ஆசார்யாளின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவராக இருக்கப்பட்ட பத்மபாதாசாரியாள் ஆசார்யாள் காசிவாஸம் செய்துகொண்டு இருந்தபோதே அவரிடம் சிஷ்யராக வந்து சேர்ந்தார். ஆசார்யாளுக்குப் பதினாறு வயஸ்கூடப் பூர்த்தியாகாத ஸமயம்.
பத்மபாதருக்கு பூர்வாச்ரமத்தில் ஸநந்தனர் என்று பேர். அவர் சோழ தேசத்தைச் சேர்ந்தவர். அவரைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். தம் ஊரில் இருந்த காலத்தில் அவருக்கு ஒரு பெரியவர் நரஸிம்ஹ மந்த்ரோபதேசம் பண்ணினார். நன்றாக ஜபம் பண்ணி ஸித்தி பெற்று நரஸிம்ஹ மூர்த்தியை தரிக்கணுமென்று அவருக்கு ஆசை உண்டாயிற்று. அகத்திலிருந்து புறப்பட்டார். ஏகாந்தமாக ஒரு மலையின் உச்சியிலிருந்த காட்டுக்குப் போய் தபஸ் பண்ண உட்கார்ந்தார்.
ஒரு வேடன் வந்தான். 'ஐயர் ஏன், பாவம், இங்கே வந்திருக்கிறார்?'என்று நினைத்தான். அவரிடம் வந்து, "எங்கள் மாதிரி பலசாலியான வேடர்கள் இங்கே வேட்டையாடிப் பிழைப்போம். பூஞ்சை ப்ராம்ணன் உனக்கு இங்கே எதுவும் கிடைக்காமல் கஷ்டப்படுவாய். எதுக்கு வந்தே?"என்று கேட்டான்.
நரஸிம்ஹர், தபஸ் என்றெல்லாம் சொன்னால் அவனுக்கு புரியாதென்று அவர், "இடுப்புக்குக் கீழே மநுஷ்யன் மாதிரியும் மேலே சிங்கம் மாதிரியும் ஒரு ப்ராணி உண்டு. எனக்கு அது தேவைப்படுகிறது. இந்தக் காட்டில் அது இருக்கிறதென்று கேள்வி. அதற்காகத்தான் வந்தேன்"என்றார்.
"நிஜமாகச் சொல்லு ஐயரே, அப்படியரு மிருகம் இங்கே இருக்கா?இந்தக் காட்டிலே நான் பார்க்காத இடமோ, எனக்குத் தெரியாத மிருகமோ ஒண்ணும் கிடையாது. வேடர்களிலேயே என்னைப்போல இன்னொருத்தன் கிடையாது. ஆனால் c சொன்ன மாதிரி மிருகம் என் கண்களில் பட்டதே இல்லை. c சொல்வது மட்டும் நிஜமென்பாயானால் அதை நான் பார்க்காமல் விடுவதில்லை. நானே அதைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுக்கிறேன. c கஷ்ப்பட வேண்டாம் ஆனால் நிஜமாகவே அப்படி உண்டா, சொல்லு"என்றான்.
காட்டு ஜனங்கள் முரடு, நாம் ரொம்ப 'நைஸ்'என்று தோன்றினாலும், அவர்களுடைய எளிமை, உழைப்பு, தைர்யம், ஒத்தாசைக் குணம் எதுவும் நமக்கு வராது;நம்முடைய பித்தலாட்டங்கள் அவர்களுக்கு வராது!
நரஸிம்ஹ மூர்த்தியை இவன் பிடித்து வந்து கொடுப்பதாகச் சொல்கிறானே என்று அவர் சிரித்தார்.
"ஏன் சிரிக்கிறாய்?வேடிக்கைக்குச் சொன்னாயா?"என்று அவன் கேட்டான்.
தம்மை ஏகாந்தமாக விட்டு அவன் நகர்ந்தால் போதுமென்று அவர், "நிஜமாக அது இங்கே இருக்கிறது. ஆனால் உன்னால் பார்க்கமுடியாது. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ"என்றார்.
"அப்படியா சொன்னே?நாளைக்கு ஸாயங்காலத்துக்குள் அதை நான் பிடித்துக்கொண்டு வருகிறேனா, இல்லையா பாரு!அது மட்டும் முடியா விட்டால் இந்த உயிரை விட்டுவிடுவேன். இந்தக் காட்டுக்கே பெரிய வேடன் என்று இருந்து கொண்டு உன் மாதிரி ஐயர் கஷ்டம் பார்க்காமல் எங்கள் இடத்துக்கு வந்திருக்கும்போது உதவி பண்ண லாயக்கில்லையென்றால் நான் உசிரை வைத்துக் கொண்டு என்ன ப்ரயோஜனம்?"என்று உசந்த மனஸோடு சொன்னான்.
"ஸரி, உன்னால் முடியாது என்று நான் சொல்லும் போது, முடியும் என்று c புறப்பட்டால் நான் என்ன பண்ணுவது?உன் இஷ்டம்!"என்று அவர் சும்மாயிருந்து விட்டார்.
வேடன் நரஸிம்மத்தைத் தேடிக்கொண்டு புறப்பட்டான். அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட அரை மநுஷ - அரை சிங்க ரூபத்தை விடாமல் நினைவில் வைத்துக் கொண்டு காடு பூரா தேடுதேடு என்று தேடினான். ஆஹார நினைவே இல்லாமல், களைப்பு பார்க்கமால் ஒரே குறியாய்த் தேடினான். அன்றைக்கு முழுதும் போய் விட்டது. மிருகம் அகப்படவில்லை. அவனும் விடவில்லை. மறுநாளும் தேடினான். ஸாயங்கால வேளையும் வந்துவிட்டது.
'ஸரி, ஐயரிடம் சொன்னதை நம்மால் செய்யமுடியவில்லை. அவர் பொய் சொல்லியிருக்கமாட்டார். நாம்தான் கையாலாகாதவனாகி விட்டோம். உயிரை விட்டுவிட வேண்டியதுதான்'என்று தீர்மானம் பண்ணினான்.
அங்கே படர்ந்திருந்த கொடிகளை அறுத்தான்!தூக்குப் போட்டுக்கொள்வதற்காகக் கிளையில் கட்டினான்.
அந்த ஸமயத்தில் எதிரே ஒரு மிருகம் நின்றது.
நரஸிம்ஹ மூர்த்திதான் வந்துவிட்டார் எத்தனை ஏகாக்ரமாக (ஒருமுனைப்பாட்டோடு) அவன் தன்னையே இரண்டு நாளாக ஸ்மரித்திருக்கிறான், ஸத்ய வாக்ய பரிபாலனத்திற்காக எப்படி ப்ராண த்யாகமும் பண்ணத் துணிந்துவிட்டான் என்பதில் ஸந்தோஷித்தே நரஸிம்ஹ ஸ்வாமி தர்சனம் கொடுத்தார்.
ஐயர் சொன்ன வர்ணனைப்படியே மிருகம் இருந்ததைப் பார்த்து அவனுக்கு ஒரே ஸந்தோஷமாயிற்று "பாழும் மிருகமே!நீ அகப்படுவதற்கு இத்தனை பாடா படுத்தினாய்?"என்று சொல்லி, தூக்காகப் போட்ட கொடியை அவிழ்த்து அதனால் நரஸிம்ஹத்தைக் கட்டினான். ஸ்வாமியும் அவனுக்குக் கட்டுப்பட்டு நின்றார். "கட்டுப்பட்டு"என்றால் இரண்டு அர்த்தத்திலேயும்!
கரகரவென்று நரஸிம்மத்தை இழுத்துக்கொண்டு அவன் சோழ தேச ப்ராமணரிடம் வந்தான். "ஓய், பாரும்! இதுதானே நீர் சொன்ன மிருகம்? என்று கேட்டான்.
இவன் காட்டினானே தவிர, அவரால் பார்க்கமுடியவில்லை! அதாவது நரஸிம்ஹ ஸ்வாமி அவருக்குக் காட்சி கொடுக்கவில்லை!
அவனானால், "இந்தா, புடிச்சிக்கோ, உனக்காத்தான் கொண்டுவந்தேன். ஓட்டிக்கொண்டு சுகமாக ஊருக்குப் போ"என்றான்.
அவருக்கு துக்கம் துக்கமாக வந்தது. "ஹீனனான வேடனுக்குத் தெரிகிறாய், எனக்குத் தெரியமாட்டேன் என்கிறாயே!"என்று ஸ்வாமியிடம் நொந்து கொண்டார்.
அப்போது அசரீரி வாக்கு உண்டாயிற்று. "கோடி வருஷம் ஸ்வரூப த்யானம் பண்ணினாலே ஏற்படக்கூடிய சித்த ஐகாக்ரியம் (ஒருமுனைப்பாடு) இவனுக்கு ஒரே நாளில் உண்டாயிற்று. பசி, நித்ரை இல்லாமல், எங்கே சுற்றினாலும் ஒரே த்யானமாக, இப்படி ப்ராணனைப் பந்தயம் வைத்து ஸாதனை பண்ணினவராக எந்த ரிஷியிம் இல்லை. இந்த மஹா பக்தனின் ஸங்கம் உனக்கு ஏற்பட்டதால்தான். தர்சனம் கிடைக்கவிட்டாலும் கர்ஜனையும் இப்போது இந்த வாக்கும் கேட்கிற பாக்யமாவது கிடைத்தது. இதனாலேயே மந்த்ர ஸித்தியும் பெற்றுவிட்டாய். உனக்கு அவச்யமான காலந்த்தில் வந்து, ஆகவேண்டியதை அநுக்ரஹிப்பேன்"என்று பகவானின் வாக்கு சொல்லிற்று.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.