கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Saturday, December 14, 2013

வரலாறு

வேட்டுவர் வரலாற்றிக்கான ஆதாரங்கள்
கொங்கு நாட்டு வேட்டுவரைப்பற்றி அறிந்துக கொள்ளப் பலவிதமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை நாம் கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், புராணங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் என்னும் பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம்.
கல்வெட்டுகள்
பெரும்பாலும் திருக்கோயில்களில் காணப்படுகின்றன். நடுகற்கிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் வேட்டுவர் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக திருவெஞ்சமாக்கூடல், வெங்கம்பூர், திருமுருகன் பூண்டி, அவினாசி, திருசெங்கோடு, புதுக்கோட்டை, கருவூர், ஈரோடு, (கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகம்) ஏழூர் (நாமக்கல் மாவட்டம்) மூக்குத்தி பாளையம் (சேலம் மாவட்டம்) பருத்திப்பள்ளி (சேலம் மாவட்டம்), வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை (நாமக்கல் மாவட்டம்) முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுகளைக் குறிப்பிடலாம். பழமங்கலம், சேலம் அருங்காட்சியகம், கூலிப்பட்டி, துக்காச்சி, கொக்கராயன் பேட்டை, சிவகிரி, அந்தியூர் நடுகல் கல்வெட்டுகளும் வேட்டுவ வீரர்களின் அஞ்சாமைப் பற்றி கூறுகின்றன.
செப்பேடுகள்
ஊசிப்பாளையம் செப்பேடு, தென்னிலைப்பட்டயம், திருச்செங்கோடு அல்லாளன் இளையான் பட்டயம், தருமபுரிப் பட்டயம், வெள்ளோட்டுப் பட்டயம், தலையூர் பட்டக்காரர் பட்டயம், புதுர் பட்டக்காரர் பட்டயம், எட்டரைப் பட்டயம் (திருச்சி வட்டம்). சோழன் பூர்வ பட்டயம் மற்றும் காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம் ஆகியனவும் வேட்டுவரின் வீர வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
புராணங்கள் மற்றும் இலக்கியங்கள்
கருவூர்ப்புராணம், திருவெஞ்சமாக்கூடல் புராணம், திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை, திருச்செங்கோட்டுப் புராணம், வெள்ளாளர் புராணம், பழனி ஓலைச் சுவடிகள், குருகுல காவியம், குருகுல வரலாறு, பஞ்சவர்ணராஜ காவியம், கள்ளழகர் அம்மானை, ஓதாளர் குறவஞ்சி, மெக்கன்ஸியின் கையெழுத்துப்பிரதிகள், வில்சனின் கையெழுத்துப்பிரதிகள், கொங்கு மண்டல சதகம், அவினாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் மற்றும் மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி முதலான இலக்கியங்களும், புராணங்களும் வேட்டுவரின் சமுதாய வாழ்வு பற்றிய செய்திகளைச் செப்புகின்றன. சிலப்பதிகார வேட்டுவரிப் பாடல்கள் வேட்டுவரின் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கின்றன.
நினைவுச்சின்னங்கள்
வேட்டுவரின் நடுகற்கள், வேட்டுவர் காலத்தில் கட்டப்பட்டக் கோயில்கள், புதுப்பிக்கப்பட்டக் கோயிலகள் முதலான நினைவுச் சின்னங்களும் வேட்டுவரது வரலாற்றை உருவாக்கப் பயன்படுகின்றன. வேட்டுவ பட்டக்காரர்கள் காலத்திய இடிந்த கோட்டைகள், வெட்டிய ஆறுகள், குளங்கள் ஆகியன அவர்களது ஆட்சியின் சிறப்பைக் கூறுகின்றன.
கோவைக்கிழார் எழுதியுள்ள ‘கொங்கு நாட்டு வரலாறு’, வீயாரம் எழுதிய ‘கொங்கு நாட்டுக் கவுண்டர்கள்’, முனைவர் ஆரோக்கியசாமி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய “The Kongu Country” (கொங்கு நாடு), பேராசிரியர்கள் ம இராசசேகரதங்கமணி மற்றும் எம் சண்முகவேலு ஆகியோர் ‘வேட்டுவர் குரல்’ எனும் மாதாந்திர இதழில் எழுதியுள்ள கட்டுரைகள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘கொங்கு நாட்டு ஆவணங்கள்’ எனும்  நூல், கல்வெட்டறிஞர் புலவர் செ இராசு அவர்கள் ‘கொங்கு’ இதழில் வெளியிட்டுள்ளக் கட்டுரைகள் ஆகியன வேட்டுவரின் வரலாறு பற்றி ஆய்வு செய்யத் துணைபுரிகின்றன.
வேட்டுவரின் பூர்வீகம்
வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துக்கள்) உள்ளன. அவை
  1. வேட்டுவர் நாகர் இனத்தவர்
  2. குரு குலத்தவர்
  3. கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர்
  4. கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள்
இக்கொள்கைகளின் உண்மைத் தன்மையை இங்கே ஆய்வோம்.
நாகர்
வேட்டுவர் நாகர் இனத்தவரே என்று கனகசபைப்பிள்ளை[1] குறிப்பிட்டுள்ளார். நாகரும் வேட்டையாடும் இனத்தின் தலைவர்களே ஆவர். எனவே தொழில் ஒற்றுமை கருதி, வேட்டுவரை நாகர் இனத்தினர் எனும் கனகசபையின் கருத்தினைப் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகத்தின் பூர்வ குடிகளுள் நாகரும் ஒருவர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான். ஆனால், கொங்கு நாட்டில் பழங்காலத்தில் நாகர்கள் வாழ்ந்தமைக்கோ, நாகர் வேட்டுவரின் முன்னோர் என்பதற்கோ இதுகாறும் சான்றுகள் கிடைக்கவில்லை. என்வே இக்கருத்து பொருத்தமுடையதல்ல.
குரு குலத்தவர்
புராணங்களும், பழங்கதைகளும் வேட்டுவரை குருகுலத்தினர் எனக் கூறும். பாண்டவர், கெளரவர் ஆகியோர் குருகுலத்தவர். பாண்டவரது வீழ்ச்சிக்குப் பின்னர் இவர்களது கால்வழியினர் சிலர், தென்னிந்தியாவிற்கு வந்து, பொத்தப்பி நாட்டை உடுப்பூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். பொத்தப்பி நாடு, தொண்டை நாட்டை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வம்சத்தில் தோன்றியுள்ள வேந்தருள் நாகராஜன் குறிப்பிடத்தக்கவன். இவ்வேந்தனது மகன் கண்ணப்பன். கண்ணப்பனுக்கு வேட்டுவன், வேடன், காவிலவன், பூவிலவன் மற்றும் மாவிலவன் எனும் ஐந்து மக்கள் இருந்தனர். கண்ணப்பனுக்குப் பின்னர் மூத்த மகனான வேட்டுவன் என்று அழைக்கப்பட்டனர். இக்கருத்தினை வேல்சாமி கவிராயர் என்பார் ‘குருகுல வரலாறு’ எனும் நுலில் குறிப்பிடுகிறார். இக்கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
கண்ணப்ப நாயணாரின் கால்வழியினர்
மேற்கூறப்பட்டுள்ள கருத்தும் வேட்டுவர் சைவ நாயன்மாராகிய கண்ணப்ப நாயணாரின் கால்வழியினர் என்னும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான். வேட்டுவப் பட்டக்காரர்களின் பட்டயங்களிலும், ‘திங்களுர் நொண்டி நாடகம்’[2] எனும் கையெழுத்துப் பிரதியிலும் வேட்டுவரின் முன்னோன் கண்ணப்பர் என்று கூறப்பட்டுள்ளன. புராணகாலத்தலைவர்களுள் புகழ் மிக்கவரைத் தனது முன்னோன் என்று கூறிக்கொள்ளும் வீண் பெருமை பலருக்கு உண்டு. இது அவ்வகையைச் சார்ந்த்தே. கண்ணப்பர் வேட்டுவர் குலத்தவர் என்பதும் உண்மையே. அவரை வேட்டுவர் வணங்கி வருவதும் உண்மையே. ஆனால், இவரே வேட்டுவரின் முன்னோர் என்று கூறுதல் பொருந்தாது. இவன் காளகஸ்தி வேடன் என்பது யாவரும் அறிந்ததே.
பூர்வ குடிகள்
இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் என்பதற்குப் பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. பல அறிஞர்களும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.[3] வேட்டுவர்கள் தங்கட்கு அதிக எண்ணிக்கையில் படை தேவைப்பட்டபோது காளஹஸ்தி சென்று, அங்கிருந்த வேட்டுவ வேந்தனிடம் படை உதவி பெறுவதுண்டு. ஒருகால கட்டத்தில் காளஹஸ்தியில் இருந்த வேட்டுவர் கொங்கு நாட்டில் குடியேறியுள்ளனர். இதனால், வேட்டுவர் காளஹஸ்தி வேந்தரிடையே சுமுகமான உறவும் இருந்தது. இதனை வைத்துக்கொண்டு வேட்டுவரின் பூர்வீகம் காளஹஸ்தி எனக் கூறுதல் தவறாகும்.
பழைய கோட்டைப்பட்டக்காரர் செப்பேடுகளில் கார்வெளிவெளு(வேள்) வேட்டுவ முத்திரைக்காரர் ஒருவர் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவப் பட்டக்காரருள் ஒருவரான தலைய நாட்டுவள்ளல் கவுண்டர் என்பார் சுந்தரபாண்டிய தண்டெறி முத்துராஜா என்று மெக்கன்ஸியால் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவருள் கொங்கர் செல்வ முத்தரையன், சோழ முத்தரையன், சிய முத்தரையன், சேந்த முத்தரையன் முதலானோர் குறிக்கப்படுகின்றனர். கோபி வட்டம் கொங்கர் பாளையத்தில் இன்றும் பெரும் அளவில் முத்தரையர் வசிக்கின்றனர். திருச்சி மாவட்டம், திருச்சி வட்டத்திலும் (குறிப்பாக வடசேரிப் பகுதி) குளித்தலை வட்டத்திலும் வாழ்ந்து வருகின்ற ஊராளிக் கவுணடர்கள் முத்தரையர், கண்ணப்பர் குலவலையர் என அழைக்க்படுகின்றனர். கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கண்ணப்பருக்கு வழிபாடு நிகழுங்கால் முத்தரையரி முதலுரிமை பெறுகின்றனர். இவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து பார்க்குங்கால் வேட்டுவருக்கும், முத்தரையர்க்கும் ஏதோ ஒருவிதமான நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதனை ஊகிக்கலாம். ஒருவேளை இவர்கள் இருவரும் ஓர் இனத்தவராகவும் இருக்கலாமோ? என்ற ஐயமும் ஏற்படுகிறது.
வேட்டுவரின் பிற பெயர்கள்
வேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என் ஆயிற்று. இவர்கள் வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரன், வேட்டைக்காரன், வேட்டுவன், வேட்டுவதியரையன், ஊராளி மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கவுண்டர், காடவராயன், மன்றாடியார், பல்லவராயர், வானவதிராயன், காங்கயன், நாயக்கர், முத்தரையர், காடுவெட்டி, ராயர், வள்ளல், கொங்கு ராயர், ஊர்க்கவுணடர், கங்கதிராயர் மற்றும் பிள்ளை முதலான பட்டங்களைப் பெற்றிருந்தினர் என்பதனைக் கல்வெட்டுக்களால் அறியலாம். வேட்டுவ வேந்தர்களோ பல்லவராயர், பூவலராயர், சந்தனராயர் மற்றும் நரசிங்கராயர் முதலான பட்டப் பெயர்களைப் பூண்டிருந்தனர் என்பதனைக் குறிப்பு நாட்டுச் செப்பேட்டால் அறியலாம்.
காலந்தோறும் வேட்டுவர்
சங்க காலத்திலும் அதற்கு முன்பும் கொங்கு நாட்டில் வேட்டுவர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியச் சான்றுகளால் அறிகிறோம். இக்காலத் கட்டத்தில் இவர்கள் வேட்டையாடுதலையே தமது தொழிலாகக் கொண்டிருந்தினர். பின்னர் இவர்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது. இம்முன்னேற்றம் எவ்வாறு இருந்தது என்பதனை இங்கே காண்போம்.
வரலாற்றுக்கு முற்பட்டகாலம்
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும், குகை ஓவியங்களும் கொங்கு நாட்டிலும், அதனை ஒட்டிய பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வேட்டையாடும் காட்சியும், அதன் தொடர்பான காட்சிகளும், விலங்குகளும் தீட்டப்பட்டுள்ளன. இவையாவும் வேட்டுவரது வாழ்க்கை முறையினைச் சித்தரிப்பவையே. கொங்கு நாட்டின் பல பகுதிகளில் ஈமச்சின்னங்களும், புதைகுழிகளும், இறந்தோர் நினைவுக்கற்களும், பெருங்கற்காலச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவையாவும் வேட்டையாடும் தொழிலைக்கொண்ட நாடோடி வாழ்க்கையை மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று அயல் நாட்டு ஆராய்ச்சி அறிஞர் F A நிக்கல்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த ஈமச்சின்னங்களின் சொந்தக்காரர்களான வேட்டுவர்கள், கொங்கு நாட்டின் பூர்வகுடிகளே என்பதனைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறியலாம்.
சங்ககாலமும் அதன் பின்னரும் (கி.மு. 3 முதல் கி.பி. 9 வரை)
சங்ககாலம் தமிழரின் வசந்த காலம். இக்காலத்தில் வேட்டுவர் வேட்டையாடுவதையும் ஆடு மாடு மேய்ப்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர். இதே சமயத்தில் பலர் போர்ப்படையில் வீரர்களாகப் பணி புரிந்தனர். இவர்களுள் சிலர் மலைகளிலும், மலைச் சரிவுகளிலும், சமவெளிகளிலும் விவசாயம் செய்து வந்ததாகவும் அறிகிறோம். வேட்டுவர்கள் கள் குடிப்பதில் இன்பம் கண்டனர். கள் குடித்த கடனை அடைப்பதற்கு வேட்டுவர் சிலர் யானைத் தந்தங்களைக் கொண்டு சென்றனர் என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது.
இவர்கள் எருதுச்சண்டை, கோழிச்சண்டை, ஆடல், பாடல் ஆகிய விளையாட்டுகள் மற்றும் கலைகளில் ஈடுபட்டனர். இவர்கள் போர்ப் படைகளில் பணியாற்றியது போன்று, பாடி காவலிலும், நெடுஞ்சாலைகளில் காவலாளிகளாவும், வணிகச் சாத்துக்குக் காவல் வீரர்களாகவும் அமர்த்தப்பட்டனர்.
போர்த்தெய்வமான கொற்றவை மற்றும் காளி ஆகியவற்றை இவர்கள் வணங்கினர். பின்னர் கன்னிமார் தெய்வங்களை வழிபட்டனர்.
சங்க காலத்தில் வேட்டுவர்க் குலத் தலைவர்கள் சிலர் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்தனர். இதனைச் சங்கப்பாடல்களால் அறியலாம். இவர்களுள் கோடை மலைத் தலைவனான கடிய நெடு வேட்டுவன், தோட்டிமலை தலைவனான கண்டீரக்கோப் பெருநள்ளி, கொல்லிமலைத் தலைவனான வல்வில் ஓரி ஆகியோர் புகழ் பெற்று விளங்கினர். அகநானூறும், கோடைமலைத் தலைவனின் பெருமையைப் பேசுகின்றன. ஓரி, மிகச்சிறந்த வில் வீரனாகத திகழ்ந்தான். ஆமூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த குறும்பொறைக்கோமன் (கொடுமுடி) மாவீரனாகத் திகழ்ந்தான்; சேரரை வென்றான்; தனது அரசை விரிவுபடுத்தினான்.
இளவெயினனார், எயிற்றியனார், எயினந்தையார் மற்றும் எழூஉப்பன்றி நாகன்குமரனார் போன்ற புலவர் பெருமக்களும் வேட்டுவர் குடிக்குப் பெருமை சேர்த்தனர். வேட்டுவகுலப் பெண்பாற் புலவர்களுள் வெறிபாடிய காமக்கண்ணியார், சுழாரர் சீரன் எயிற்றி ஆகியோர் சிறந்த புலவர்களாகத் திகழ்ந்தனர்.
ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டையாடிய வேட்டுவர், சில காலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் தங்க ஆரம்பித்தனர். ஒரவகையாக நிலைத்து வாழ்ந்த இவர்கள் உணவு தேடும் நிலைமாறி, உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர். இதுவே வேட்டுவர் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம். ஒரேவிதமான தொழிலை மேற்கொண்டுவந்த வேட்டுவர் இக்காலக் கட்டத்தில் பல்வேறு தொழிலில் ஈடுபட்டனர்.
இம்முன்னேற்றத்தால் பல வேட்டுவர் வேட்டைத்தொழிலை விட்டனர்; ஆடுமாடு மேய்த்தலைக் கைக்கொண்டனர்; சிலர் வேளாண்மையில் ஈடுபட்டுச் சமவெளியில் வாழ்ந்தனர். வேட்டுவரின் இம்முன்னேற்றம் பற்றி எட்கார் தர்ஸ்ட்டனும் (Edgar Thurston) தனது “தென்னிந்தியக்குலங்களும் குடிகளும்” (Castes and Tribes of Southern India) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேற்றமடையாத வேட்டுவர் சிலர் இக்காலக்கட்டத்தில் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும், கொள்ளையடிப்பவர்களாகவும் இருந்தனர். இதனை சுந்தரரின் திருமுருகன் பூண்டிப் பதிகத்தால் அறியலாம். சுந்தரர் திருமுருகன் பூண்டிக்குச் சென்றபோது, வடுக வேடுவர் அவரை வழிப்பறி செய்ததாகக் குறிப்பிடுவார்.[4]
பின்னர் வேடுவர் திருந்தியதாகத் தெரிகிறது. திருமுருகன் பூண்டிப் பதிகத்தில் வடுக வேடுவரைக் கடுமையாக சாடிய நாயன்மாராகிய சுந்தரர். திருவெஞ்சாங்கூடல் பதிகத்தில் “வேடர் விரும்பிவாழ் வெஞ்சமாக் கூடல்” என்று வேட்டுவரைப் பொதுப்படையாக கூறுகிறார்.[5] இதில் வேட்டுவரை இவர் குறை கூறவில்லை. வேட்டுவர் பலர் வெஞ்சமாக்கூடல் இறைவர்க்கு அறக்க்கொடைகள் விட்டுள்ளனர். இவர்கள் இறையன்பிலும் மேம்பட்டு விளங்கினர்; ஓரிடத்தில் நிலையாக வாழவும் தலைப்பட்டனர்.
இக்காலக் கட்டத்தில் திருமுருகன் பூண்டி, நாமக்கல், கொடுமுடி, திருவெஞ்சமாக்கூடல் மற்றூம் பேரூர் முதலான இடங்கள் சைவ சமய வழிபாட்டு மையங்களாகத் திகழ்ந்தன. திருமுருகன் பூண்டி, வெஞ்சமாக்கூடல் மற்றூம் கொடுமுடி ஆகிய தலங்களில் வேட்டுவரே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் வேட்டுவர் யானைத் தந்ததின் உதவியோடு பொன்னைத் தோண்டி எடுத்ததாக இலக்கியம் கூறும். சங்க காலத்தையடுத்து வெஞ்சமன் எனும் வேட்டுவ அரசன் திருவெஞ்சமாக்கூடலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.
சோழர் காலம்
கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் ஆதித்தசோழன் ராசா, வேடர்களை வென்று, கொங்கு நாட்டினைக் கைப்பற்றினான். இந்நிகழ்ச்சி கொங்கு நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இதனால் வேட்டுவர்கள் அரசர்களாக இருந்தமை புலனாகும். இக்காலத்தில்தான் நாடுகள், வளநாடுகள் முதலிய அரசியல் பிரிவுகள் தோன்றின; பிரமதேயங்கள் நிறுவப்பட்டன.
கி.பி 10-ஆம் நூற்றாண்டளவில் கொங்கில் குடியேறிய கொங்கு வேளாளர்கள், நீர்வசதி உள்ள இடங்களில் தமது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டதாக திரு மர்ட்டன் (Mr Murton) குறிப்பிடுவார். தொண்டை மண்டலத்திலிருந்தும், சோழ மண்டலத்திருந்தும் கொங்கில் குடியேற்றப்பட்ட கொங்கு வேளாளர்கள், முன்பே விவசாயத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்ததால் கொங்கு நாட்டில் ஏரி, வாய்க்கால் பாசனங்களை ஏற்படுத்தினர். நீர்பாசனத்துடன் கூடிய விவசாயம் பெருகியது. சோழ வேந்தர்கள் அனைத்து மக்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்தப் பெருமுயற்சி மேற்கொண்டனர்; பல சலுகைகளையும் வழங்கினர். கல்வெட்டுகளில் வேளாளர்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே குறிப்பிடப் பெறுகின்றனர் என்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கொங்கு நாட்டின் பூர்வகுடிகளான வேட்டுவர்களுக்கும், குடி புகுந்த வேளாளர்களுக்கும் பத்து, பதினோறாம் நூற்றாண்டுகளில் சில பூசல்கள் நிகழ்ந்தன. ஆனால் கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் இப்பூசல்கள் மறைந்து, இவர்களிடையே சமரசம் ஏற்பட்டது. நில உரிமைகளும், கோயில் வழிபாட்டு, முப்பாட்டு உரிமைகளும் வேளாளர் கைக்கு மாறின. வேட்டுவரில் பலர் வேளாளர்களாக மாறினர். வேளாள்ரின் பாதிப் பங்காளியான் வேட்டுவர்கள் என்று கண்ணன் கூட்டத்தார் செப்பேடுகளும் இதனைக் குறிப்பிடுகின்றன. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவர், வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம், பொருளாதாரத் துறையில் வேளாளரின் உயர்ச்சி ஆகியவற்றை விரித்துக் கூறுகிறது. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் கூட்டப்பெயர்களை (குலம்) வைத்துக்கொண்டனர்.
சில கூட்டப் பெயர்கள் வேளாளர் மத்தியிலும், வேட்டுவர் மத்தியிலும் காணப்படுகின்றன. அவை அந்துவன், அக்கினி, இந்திரன், கீரை, காடை, மூலன், மணியன், பனையன், பாண்டியன், சேரன், பூந்சந்தை, வெலையன், காரி, புன்னை மற்றும் பொன்னன் என்பனவாகும். இப்பொதுக் குலப் பெயர்களால் இருவரிடையே ஏற்பட்ட நெருக்கமான உறவு புலனாகிறது.
சோழருக்குப் பின்னர்
சோழரது ஆட்சி கொங்கு நாட்டில் மறைந்த பின்னர், பாண்டியரும், ஹொய்சாலரும் கொங்கு நாட்டில் மேலாண்மை செலுத்தினர். வேட்டுவ வீரர்களின் வில்லாற்றலில் முழு நம்பிக்கை கொண்ட பாண்டியர், தமது படைகளில் பெருமளவில் வேட்டுவ வீரர்களை அமர்த்திக் கொண்டனர். சில வேட்டுவ வீரர்கள் படைத்தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். சுந்தர பாண்டியனது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போரில் பகைவர்களை வெட்டி வீழ்த்தி, வீரமரணம் எய்திய அந்தியூரனுக்கு நடுகல் எடுக்கப்பட்ட செய்தி இங்கு நினைவு கூறத்தக்கது.
விசயநகர வேந்தரது ஆட்சிக் காலத்தில் தெலுங்கு விவசாயிகளும், சக்கிலி, நெசவாளர், வண்ணான், மருத்துவர் முதலான குடிப்படைகளும், விசயநகர வீரர்களும் கொங்கு சமுதாயத்தில் சங்கமம் ஆயினர். இதனால் கொங்கு நாட்டில் தெலுங்கர் ஆதிக்கமும் எற்படலாயிற்று. இக்கால கட்டதில் கொங்கு நாடு வேட்டுவ, வெள்ளாள பட்டக்காரர்களுள் தென்னிலை, புரவிபாளையம் மற்றூம் திங்களூர் பட்டக்காரர் ஆகியோர் புகழ்பெற்றனர்.
காணியாளர்
கொங்கு நாட்டில் வேட்டுவர் சிலர் காணியாளர்களாகச் சிறப்புற்று விளங்கினர். இவர்களுள் புத்தூர், பள்ளக்குழி, கழனூர், முத்தப்பனூர், தும்பங்குறிச்சி, செளதாபுரம், இளநகர், பிரிதி, காளிப்பட்டி, ஊசிப் பாளையம், பழமங்கலம் மற்றும் குலவிளக்கு முதலான ஊர்களில் வேட்டுவரே காணியாளராக இருந்தனர். அஞ்நூற்றுமங்கலம், திருமழபாடி, குளக்குறிச்சி, படலோடி குறிச்சி, தென்னிலை மற்றூம் இருப்பலி முதலான ஊர்களில் வேட்டுவர் காணியாட்சியாளர்களாகத் திகழ்ந்தனர். காணியாட்சியாளருள் வெங்கச்சி வேட்டுவர் சிலர் புகழ் பெற்று விளங்கினர். முன்னை வேட்டுவர் வடபரிசார நாட்டுக் கோசனத்திலும், சாந்தப்படை வேட்டுவர் மற்றும் கரைய வேட்டுவர் ஆகிய இருவரும் பூந்துறைநாட்டு அறச்சலூரிலும் காணியாளர்களாகத் திகழ்ந்தனர்.
ஊராளிகள்
வேட்டுவர் பலர் கொங்கு நாட்டின் பல ஊர்களில் ஊராளிகளாகத் திகழ்ந்தனர். இவர்களுள் சிலரைப்பற்றிக் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்களுள், மேல்கரை அரையநாட்டு வடிவுள்ள மங்கலத்தில் (துக்காச்சி) ஊராளி வேட்டுவன் அழகன்காளியும், பன்றிநாட்டு குளப்பாடியில் ஊராளி நெனூர் அத்தானியும் (நெருப்பூர் நடுகல்) எழுகரை நாட்டு பெரிய விளங்கியில் ஊராளி சுரண்டை வேட்டுவன் சிலம்பன் சிறியானும், கீழ்க்கரைப் பூந்துறை நாட்டுப் பருத்திப்பள்ளியில் ஊராளி வேட்டுவன் அதியமான் நங்கனும் குறிப்பிடத்தக்கவராவர். அந்தியூர் மலைகளில் (பருகூர் மலைகள்) வாழும் பழங்குடிகளில் ஊராளி என்போரும் ஒரு பிரிவினர் என்பது வேட்டுவரின் தொன்மைச் சிறப்பினை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சோழன் பூர்வ பட்டயத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வேட்டுவர், கிராமத் தலைவர்களாக (ஊராளி மற்றும் மன்னாடி) நியமிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
பாளையக்காரர்கள்
சேர, சோழ மற்றும் பாண்டியரது ஆட்சிக்குப் பின்னர், கொங்கு மண்டலம் வேட்டுவ இனத்தைச் சார்ந்த பாளையக்காரர்களால் ஆளப்பட்டு வந்தது. இவ்வாறு ஆளப்பட்டு வந்த பகுதிகளுள் சங்ககிரி, சாமப்பள்ளி (தென்னிலை) காவரிபுரம், ஆண்டியூர் முதலானவை குறிப்பிடத்தக்கவையாகும். இப்பகுதிகளில் வேட்டுவப் பாளையக்காரர்கள் கோட்டைகள் கட்டிக் கொண்டு சிறப்புடன் ஆண்டுவந்தனர். கக்குவாடி பாளையக்காரரும் பண்டு, புகழ்பெற்று விளங்கினர். இவர்களுள் நல்லண்ணக் கவுண்டர் குறிப்பிடத்தக்கவராவர். இவருக்குப் பாண்டியவேந்தன் எழுபது வகை விருதுகள் வழங்கினான் என்று மெக்கன்ஸி குறிப்பிடுவார்.
படைத்தலைவர்கள்
சங்ககாலம் முதற்கொண்டே வேட்டுவவீரர் பலர் பாண்டியரின் ஆட்டியை விரிவுபடுத்துவதில் பெரும்பணி புரிந்துள்ளனர். சிலகாலம் இவர்கள் சோழர், பாண்டியர், சேரர், நாயக்கர் மற்றும் ஹொய்சாளர் முதலானோரது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் பணியில் பெரிதும் ஈடுபட்டிருந்தினர். வேட்டுவரில் பலர் வலிமைமிக்க படைத்தலைவர்களாகவும் விளங்கினர். வீரத்திற்கும், அஞ்சாமைக்கும் பெயர் பெற்ற வேட்டுவர் இலக்கியங்களில் பாராட்டப் பெறுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அதன் பின்னரும், வேட்டுவ கவுண்டர்கள் விவசாயத்திலும், தொழில்த்துறையிலும், கல்வித்துறையிலும் மற்றும் உத்தியோகத்துறையிலும் மிகவுல் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
வேட்டையாடுதல், நாட்டைக் காத்தல் ஆகிய தொழில்களை மேற்கொண்ட வேட்டுவர், ஊர்த் தலைவர்களாகவும் (ஊராளி), படைவீரைகளாகவும், படைத்தலைவர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் மற்றும் பட்டக்காரர்களாகவும் பல்வேறு காலக் கட்டங்களில் பணியாற்றியுள்ளனர். வேட்டைத் தொழிலை மேற்கொணட வேட்டுவர், பின்னர் காடுகளை அழித்து, விவசாய நிலங்களாக மாற்றி வேளாண்மை புரிந்துள்ளனர். இவர்கள் இறைப்பணியில் மேப்பட்டு விளங்கிப் பல திருக்கோயில்களை அமைத்தும், கோயில்களைப் புதுப்பித்தும், அவற்றில் தொடர்ந்து பூசனை நடைபெற பல அறக்கொடைகளை அளித்தும் தொண்டு புரிந்துள்ளனர். இவ்வாறு வேட்டுவர்கள், கொங்கு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்து, கொங்கு நாட்டு வரலாற்றில் தனக்கெனத் தனித்தோர் இடத்தைப் பெற்றுள்ளனர்.
பல வேட்டுவர்கள் வேளாண்மைத் தொழில் செய்து வேளாளர் ஆயினர். கொக்கராயன் பேட்டைக் கல்வெட்டு இதற்கோர் சான்று.
வேட்டுவர்கள் பழங்கொங்கு நாடு முழுவதிலும் வாழ்ந்து வந்தனர். இருப்பினும் வடகொங்கில் இவர்கள் மிகுதியாக வாழ்ந்தனர். காவிரி, நொய்யல், அமராவதி ஆற்றங்கரைகளில் வேட்டுவர் குடியிருப்புகள் மிகுதி.
வேட்டுவ குலத்தினின்றும் வேளாளர்களாக மாறிய இவர்கள், தமது பெயருடன் வேட்டுவ இனத்தின் பெயரையும் இணைத்துக் கொள்ள மறக்கவில்லை. எடுத்துக்காட்டாக, கரூர் பசுபதியீசர் கோயில் கல்வெட்டு ஒன்று “புன்னம் பூவாணிய வேட்டுவரில் வேளான் கரியானான மருதங்கவேளான்” என்பவன் பசுபதியீசர்க்கு மூன்று கழஞ்சு பொன் அளித்தான் எனும் செய்தியைத் தெரிவிக்கின்றது. பின்னர் காலம் சில சென்றபின் தமது பெயரில் வேட்டுவர் எனும் சொல்லை நீக்கிவிட்டு வேளாளரும் தமது கூட்டப் பெயர்களில் (குலப் பெயர்கள்) சில பொதுவான பெயர்களைக் கொண்டுள்ளமையாலும் இது விளங்கும். மற்றொரு எடுத்துக்காட்டாக பாண்டியன், பூச்சந்தை, காரி, மூலன், மணியன், பனையன், காடை, கீரை, அந்துவன் மற்றும் வெலையன் ஆகிய குலப் பெயர்கள் இருவரிடையே பொதுவாக காணப்படுகின்றன. அடுத்து, வேளாளர் கோயில்கள் சிலவற்றில் வேட்டுவர்க்கும், வேட்டுவர் கோயில்கள் சிலவற்றில் வேளாளர்க்கும் முப்பாடு வழங்கப்பட்டது. மேலும் பட்டாலி, பருத்திப்பள்ளி, தும்பங்குறிச்சி போன்ற ஊர்களின் காணியார்களாக வேட்டுவர் மற்றும் வேளாளர் ஆகிய இருவருமே குறிக்கப்பட்டுள்ளனர்.
பிற்காலத்தில் முதலாம் ஆதித்தச் சோழனின் ஆட்சிக்காலத்திலும் வேளாளர் சிலர் கொங்கு மண்டலத்தில் குடியேற்றப்பட்டனர்.

“கொங்கு நாட்டு வேட்டுவக்கவுண்டர்கள் வீர வரலாறு”
வரலாற்று வித்தகர், களஞ்சியச் செம்மல் பேராசிரியர் ம இரா தங்கமணி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.