தென்னிந்திய வரலாற்றினை அறியும் பொருட்டு காலின் மெக்கன்சி அவர்களால் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு வடிவங்களிலும் தொகுக்கப்பட்ட தரவுகள் என்பவை பெரும் எண்ணிக்கையிலானவை. சுவடி மட்டுமே அன்றி பேட்டி, கல்வெட்டு, படம், காசு, பழம்பொருள், சிலை என்று வரலாற்றாய் வுக்கான பன்முகத் தரவுகளையும் கொண்டது மெக்கன்சியின் தொகுதி. தென்னிந்திய மொழிகள் எதையும் அறிந்திடாத மெக்கன்சிக்கு இப்பெரும் பணியில் உதவியவர்கள் இங்கிருந்த பண்டிதர்கள் ஆவர். மிகமுக்கியமாகக் காவெள்ளி சகோதரர்கள், இலக்ஷமய்யா, இராகவைய்யா போன்றோர் மெக்கன்சியுடன் இணைந்து பணிபுரிந்தனர். (Thomas R.Trautmann.2011)
மெக்கன்சிக்கு இத்தொகுப்புப் பணி பற்றிய புரிதல் எந்த அளவிற்கு இருந்தது என்பதை அறியச் சான்றுகள் குறைவாகவே உள்ளன. அவரால் தொகுக்கப்பட்டத் தரவுகள் அனைத்தையும் ஓர் ஒழுங்கமைவுக்குள் வைத்து எத்தகைய பணியும் அவரால் செய்யப் பெறவில்லை. எனினும் அவர் தனக்குக் கிடைத்த சில தரவுகளை ஒப்பீடு செய்து அவ்வப்போது சில கட்டுரைகளை எழுதியுள்ளார். (wilson:1828:xii-xiii) இதில் ஆசியவியல் நிறுவன இதழில் (The Journal of the Asiatic Researches : vol-ix:1809)) வெளியான ‘Account of the jains என்ற கட்டுரை மிக முக்கியமானது. ஜைன சமயம் பற்றிய அவரின் தொகுப்பிலுள்ள தரவுகள் பலவற்றையும் பயன் படுத்தி எழுதப்பட்ட கட்டுரை அது. எனவே அவரது காலத்தி லேயே அத் தொகுப்புகளை ஓர் ஒழுங்கமைவு செய்து பயன்படுத்தும் நிலை இருந்ததை அறியமுடிகிறது. இந்நிலையில் மெக்கன்சியின் தொகுப்பு முழுமைக்குமான அட்டவணை அவரின் காலத்தில் செய்யப்பெறவில்லை. எனினும் மெக்கன்சிக்கு அத்தொகுப்பு களுக்கு ஓர் அட்டவணை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிகின்றது. மெக்கன்சி தன் நண்பர் அலெக்சாண்டர் ஜான்சன் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் தனது தொகுப்புப்பணி பற்றி மிக விரிவாகப் பேசியுள்ளார். அக்கடிதத்தின் இறுதியில் “தான் ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்கு முன் தன்வசமுள்ள மொத்த தொகுப்புகள் பற்றிய கருத்துப் பார்வையைத் தரத்தக்க அட்டவணை ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். (The Journal of the Royal Asiatic Society:1834:343) எனினும் அப்பணி மெக்கன்சியின் எதிர்பாராத மறைவால் தொடங்கப்படாமலேயே போனது.
அறிவியல் நிலைப்பட்ட ஒரு பெரும் வரலாற்றுத் தொகுப்பிற்கு அறிவியல் பூர்வமான அட்டவணை மிகமுக்கியமாகத் தேவைப்படு கிறது. மெக்கன்சியின் சேகரிப்பு அத்தகைய அட்டவணை ஒன்றினை வேண்டி நின்றது. மெக்கன்சியின் சேகரிப்புப் பணிக்குப் பெரும் உதவி என்று எதையும் செய்யாத கிழக்கிந்தியக் கம்பெனி அச்சேகரிப்பின் இன்றியமையாமையை அறிய ஆரம்பித்தது. மேலும் அத்தொகுப்பை விரிவு செய்வதை விட அதற்கான அட்டவணை தயாரிக்கும் பணியை முதலில் மேற்கொண்டது. பின்னர் அத் தொகுப்பு சில அட்டவணைகளைக் கண்டது. அவற்றில் பின்வரும் மூன்று அட்டவணைகள் முக்கியமானது.
- மெக்கன்சியின் அனைத்து தொகுப்பு ஆவணங் களையும் அட்டவணை செய்த வில்சனின் ‘மெக்கன்சி தொகுப்பு விளக்க அட்டவணை’
- சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி நூலகத்தில் இருந்த கீழ்த்திசைச் சுவடிகள் அனைத்தையும் மூன்று தொகுதிகளில் அட்டவணை படுத்திய டெய்லரின் ‘கீழ்த்திசைச் சுவடிகள் அட்டவணை’
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மெக்கன்சி சுவடிகளை மட்டும் அட்டவணை செய்த மகாலிங்கத்தின் “மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் அட்டவணை”
இம்மூன்று அட்டவணைகளும் எந்த அளவிற்கு மெக்கன்சியின் தொகுப்பிற்கான கனத்தை வெளிப் படுத்தின என்பதும் மெக்கன்சி யின் தென்னிந்தியாவை மையப் படுத்திய பார்வைக்கு எங்ஙனம் உதவுகின்றன என்பதும் முக்கிய விவாதமாகின்றது.
வில்சன்
மெக்கன்சியின் தொகுப்பை முதலில் ஆவணப் படுத்தும் நோக்கில் அட்டவணை செய்தவர் வில்சன். ‘Mackenzie collection: A Description catalogue of the oriental Manuscripts‚எனும் பெயரில் இரு தொகுதிகளாக 1828இல் ஆசியவியல் நிறுவனம் மூலம் வெளிவந்தது. இதற்கு முன்பே மெக்கன்சியின் மறைவுக்குப் பிறகு மெக்கன்சியின் இந்திய உதவியாளர்கள் அத் தொகுப்பிற்கு ‘சிறு அட்டவணை’ தயாரிக்கும் பணியை மேற் கொண்டிருந்தனர் என்றும் அது பின்னர் வில்சனின் மேற்பார்வையில் முற்றுப் பெற்றது என்பதையும் அறியமுடிகிறது ((Wilson:1828:XiX).
பெரும் சமஸ்கிருதப் புலமையாளரான வில்சன் தென்னிந்திய மொழிச் சுவடிகளை இந்திய உதவியாளர்களைக் கொண்டே படித்து இவ் வட்டவணையை முடித்தார். எனினும் அவர்களின் பெயர்கள் எதையும் வில்சன் நூலில் பதிவு செய்யவில்லை.
மெக்கன்சியின் அனைத்து தொகுப்புகளையும் முதலில் முழுமையாகப் பட்டியலிட்டு முகவுரையில் தந்துள்ளார். அவற்றின் எண்ணிக்கையும் தரப்பெற்றுள்ளது. அவை இலக்கியம் (1568), வட்டார வரலாற்றுச் சுவடிகள் (2070), கல்வெட்டுகள் (8076), மொழிபெயர்ப்புகள் (2159), வரைபடங்கள் (79), ஓவியம் (2630), காசுகள் (6218), படங்கள் (106), பழம்பொருள்கள் (40) என நீண்டு செல்கின்றன. இத்தொகுப்புகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு இந்திய நிலப்பரப்பின் இலக்கியம், சமயம் மற்றும் வரலாறு பற்றிய அறிமுகம் முதலில் அமைந்துள்ளது. இவ்வறிமுகம் புராணங்களை முன்னிலைப்படுத்தியே எழுதப்பட்டது. இந்திய மொழிகள் பற்றியும் வரலாறு பற்றியும் தெளிவான வரையறை உருவாகாத காலகட்டம் இது என்பதும் நினைவில் கொள்ள வேண்டியதாகும். தமிழ் உள்ளிட்டத் தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது என்பதை எல்லீஸ் துணையுடன் பதிவு செய்யும் இவர் இலக்கிய நிலையில் தமிழில் ஆகச்சிறந்த இலக்கிய ஆக்கங்களான இராமாயணம், மகாபாரதம் எல்லாமே சமஸ்கிருதத்தின் மொழி பெயர்ப்புகளே என்பதையும் பதிவு செய்யத் தவறவில்லை. (Wilson:1828:XXXiV). பொதுவாகச் சமஸ்கிருத இலக்கியம் பற்றிய குறிப்பு தவிர்த்து இவ்வறிமுகம் யாவும் மெக்கன்சியின் தொகுப்பி லுள்ள ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது தெளிவாகிறது.
வில்சனின் அட்டவணை பெரும்பிரிவாக மொழியையும் உட்பிரிவாகத் தரவுகளின் பொருண்மையையும் கொண்டிருக்கிறது. முதல் தொகுதி சமஸ்கிருத மொழிச் சுவடிகள் (மிக நுணுக்கமாக 13 பிரிவுகளில் உள்ளது)தமிழ் மொழிச் சுவடிகள் (7 பிரிவுகள்), தெலுங்கு மொழிச்சுவடிகள் (5பிரிவுகள்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. சமஸ்கிருத மொழிப்பிரிவில் “ஜைன இலக்கியம்” எனும் பிரிவும் அடங்கியுள்ளது. முதல் தொகுதியைக் காணும்போது சமஸ்கிருத மொழி அளவிற்குத் தமிழ், தெலுங்கு மொழி, இலக்கியம், வரலாறு பற்றிய நெட்டோட்டமான பார்வை அப்போது உருவாகவில்லை என்பது தெளிவாகும். இரண்டாம் தொகுதியில் பழங்கன்னடம், கன்னடம், மலையாளம், மராட்டியம், ஒரியா, ஹிந்தி, அரபு, பெர்சியன், ஜாவா, பர்மியம் ஆகிய மொழிச்சுவடிகள் அடுத்தடுத்து அட்டவணை படுத்தப்பட்டுள்ளன. இணைப்புப் பகுதி விரிவாக உள்ளது. இணைப்பில் வட்டார வரலாற்றுச் சுவடிகள் (Local tracts) மொழி, நிலப்பகுதி அடிப்படையில் தரப்பட்டுள்ளன. மேலும் கல்வெட்டுகள், படங்கள், காசுகள் போன்றவை பட்டியலிடப் பட்டுள்ளன. இவை பெரும்பான்மை பெயர் மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலேயே அமைந்தவை. (காசுகள் பற்றி மட்டும் சற்று விரிவான பதிவைக் காணலாம்.)
ஒவ்வொரு சுவடியிலும் சுவடிவகை (ஓலை/தாள்), சுவடியின் பொருண்மை, ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. புராணம் தொடர்பான சுவடிகளுக்கு மேலதிக விளக்கம் தரப்பட்டுள்ளது. முதல் தொகுதியின் இறுதியில் தமிழ் நூல்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன.
வரலாறு எழுதுவதை மையப்படுத்தி அமைந்த மெக்கன்சியின் தொகுப்பிற்கும் இலக்கிய நிலை (குறிப்பாகப் புராணம்) சார்ந்து அதிக சிரத்தையுடன் உருவான வில்சனின் அட்டவணைக்கும் இடையேயான இடைவெளி அதிகமானது. மெக்கன்சி தொகுப்பிற் கான சிறப்பை வில்சனின் அட்டவணை நிறைவுசெய்யவில்லை என்பதைப் பின்னர் மெக்கன்சி சுவடிகுறித்து ஆய்வு செய்த பலரும் பதிவு செய்துள்ளனர். சமஸ்கிருத மொழியுடன் பெரிதும் தொடர்புடைய தென்னிந்திய மொழிகளைத் தவிர்த்து வேறெந்தத் தென்னிந்திய மொழியையும் அறியாத வில்சன் அம்மொழிச் சுவடிகளுக்கு உருவாக் கிய அட்டவணையின் தரம் கேள்விக் குள்ளாகிறது. வில்சனின் அட்டவணை சமஸ்கிருதத் தன்மையை அதிகம் பிரதிபலிப்பதாகவும் கருதப்படுகிறது (Thomas R.Trautmann:2011:33)
இத்தொகுப்பில் மிகமுக்கிய இடம்பெற்றிருந்த வரலாறு தொடர்பான ஆவணங்கள் வெறும் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே அட்டவணை யில் இடம்பெற்றிருப்பது மெக்கன்சி தொகுப்பின் கனத்தைக் குறைப்பதாகவே அமைகின்றது. எனினும் மெக்கன்சியின் தொகுப்புகளை முதலில் பதிவு செய்த தும் “முழுமையாகப்” பதிவு செய்ததும் வில்சனின் அட்டவணையே ஆகும்.
வில்லியம் டெய்லர்
பெரும் வரலாற்றுத்தரவுகளின் சுரங்கம் என்று வருணிக்கப்பட்ட மெக்கன்சியின் தொகுப்பிற்கு வில்சன் உருவாக்கிய அட்டவணை போதுமானதாக அமையவில்லை. அட்டவணைப் பணிக்காக வில்சன் வசமிருந்த தொகுப்புகளில் தென்னிந்திய மொழியல்லாத மொழிச் சுவடிகளும் இன்னபிற ஆவணங்களும் இலண்டனுக்கு 1823 முதல் 1825 வரை மூன்று பகுதிகளாகப் பிரித்து அனுப்பிவைக்கப் பட்டன. தென்னிந்திய மொழிகளில் உள்ள சுவடிகளும் கல்வெட்டுகளும் 1828 ஆம் ஆண்டு சென்னை “madras college library” இல் வைக்கப்பட்டன. (Taylor:1857:Xiii-xv)
இதனிடையே “காவெள்ளி வெங்கட இலக்ஷமய்யா” மெக்கன்சி யால் தொடங்கப்பெற்று முடிவுறாது போன தொகுப்புப் பணியைத் தொடரவும் ஆய்வு செய்யவும் தான் விரும்புவதாகக் கடிதம் எழுதினார். அக்கோரிக்கை ஏற்கப்பெறவில்லை எனினும் அவர் குறிப்பிட்டப் பணிகளில் ஜைன இலக்கியம் மற்றும் கல்வெட்டுத்தொடர்பான பணியை மட்டும் செய்யலாம் என ஆசியவியல் நிறுவனம் குறிப்பிட்டது(Taylor:1857:xvi)
இந்நிலையில் மெக்கன்சி தொகுப்புகளுக்கான விரிவான அட்டவணை தேவை பற்றியக் கருத்தாக்கம் எழுந்தது. அலெக்சாண்டர் ஜான்சன் வெளியிட்ட மெக்கன்சி கடிதத்திற்கான அறிமுகத்தில் “ஐரோப்பா வில் இருப்பவர்களுக்கு மெக்கன்சி தொகுப்பு பற்றி அறிய வில்சனின் அட்டவணை பெரிதும் பயன்படாது என்றும் இன்னும் விரிவான விளக்கமான அட்டவணை வேண்டுமென்றும்’ குறிப்பிட்டார். (The Journal of the Royal Assiatic Society of Great Britain and Ireland, Vol-I: 1834:333) இதே காலத்தில் சிறந்த கீழைத்தேய அறிஞராகவும் சமஸ்கிருதப் புலமையாளராகவும் விளங்கிய வில்லியம் டெய்லர் மெக்கன்சி சேகரிப்பில் தமிழில் உள்ள சில வரலாற்றுச் சுவடிகளை மொழிபெயர்த்தார். அவை, ‘oriental Historical Manuscripts in Tamil Language Translated with Annotationsஎனும் பெயரில் இரு தொகுதிகளாக 1835இல் வெளியானது. பொருண்மைத் தொடர் புடைய வரலாற்றுச் சுவடிகளை முதலில் தொகுத்து மொழி பெயர்ப் பதாக அமைகிறது இந்நூல். இதன் தொடர்ச்சியாக மெக்கன்சியின் சேகரிப்பை ஆய்வு செய்யவும் அதன் சமகாலத் தேவையை மதிப்பிடவும் வில்லியம் டெய்லர் பணிக்கப்பட்டார். அவரின் ஆறு அறிக்கைகள் “madrsa journal of literature and science” இதழில் தொடர்ந்து வெளிவந்தன. (இவை மீண்டும் ஆசியவியல் நிறுவன இதழிலும் வெளிவந்தன). இவ்வறிக்கைகளே 1838ஆம் ஆண்டு “Examination and Analysis of the Mackenzie Manuscripts” எனும் பெயரில் நூலாக வெளிவந்தது. மெக்கன்சியின் சேகரிப்பில் உள்ள வரலாற்றுச் சுவடிகளின் இன்றியமையாமை குறித்தும் இனி செய்யப்படவேண்டிய பணி குறித்தும் இந்நூலில் பலவிடங்களில் குறிப்பிட்டுள்ளார். ((Taylor:1838:2,13,16 Cetc).
பின்னர் 1845ஆம் ஆண்டு அரசின் அறிவுறுத்தலோடு துணைக்குழு ஒன்று இலக்கிய சங்கத்தின் வசமுள்ள சுவடிகளை அட்டவணைப் படுத்தும் பணிக்காக உருவாக்கப்பட்டது (MJLS, Vol-14:1847:97) அக்குழுவின் அறிக்கையும் இதழில் வெளியானது. அதற்குள் மெக்கன்சி சுவடிகளுடன் வேறு சில சேகரிப்புகளும் இணைந்து கொண்டன. அவை மொத்தம் 5751 தொகுதிகளைக் கொண்ட 5 சேகரிப்புகள் எனக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது (மேலது -99) அவை,
1.கிழக்கிந்திய அலுவலகத் தொகுப்பு (இவை லெய்டனின் சேகரிப்பு).
2.பிரௌன் அவர்களின் சேகரிப்பு (இவை இலக்கியச் சங்கத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன)
3. மெக்கன்சி சேகரிப்பு (வில்சனிடமிருந்து பெறப்பட்டவை)
4. சென்னை ஜார்ஜ் கோட்டை கல்லூரி நூலகச் சுவடிகள்
5. இலக்கியச் சங்கத்தின் தொகுப்புகள்.
அரசு மெக்கன்சி சுவடிகளுக்கு வில்சன் செய்த அட்டவணை போன்று இவ்வைந்து தொகுப்புகளுக்கும் அட்டவணை தயாரிக்க எண்ணி அப்பணியை வில்லியம் டெய்லரிடம் ஒப்படைத்தது. பல ஐரோப்பிய உள்ளூர் உதவியாளர்களின் ஒத்துழைப்போடு மூன்று தொகுதிகளாக இப்பணி நிறைவுற்றது. ‘‘A Catalogue Raesonne of oriental Manuscripts “எனும் பெயரில் மூன்று தொகுதிகளும் முறையே 1857, 1860, 1862 ஆகிய ஆண்டுகளில் வெளியாயின. இதில் மெக்கன்சியின் சுவடிகள் மூன்றாம் தொகுதியில் பதிவுசெய்யப்பட் டுள்ளது. 1837-38ஆம் ஆண்டுகளில் மெக்கன்சி சேகரிப்பை மதிப்பீடு செய்யும் போது சில சுவடிகள் மீண்டும் அவரால் படியெடுக்கப்பட்டு 5 தொகுதிகளாகத் தைக்கப்பட்டன. அதனை மீண்டும் இவ்வட்ட வணையில் இரண்டாம் வகைச் சுவடிகளாக (FamilyII) பதிவு செய்துள்ளார். (Tayor III: 1862:278)
டெய்லர் அட்டவணையின் அமைப்புச் சட்டகம் பெரும்பான் மையும் வில்சனின் முறையைப் பின்பற்றியுள்ளது. (பெரும்பிரிவு மொழி, உட்பிரிவு பொருண்மை). உள்ளீடாகச் சுவடியின் வகை (ஓலை/தாள்), தன்மை பற்றியும் நூலின் பொது வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவடிபற்றி இடம்பெறும் மதிப்பீடும் குறிப்புகளும் சுவடியில் உள்ள தரவுகளின் ஆங்கில மொழி பெயர்ப்பே.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் வரலாற்றுச் சுவடிகள் சிலவற் றுக்கு அவர் தந்துள்ள குறிப்புகள் தாம். அதன் அமைப்பு மட்டுமன்றி உட்பொருளை விளக்கமாக ஆங்கிலத்தில் தருகிறார். எனினும் வரலாற்றுச் சுவடிகளில் தொடர்புடைய செய்திகளைத் தரும் விதம் நிறைவு தருவதாக இல்லை. ஒரே பொருண்மை அல்லது ஒரே நிலப்பகுதி சார்ந்த தரவுகளைத் தொடர்ச்சியாகத் தரும்முறை அவரால் பின்பற்றப்படவில்லை. காட்டாகத் தொண்டை மண்டல வரலாறு தொடர்பான 17 சுவடிகள் மெக்கன்சி சேகரிப்பில் உள்ளன (சௌந்திரபாண்டியன்:1997). ஆனால் டெய்லரின் அட்டவணையில் இவை வரிசை யாகத் தரப்படவில்லை என்பதோடு இணைப்புக் குறிப்புகளும் இன்றியே இடம்பெற்றுள்ளன. வில்சனின் பணி யிலிருந்து டெய்லரின் பணி மாறுபட்டிருக்க வேண்டிய புள்ளி இது.
கீழ்த்திசைச் சுவடிகள் பற்றிய டெய்லரின் மொழிபெயர்ப்பு மற்றும் மெக்கன்சி சேகரிப்பு பற்றி செய்த மதிப்பீடு (1838) ஆகிய பணியுடன் இவ்வட்டவணைப் பணியை ஒப்பிட வேண்டிய தேவை உண்டு. இந்திய வரலாற்றிலிருந்து தக்கானத்தின் மொழி, சமயம், வரலாறு மாறுபடுவதை மெக்கன்சியின் சேகரிப்பு மூலமாகவே அறியமுடியும் என்று கருதிய டெய்லரின் முன்னிரண்டு பணிக்கும் முழு கீழ்த்திசைச் சுவடிகளையும் அட்டவணைப்படுத்திய இப்பணிக்குமான பாரதூரம் மிகவதிகம்.
தென்னக வரலாறு பற்றிய மெக்கன்சியின் தொகுப்பு மீதான நம்பகத்தன்மை பற்றிய ஐயப்பாடு அக்காலத்திலேயே எழுந்தது. வில்சனும் அத்தகைய சந்தேகத்தை எழுப்பினார். இத்தொகுப்புகள் தொடர்ந்து (குறிப்பாக வரலாற்றுச் சுவடிகளில்) வேலைசெய்த டெய்லர் இச்சுவடிகளின் நம்பகத்தன்மை பற்றிப் பேசாதது வியப்பானது.
டெய்லரின் அட்டவணை சுவடிகளைப் பற்றியது மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மெக்கன்சியின் பிற வரலாற்று ஆவணத் தொகுப்புகள் பற்றிய பதிவுகள் எதையும் இணைப்பு கருதிக்கூட அவர் செய்யவில்லை. குறைந்த பட்சம் ஐந்து தொகுப்புகளுக்கான ஒற்றுமை வேற்றுமை போன்றவற்றைக் கூட அவர் பதிவு செய்யவில்லை.
இவற்றை எல்லாம் தொகுத்து நோக்கும்போது வரலாறு எழுதியலுக்கான அறிவியல் நிலைப்பட்ட பல்பரிமாணப் பார்வை இவற்றைச் சேகரித்த மெக்கன்சிக்கு நிறையவே இருந்தது என்பதையும் ஆனால் இவற்றை ஒப்பிட்டு நோக்கி ஒரு கருத்துப் பார்வையை உருவாக்க அட்டவணை செய்தவர்கள் தவறிவிட்ட தையும் அறிய முடிகிறது. எனினும் முன்னர் குறிப்பிட்டது போல ஐரோப்பியர்கள் மெக்கன்சியின் தொகுப்பைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஓர் அட்டவணை வேண்டும் எனும் தேவையை டெய்லரின் பணி நிறைவுசெய்வதாக அமைந்தது.
தி.வை. மகாலிங்கம்
மெக்கன்சி சேகரிப்பில் அப்போது கிடைத்த அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்வதாகவும் இலக்கியச் சார்பான சுவடிகளுக்கு முன்னிலை அளிப்பதாகவும் அமைந்தது வில்சனின் அட்டவணை. மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளின் மேல் அதிக கவனம் செலுத்தி வெளிவந்த டெய்லரின் இரு ஆக்கங்களும் அச்சுவடிகள் ஒரு பகுதியாக இடம்பெறும் கீழ்த்திசைச் சுவடிகள் அட்டவணையும் அடுத்த கட்ட பார்வையை ஏற்படுத்தின. அதன் பின்னர் சில அட்டவணைகள் வெளிவந்தன எனினும் அவை அத்தொகுப்புகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவில்லை.
இதனிடையே 1932 இல் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு தென்னிந்திய மொழிகளில் உள்ள வரலாற்றுச் சுவடிகளுக்கான சுருக்கக் குறிப்பு ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கியது. எனினும் முற்றுப்பெறவில்லை. பின்னர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர், தி.வை.மகாலிங்கம் போன்றோர் இப் பணியைத் தொடர்ந்து செய்தனர் (தி.வை. மகாலிங்கம்: 2011: 2011:foreward) 1966இல் இவ்பணி மகாலிங்கம் அவர்களால் நிறைவுற்றது. 1972இல் புத்தகமாக வெளிவந்தது.
பெரும் வரலாற்றுப் பேராசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு, முடிக்கப்பெற்ற இவ்வட்டவணைப்பணி மெக்கன்சி சேகரிப்பு அதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் முயற்சியின் முதல் படியாக அமைந்தது. மெக்கன்சி சுவடிகள் சில அவ்வப்போது வெளிவந்தன எனினும் அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய பார்வை அவற்றில் பெருமளவில் இல்லை.
மெக்கன்சியின் சேகரிப்பில் உள்ள வரலாறு பற்றிய ஆவணங் களின் உள்ளடக்கம் வரலாற்றுத்தரவுகளைக் கொண்டதாயினும் பலதகவல்களும் புராணம் தொடர்புடையன என்பதைப் பலரும் பதிவு செய்துள்ளனர் (தி.வை.மகாலிங்கம்: 2011: XXV) இந்நிலையில் மகாலிங்கம் அவர்களின் அட்டவணைப்பணி மெக்கன்சி சேகரிப்பின் வரலாற்றுத் தேவையை உணர்த்துகிறது. முகவுரையில் அவர் குறிப்பிடும் செய்திகள் மிக இன்றியமையாதது. 16ஆம் நூற்றாண்டு முதல் தென்னிந்திய வரலாற்றை அறிவதற்கு மெக்கன்சி யின் தொகுப்புகள் மதிப்புவாய்ந்த ஆவணங்கள் என்றும் அவை அக்கால கட்ட அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்துப் புதுவெளிச்சம் பாய்ச்சுவன என்றும் விளக்குகிறார் (மேலது:ஜ்ஜ்ஸ்வீ). வட்டார வரலாற்றுச் சுவடிகளின் மூலமாகப் பாளையம் மற்றும் ஜமீன் வரலாறு பற்றி புதிதாக அறியும் விடயங்களையும் சிலாகித்துப் பேசியுள்ளார். (மேலது:ஜ்ஜ்ஸ்வீவீவீ)
வரலாறு தொடர்பான சுவடிகளை வட்டாரம் தொடர்பானது, புராணம் மற்றும் தொன்மவியல் தொடர்பானது, ஜைன சமயம், நாடகம், கதை பாடல் தொடர்பானது எனவும் வகைசெய்துள்ளார். அடுத்து மலையாள மொழி வரலாற்றுச் சுவடிகளையும் விளக்கி யுள்ளார். சுவடிகளை விளக்கும் போது அதன் பொதுத் தன்மையைக் காட்டிலும் அவர்தரும் வரலாற்றுச் செய்திகள் முக்கியமாக இருக்கிறது. சுவடிகளில் உள்ள தரவுகளின் உண்மைத்தன்மையை விளக்குவதோடு தவறான தகவல்களையும் மறுத்துள்ளார்.
இந்திய வரலாறு குறிப்பாகத் தென்னிந்திய வரலாறு பற்றிய நெட்டோட்டமான பார்வை என்பது தெளிவாக உருவான காலத்தில் எழுந்தது இவ்வட்டவணையின் சிறப்பு. ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியின் குறிப்பிட்ட மக்களின் வரலாற்றை எழுதுவதற்கு மெக்கன்சியின் தொகுப்புகள் எவ்வளவிற்குப் பயன்படும் என்ற ஐயம் பொதுவாக விதைக்கப்பட்ட நேரத்தில் வட்டாரச் சுவடிகளையும் அதனோடு தொடர்புடைய பிற சுவடிகளையும் தென்னிந்திய வரலாறு எழுதியலுக்கு எவ்வகையில் பயன்படுத்த முடியும் என்பதையும் அச்சேகரிப்பின் முக்கியத்துவத்தையும் தாங்கி வந்த கனமான அட்டவணை இது எனலாம்.
முடிவாக
மெக்கன்சியின் சேகரிப்பில் சுவடிகள் பெற்ற அளவிற்கான கவனம் மற்ற வகை சேகரிப்புகள் பெறவில்லை. வில்சனின் அட்டவணை மெக்கன்சி தொகுப்புகளை எண்ணிக்கை மற்றும் பெயரளவில் முழுமையாகப் பதிவு செய்தது. டெய்லரின் அட்டவணை சுவடிகளை மட்டும் விரிவாகப் பதிவு செய்தது. வரலாற்றுப் பார்வை ஏதுமின்றி அட்டவணைகளை உருவாக்கிய வில்சன் மற்றும் டெய்லர் ஆகியோர் அதன் உடனிகழ்வாகச் சில கட்டுரைகளை வெளியிட்டதோடு நின்றுவிட்டனர்.
மகாலிங்கத்தின் அட்டவணை முக்கியமான வரலாற்றுச் சுவடிகளை மட்டுமே விரிவாகப் பதிவு செய்தது. வில்சனுக்குப் பிறகு மெக்கன்சியின் சுவடியல்லாத தொகுப்புகள் பற்றிய கவனம் வெகுவாகக் குறைந்து விட்டது (தற்போது ஓவியம், வரைபடம் போன்றவை விளக்கப்பட்டு வருகின்றன.) வில்சனின் அட்டவணையாக்கம் தொடங்கி பெரிதும் வளர்ச்சி யடைந்திருக்க வேண்டிய அட்டவணையாக்கப் பணி அப்படியே நின்றுவிட்டது. அட்டவணை என்பது வெறும் தகவல்களைக் கொட்டுவது மட்டுமேயல்ல.அத்தொகுப்புகளின் நோக்கத்தை வகைதொகை செய்வதன் மூலம் அதனை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வது. ஒரு சமூகத்தை இயக்கத்தையே கூட அவை சரியாகச் செய்யப்படின் பிரதிபலிக்கும். எனவே தான் மெக்கன்சி தொகுப்பும் அடுத்த கட்டத்திற்கு நகராமலேயே நின்றுவிட்டது. மகாலிங்கம் முக்கியமான வரலாற்றுச் சுவடிகளுக்கு மட்டும் செய்த அட்டவணையாக்கம் போன்றதொரு பணியை மெக்கன்சியின் ஒட்டுமொத்த தொகுப்புகளும் இன்று வேண்டிநிற்கின்றன.
புராணிகம், தொன்மம் சார் கதையாடல்கள் இன்று மானுடவியல் ஆய்வில் முக்கியவிடம் பெறும்நிலையில் வரலாற்றாய்வாளரால் ஐயுறப்பெற்ற ‘நம்பகத்தன்மை’ என்பது இன்று மறுகேள்விக்கு உள்ளாகிறது. நுண்வரலாறு/அடித்தள வரலாறு குறித்தக் கருத்தாக்கம் வலுப்பெற்றுள்ள இக்காலத்தில் தமிழ்ச்சமூகம் குறித்த அத்தகைய வரலாற்றை எழுத மெக்கன்சியின் தொகுப்புகள் இன்றியமையாதவை. அவற்றை நிறைவேற்ற அத்தொகுப்புகளை அணுகுவதற்கு இன்னும் தெளிவான - விரிவான - தரமான அட்டவணைகள் தேவை.
பயன்பட்ட நூல்கள்
தமிழ்
1.சௌந்தரபாண்டியன், சு - தொண்டைமண்டல வரலாறுகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடு,1997.
ஆங்கிலம்
1. Mahalingam.T.V.:- Mackanzie Manuscripts, Summarises of Historical Manuscripts in the Mackanzie collection Vol-I, University of Madras, 2011.
2. Taylor.William:-
i. Oriental Historical Manuscripts in the Tamil Language. Translated with Annotations (Vol-I,II), Madras, 1835
ii. Examination and Analysis of the Mackenzie Manuscripts, Asiatic press, 1838.
iii. A catalogue Raisonne of Oriental Manuscripts, I(1857),II(1860),III (1862), Madras.
3. Trautmann.Thomas R:- The madras school of orientalism producing knowledge in Colonial South India, Oxford University Press,2011.
4. Wilson.H.H.:- Mackenzie collection A Descriptive Catalogue of the Oriental Manuscripts and other articles, Vol-I,II, Asiatic Society, 1828.
இதழ்கள்
1. Madras Journal of Literature and science society Vol-14,1847
2. The Journal of the Asiatic Society of Bengal, Vol-IX,1809.
3. The Journal of the Royal Asiatic Society of Great Britain and ireland, Vol-I, London, 1834
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.