளை, தன்னை தேடி வரும் இரவலர்களுக்கு பரிசாக அளித்தார் என்ற செய்தியை, அகநானூறு 13ம் பாடலில், பெருந்தலை சாத்தனார் குறிப்பிடுகிறார். இக்கிராமத்தில் பழமையின் பெருமையை போற்றும் விதமாக, பழமையான வேடியப்பன் கோயில் என்ற சுப்பிரமணியர் கோயில் உள்ளது. கோயில் விதானத்தில், பிற்கால பாண்டிய மன்னர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக, புடைப்பு கற்சிற்பங்கள் வரிசையாக தென்படுகின்றன. கருவறையில், சுப்பிரமணியர் சிலையும், வெளிப் பிரகார கோயிலில் கடம்பன், இடும்பன் சிலைகளும் உள்ளன. கோயில் வளாகத்தில், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில், கோயில் திருப்பணிகளை செய்த கங்கப்பனின் மகன் செம்மண் கும்பமன்னு என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
- க.ராஜா, வரலாற்று ஆய்வாளர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.