ஒரு சமூகத்தின் வரலாறெழுதியல் என்பது அச்சமூகத்தைச் சார்ந்த பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சாத்தியப்படுவது. ஐரோப்பிய மரபில் வரலாறெழுதியல் என்பதும் அதற்கான சான்றுகளின் பதிவு, அவற்றின் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்தமைவுகள் ஆழமான செயல்பாட்டினைக் கொண்டிருந்தன. ஆனால் பல சமஸ்தானங்களாகச் சிதறுண்டு இருந்த இந்தியா என்கிற நிலப் பகுதியில் குறிப்பாகத் தென்னிந்தியச் சமூகமான தமிழகத்தில் இத்தகு வரலாறெழுதியல் அல்லது அது சார்ந்த தரவு சேகரிப்பு என்கிற கருத்தமைவோ அது குறித்த புரிதலோ வளமாக வளர்த்தெடுக்கப் படவில்லை. தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் கூட்டத்தின் ஆதி வரலாற்றை அறிய அதிக அளவில் புனைவுகள் மிகுந்த இலக்கியப் பிரதிகளே கிடைத்துள்ளன. அடுத்த நிலையில் அதிகாரச் செயல்பாடு களைப் பதிவு செய்கின்ற கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியன தொல்லியல் துறையின் அரிய முயற்சிகளால் தேடப்பட்டு தொகுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தொடக்ககாலத் தமிழ்ச்சமூக வரலாற்றை எழுதியவர்களின் கவனத்திற்கு அதிகம் ஆட்பட்டவை இலக்கியப்பிரதிகளும் அவற்றுள் இடம்பெற்றுள்ள சிற்சில வரலாற்றுச் செய்திகளுமே.
இந்தப் பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பாகப் பிரித்தானியர்களின் வரவிற்குப் பிறகு இந்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுள் ஒன்றாக அவர்கள் செய்த வரலாற்றுப் பதிவு முறைகளைக் குறிப்பிடலாம். வணிகம் என்பதைக் கடந்து ஆட்சிஅதிகாரத்தைக் கைப்பற்றுதல் அல்லது ஒரு சமூகத்தை அடிமைப்படுத்துதல் என்கிற நோக்கத்தின் அடிப்படை யில் இந்தியாவில் வாழுகின்ற ஒவ்வொரு தனிமனிதனைக் குறித்த தரவுகளும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவற்றை உள்வாங்கு வதன் மூலம் ஒரு சமூகத்தின் மீதான தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும் என்பது பிரித்தானியர்களின் அரசியல் தர்க்கம். சர்வாதிகாரி ஹிட்லரிடமும் இந்தப் பண்பினைக் காணமுடியும். அந்த அடிப்படையில் பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலாகப் பணியாற்றிய காலின் மெக்கன்சியால் (1754-1821) இந்தச் செயல்பாடு அதிக அளவில் முன்னெடுக்கப் பட்டது. அரசாங்கப் பணி என்பதைக் கடந்து அவரது முயற்சி வரலாறு மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்துவதாகவே உள்ளது. அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று பலவகைப்பட்டத் தரவு களைத் தேடித் தொகுத்துள்ளார். அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் (G.O.M.L) மெக்கன்சியின் தரவுகளால் இன்று வரலாற்று முக்கியத்துவம் அடைந்திருக்கின்றது. அவர் தொகுத்தளித்த தரவு களின் அடிப்படையில் இன்று புதியதொரு நவீன தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைக்க இயலும்.
அவர் தொகுத்துள்ள சுவடிகளுள் வம்சாவளி குறித்த சுவடிகள் இக்கட்டுரையில் கவனப்படுத்தப்படுகின்றன. வம்சாவளி என்பது வம்ச பரம்பரையைக் குறிக்கின்ற அட்டவணை என்று லெக்சிகன் அகராதி விளக்கம் தருகின்றது (VI:3628). ஒவ்வொரு தனிமனிதனிட மும் அவனது வம்ச வரலாற்றைக் கூறச் செய்து பதிவு செய்திருக் கின்ற முயற்சியாக இந்த வம்சாவளிச் சுவடிச் சேகரிப்பு அமைந்துள் ளது. தனது பரம்பரையைக் குறித்த மிகை மதிப்பீடுகள் மற்றும் ஒரு தொல்சமூக அதிகாரத்தோடு தன் மூதாதைகளைத் தொடர்புபடுத்துதல் ஆகிய பண்புகள் இந்த வம்சாவளிச் செய்தி சேகரிப்பில் இருப்பத னால் இதில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை என்பது கேள்விக் குள்ளாகிறது. ஆனால் முற்றுமுழுதாக அவற்றைப் புறக்கணிக்க இயலாது. மிகை மதிப்பீடுகளினிடையில் உண்மை வரலாறுகளும் இடம் பெற்றுள்ளன. அக்காலத்திய அரசியல் சூழ்நிலைகளை அவற்றுள்ளிருந்து பெறமுடியும். மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டுள்ள சுவடிகளுள் சுமார் 119 சுவடிகள் வம்சாவளி குறித்த சுவடிகளாக அமைந்துள்ளன. அவற்றை
- மரபாகப் பேசப்படுகின்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வம்சாவளிகள்
- பாளையப்பட்டுகளின் வம்சாவளிகள்
- ஜமீன்தாரி வம்சாவளிகள்
- நாயகர் வம்சாவளிகள்
- மராட்டியர்கள் வம்சாவளிகள்
- கவுண்டர் வம்சாவளிகள்
- தனிமனித வம்சாவளிகள்
என்று வசதி கருதி பகுக்க இயலும். இப்பகுப்பினுள் வரையறுக்க இயலாத வம்சாவளிச் சுவடிகளும் இத்தொகுப்புள் இடம்பெற்றுள் ளன. இவற்றுள் பாளையப்பட்டு, ஜமீன்தாரி ஆகியன அதிகாரக் குழுக்களைக் குறிக்கின்ற சொல்லாடல்கள்; நாயகர், கவுண்டர் ஆகியன சாதியைக் குறித்துநிற்கின்ற சொல்லாடல்கள் என்பதும் இங்கு எண்ணத்தக்கது. மேலும் இத்தொகுப்பினுள் பாளையப் பட்டுகள் மற்றும் நாயகர்கள் வம்சாவளிகளே அதிக அளவில் உள்ளன. அடுத்த நிலையில் ஜமீன்தாரி வம்சாவளிகளாக ஏறத்தாழ பத்து சுவடிகளுக்கு மேல் காணமுடிகின்றது. 16,17,18 ஆம் நூற்றாண் டுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், பண்பாட்டுக்கலப்புகளின் அடிப்படையில் இவற்றைப் புரிந்து கொள்ளலாம். திருமலை £யக்கன் காலத்தில் 72 பாளையப்பட்டுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஜமீன்தாரி என்பது இதற்கு அடுத்த நிலையில் அதிகாரத்தைக் குறிக்கின்ற சொல்லாடலாக இருந்துள்ளது. தமிழ்ச்சமூக வரலாறு எழுதுபவர்களால் இதுவரை இந்த மூன்று நூற்றாண்டுகள் குறித்த தரவுகள் யாவும் ஒரு வாய்பாட்டு அடிப்படையிலேயே முன்வைக்கப் பட்டுள்ளன. பேரரசுகளின் சிதைவைத் தொடர்ந்த சிற்றரசர்கள், நாயக்க மன்னர்கள், பாளையக்காரர்களின் காலமாகவே இந் நூற்றாண்டுகளை அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். அவர்களுள்ளும் குறிப்பிடத்தக்க சில ஆளுமைகளின் (திருமலை நாயக்கன், மங்கம்மா, பாளையக்காரர்களுள் கட்டபொம்மன் ஆகியோர்) தனிநிலைப் பண்புகளையே பதிவுசெய்துள்ளனர். ஆனால் அந் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களின் மனோநிலையை, அவர்களது நம்பிக்கை சார்ந்த சில நிகழ்வுகளை, பண்பாட்டு மாற்றங்களை அறிந்து கொள்ள வம்சாவளிச் சுவடிகள் துணைபுரிகின்றன.
மேலும் புலம்பெயர்ந்து வந்த மக்களின் வரலாறு களாகவும் வம்சாவளிச் சுவடிகள் உள்ளன. பூர்வ இடத்தை விடுத்துத் தவிர்க்க முடியாத காரணங்களால் புலம்பெயர்ந்து வேறுவேறு ஊர்களில் வாழ்கின்ற மக்கள் தங்களின் புலப்பெயர்வுக்கான காரணங்களை யும் இப்பொழுது நிலைபெற்றுள்ள பகுதியினைக் குறித்தும் இதில் பதிவுசெய்துள்ளதும் கவனத்திற் குரியது. இந்த வம்சாவளிச் சுவடிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தோற்றம் மற்றும் தொடர்ச்சி குறித்த சமகாலத்திய மனிதர்களின் நம்பிக்கை சார்ந்து உருவாக்கப்பட்ட மதிப்பீடுகள். மானுடவியல் அடிப்படையில் இந்த வம்சவாளிச் சுவடிகள் தருகின்ற செய்திகளைப் பகுத்தாராய்வதன் வழி ஒரு சமூகத்தின் வளர்நிலைகளை அடையாளப்படுத்த முடியும்.
இவை மேற்குறித்தபடி அதிகார அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் வேறுபட்டிருந்தாலும் தொல்சமூகம் பற்றிய இவற்றின் கருத்து நிலைகளில் சில பொதுத்தன்மைகளையும் காணமுடிகின்றது. பல வம்சாவளிச் சுவடிகளில் ராயர் சமஸ்தானம் குறித்த குறிப்புகள் வந்துள்ளன. அச்சுவடிகள் எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் கொண்டு அவர்கள் குறிப்பிட் டுள்ள கால இடைவெளியைக் கவனிக்கும் போது விசயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் சமஸ்தானத்தை அவர்கள் குறித்துள்ளனர் என்பது புலனாகின்றது. பெரும்பாலான பாளையப்பட்டுகளும் ஜமீன்தார்களும் டில்லியிலிருந்து விசயநகரத்திற்குப் புலம் பெயர்ந்துவந்து பின்னர் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் குடிஅமர்ந்துள்ளனர். சில வம்சாவளிகள் கொங்கு வேளாளர்களின் புலம் பெயர்வையும் சுட்டியுள்ளது. ஆனால் அவர்கள் தென்தமிழகத்துக்குள்ளேயே புலம்பெயர்ந்து குடிஅமர்ந் துள்ளனர்.
ஒவ்வொரு வம்சாவளிக் குறிப்பும் தத்தமது மூதாதையர்களின் வீரத்தை முதன்மைப்படுத்தியே தொடங்குகின்றன. அவர்கள் அன்றையக் காலகட்டத்தில் நிலவிய ஆட்சி அதிகாரத்தோடு கொண் டிருந்த உறவுகள், அவர்கள் பெற்ற சன்மானங்கள், விருதுகள் ஆகியன விரிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக “ஆயக்குடி ஜமீன்தார் கொண்டம நாயக்கர் வம்சாவளி”யில் ராயர் சமஸ்தானத்தில் வெள்ளைப் பக்றடால், சூலடால், குதிரைக்கி முன்செல்லி பின்செல்லி, அண்டத்துமணி, கொலுவல்லயத்தில் ஒத்தைமணிக் கட்டின வாலா, வீரகண்டாமணி, சிங்க கொடி, மகற கொடி, அனுமகொடி, கெறுட கொடி, யியட்டி, சாமுத்திறொக வெண்டயம், குதிரைக்கி முன்கால் சிலம்பு முத்துமாலை முத்துதுறாயி டிக்கேமபற, செவத்தப்பட்டு சுறிட்டி, வெள்ளயப் பட்டு சுறிட்டி ஆகியவற்றைத் தங்களது மூதாதையர்கள் பெற்றுள் ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது (D.2851:38).
மேலும் வீரம் என்பது போர்நிலையில் மட்டுமன்றி புலி, சிங்கம் முதலிய காட்டு மிருகங்களைக் கொன்று மக்களைக் காத்தல் என்கிற நிலையிலும் சில வம்சாவளிகள் பதிவு செய்துள்ளன. “ஆவுடையார் புரம் பாளையக்காரர் வம்சாவளி”யில் மதுரைக்கு மேற்கே பதினாறடி வேங்கைப்புலியைத் தனித்த ஆளாகச் சென்று கொன்றதால் பாண்டியன் மனமகிழ்ந்து “வரகுணராம சிந்தாமணி புலித்தேவன்” என்கிற பட்டத்தைத் தனது மூதாதையர்களுள் ஒருவருக்கு அளித்த தாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ( D.3134:57) இவ்வாறு மூதாதையர் களின் வீரம் என்பது முதன்மை நிலையில் கருதப்பட்டுள்ளதை உணரமுடிகின்றது.
அடுத்த நிலையில் சில வம்சாவளிகளில் தெய்வத்தன்மை என்பதும் தெய்வத்தின் அருள் என்பதும் முதன்மைப்பட்டு போகின்றது. பூர்வத்தில் குந்தி தேசத்தில் கிராமக் குடியிருப்புகளாக இருந்து பஞ்சம் பிழைக்க காவேரிக்குத் தெற்கே தேவர் மலைக்குப் புலம்பெயர்ந்து வந்த “ஆண்டிப்பட்டி பாளையக்காரருடைய வம்சாவளி”யில் அவர்களது குடியமர்த்தலுக்குச் (Settlement)) சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து வந்த தருணத் தில் அவர்கள் வைத்திருந்த பாற்குடமானது தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சோதனை செய்து பார்த்த போது நரசிங்கசாமி இருந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவர்கள் அவ்விடத்தில் பூசை செய்து நிலைபெற்றதாகவும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.( D.3138:41) அவ்வாறே “ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன்” வம்சாவளியில் குறிப்பிட்டுள்ள பூர்வசரித்திரம்: சோழதேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளர்களாக இருந்த நற்குடி நாற்பத்தெண்ணாயிரம், பசுங்குடி பன்னீராயிரம் ஆக அறுபதினாயிரம் கோத்திரங்களும் சேரன் சோழனுடன் கொண்ட மணஉறவினால் சேரநாட்டுக்குப் புலம்பெயர்ந்தனர்.
சேரனுக்குக் கொங்கணன் என்கிற பெயரும் வழக்கத்திலிருந்ததால் புலம் பெயர்ந்து வந்த வேளாளர்கள் கொங்குவேளாளர்கள் என்று அழைக் கப்பட்டனர். அவர்கள் தங்களுக்குள் மணமுடிக்க முயன்றபோது பெண் வீட்டில் அரிசிஉணவு போடாமல் இவர்களுக்கு அரிசி குறித்து ஒன்றும் தெரியாது என்று ஏளனமாகப் பேசி பச்சரிசியில் சமையல் செய்துள்ளனர். இதனை அறிந்த இக்கொங்கு வேளாளர்கள் நெல் விளையும்படி நீர் பாங்கு உண்டுபண்ணிய பிறகு திருமணம் செய்கிறோம் என்று சபதம் செய்தனர். பின்னர், தங்களது இஷ்ட தெய்வமான சிவனைப் பூசை செய்ய சர்ப்பம் ஒன்று வந்து பவானிஆற்றில் அணைகட்ட வழிகாண்பித்து, அதைத் தொடர்ந்து வாய்க்கால் வெட்டவும் வழிகாட்டியுள்ளது. அவ்வாறு அணை கட்டியவர் காலிங்கராயக் கவுண்டர் என்று அந்த வம்சாவளியில் பூர்வசரித்திரம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது (D.3044:28). கவுண்டர்களின் வம்சாவளியில் சோழநாட்டிலிருந்து சேரநாட் டிற்குப் புலம்பெயர்ந்து கொங்குவேளாளர் என்று பெயர்பெற்ற வரலாறு தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “காங்கையம் பல்லவராய கவுண்டன் வம்சாவளி”யிலும் இக்குறிப்பைக் காணமுடிகின்றது. இப்படித் தெய்வத்தின் அருள் என்பதும் வம்சாவளிச் சுவடியில் முக்கிய பங்கினை வகித்துள்ளது.
அதிலும் ஜமீன்தாரி வம்சாவளிகளில் ஒருபடி மேல்சென்று தங்களது மூதாதைகள் பற்றிக் குறித்துள்ளனர். பூர்வ ஜென்மத்தில் துவாபர யுகத்தில் ரிஷிகளால் சபிக்கப்பட்டு பன்றிகளாக இருந்து, பின்னர் மீனாட்சியம்மையின் முலைப்பால் உண்டு இந்த ஜென்மத்தில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் எனது முன்னோர்கள் என்ற பதிவை “அளகாபுரி ஜமீன்தார்கள் வம்சாவளி”யில் காண முடிகின்றது.
வீரம் மற்றும் தெய்வ அருள் இவற்றைத் தொடர்ந்து தங்களுக் குள்ளான சாதி இறுக்கம் வம்சாவளி குறிப்புகளுள் உள்ளதைக் காணமுடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த சில சமூகத்தினர் அதற்காக முன்வைக்கின்ற காரணத்தில் முதன்மையானதாக இருப்பது அரசர் பெண்கேட்டு அதனைச் சாதி இறுக்கம் காரணமாக மறுக்கின்ற செயல்பாடு. குறிப்பாகப் பாளையப்பட்டுகளிடம் இப்பண்பை அதிகம் காணலாம். அதுவரை அந்த அரசாங்கத்திற்கு உண்மையான சேவகர்களாக இருந்து பல விருதுகளைப் பெற்று இருந்தாலும் திருமணம், உறவு எனும்போது சாதி இறுக்கம் முதன்மைப்பட்டுப் போகின்றது என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. “ஆயக்குடி ஜமீன்தார் கொண்டம நாயக்கர் வம்சாவளி”யில் உள்ள குறிப்பினைக் காணும்போது இது உறுதிப்படும். டில்லி பாதுஷா விடம் சேவகராக இருந்து, அவர் பொருட்டு மராட்டியர்களான சின்ன பந்து, பெரிய பந்துவைப் போரிட்டுத் தோற்கடித்துப் பல விருது களைப் பெற்றவர் இவர்களது மூதாதை பெரிஒபள கொண்டமனாயக்கர். அவர்களுடைய குடும்பத்தில் உள்ள பெண்ணைக் கண்டு பாதுஷா மணம் செய்துகொள்ளக் கேட்கும்போது அதற்கு அவர்கள் உடன்படவில்லை.
பாதுஷாவின் மிரட்டலைக்கண்டு குடும்பத் துடன் புலம்பெயர்ந்து ராயர் சமஸ்தானத்திற்கு வந்துவிட்டனர். இவர்களது சாதிக் கட்டுப்பாட்டைக் கண்ட ராயர் இவர்களுக்குப் பதவிகள் கொடுத்து கௌரவித்ததாகவும் அது முதற்கொண்டு அங்கேயே குடிஅமைந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நாயகர் வம்சாவளிகளில் இந்த நிகழ்வைக் காணமுடியும். சல்லிப்பட்டி பாளையக்காரன் எரம நாய்க்கன் வமிசாவளியில் இச்செய்தி “அக்காலத்துக்கு டில்லிபாஷ்ஹா கம்பள சாதியில் பெண்வா(க)ங்கிக் கொள்ள வேணுமென்றுனினைச்து யிறுந்தபடியனாலே துலுக்கனுக்குப் பெண் குடுக்கமாட்டாமல் கம்பளசாதி அனஓறும் யேககூட்டமாஇ பிறப்பட்டு பறராஷ்ட்டறத்துக்கு போஇ சேறவேணு மென்று...”(D.3130:1) என்றவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து மாறுபட்ட சில வம்சாவளிகளையும் காணமுடி கின்றது. உதாரணத்திற்கு மறுதுரைக் கிராம மடாதிபதி ஒருவரால் எழுதப்பட்ட “மருதுறை ஆலால சுந்தரர் வம்சாவளி”யில் தன்னைத் தேவாரம் பாடிய சுந்தரரின் வம்சாவளி என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதைக் காணமுடிகின்றது. முழுக்க முழுக்க நடை முறைக்குச் சற்றும் ஒவ்வாத நிகழ்ச்சிகளைக் கொண்ட குறிப்பாக இந்த வம்சாவளி குறிப்பு அமைந்துள்ளது (D.3135). சாதாரணமாக ஒரு ஆதிக்கச் சாதியினரால் எழுதப்படும் வம்சாவளிக்கும் பிராமணர் போன்ற மேல்சாதியினரால் எழுதப்படும் வம்சாவளிக்குமான வேறுபாட்டை இதுபோன்ற வம்சாவளிகளை வாசிக்கும் போது உணரமுடிகின்றது. 'முள்ளிப்பாடிக் கிராமம் ரங்கராஜர் வம்சாவளி'யில் தனது பூர்வகுடிகள் ராயர் சமஸ்தானத்தில் உத்தியோகம் பண்ணிக் கொண்டிருந்ததையும் பின்னர் தெற்கு ராச்சியத்தில் கர்நாடக சிம்மாசனம் நேமித்து விசுவநாத நாயக்கர் சமஸ்தானத்தில் உத்தியோகம் பார்த்ததையும் அவர்களுடைய வீட்டுப்பேர் தம்மிடி பல்லவாரு என்பதையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“நாங்கள் நியோக பிராம்மணரா கையினாலேயும், உத்தியோகம் பண்ணிவந்த படியினாலேயும் யிப்பவும் கோவென்று சொல்லப்படுகிறது." (R.8180:67) என்ற குறிப்பு கவனத்திற்குரியது. “கோ” என்பது அரசனைக் குறிக்கின்ற சொல். அரசருக்குச் சமமாக மக்களால் மதிக்கப்பட்ட குடியாகத் தங்களைக் கூறியுள்ளனர். பிற பாளையப் பட்டு, ஜமீன்தாரி வம்சாவளிகளில் காணப்படுகின்ற அச்சத்தையோ, மரியாதையையோ இவர்களது வம்சாவளிகளில் காணமுடிய வில்லை. மிகத் தெளிவாகத் தேவையான செய்திகளை மட்டும் தெரிவித்துவிட்டு தற்சமயம் சர்க்கார் கட்டளைப்படிக்கி நிருதி செலுத்திக் கொண்டு சுரோத்திரியம் அனுபவித்துக் கொண்டிருப்ப தாகக் குறிக்கப்பட்டுள்ளது. கம்பெனியாரைப் பற்றிய மதிப்பீடு களோ, அவர்கள் மீதான பற்றுதலோ எங்கும் குறிப்பிடப்பட வில்லை. 1816ஆம் ஆண்டில் எழுதப்பட்ட வம்சாவளிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மேற்குறித்த இரண்டு வம்சாவளிகளும் மாறுபட்டுள்ளதை உணரமுடிகின்றது.
அமைப்பு அடிப்படையில் மாறுபட்டதாக “வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி” (D.3809:29) உள்ளது. ஒருவரால் எழுதப்பட்ட அந்த வம்சாவளி குறிப்பானது வெள்ளி கந்தப்பய்யரால் கவித் துவம் பண்ணப்பட்டதாகக் குறிப்பொன்று உள்ளது. கவித்துவம் செய்யப்பட்ட அந்த வம்சாவளி மெய்கீர்த்திகளை நினைவுபடுத்து வதாக உள்ளது. ருலாமல்லிகான் சாயபுவின் குமாரர்கள் நால்வர். மூத்தவன் பாக்கறல்லிகான், இண்டாமவன் தோஷ்த்தறல்லி கான், மூன்றாமவன் சாதகல்லி, நான்காமவன் அகுபேர்முகமதலி இவர்கள் ஒவ்வொருவரும் அரசாண்ட விதமும் அவர்களது மைந்தர்கள் குறித்த விவரமும் ஒரு கதைப்பாடல் வடிவில் இவ்வம்சாவளியில் குறிக்கப்பட்டுள்ளது.
இப்படித் தத்தமது மூதாதையர்கள் குறித்து மிகைமதிப்பீடுகளின் அடிப்படையிலும் தங்களது பூர்வ குடிகளை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தங்களுக்குரிய சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் போக்குடன் இவ் வம்சாவளி குறிப்புகள் செயல்பட்டுள்ளதை உணரமுடி கின்றது. ஆனால் இவற்றில் அக்குறிப்புகளை அளித்தோர் தங்களைப் பற்றிய சில செய்திகளையும் இறுதியில் இணைத்துள்ளனர். அச்செய்திகளை அந் நூற்றாண்டின் வரலாறாக நம்மால் இனங்காண முடியும். உதாரணமாக, ஆண்டிப்பட்டி பாளையக்காரர் பொம்ம நாயக்கன் வம்சாவளியின் இறுதியில் இடம்பெற்றுள்ள பகுதி,
“என் பாளையப்பட்டுக்குச் சேர்ந்த நாற்பாங்கு எல்லைக்குள் பட்ட பூமியில் வகையறா 248பா. தீர்வை மேற்படி 508 புறு மேற்படி அந்தனேலம் இராமகிரி பாளையப்பட்டு 'சாமைநாயக்கன்' எல்லைத் தகராறு செய்து கட்டிக்கொண்டு இருக்கிறான். (கும்பினி) கம்பெனி சர்க்காரிலே என் மானம் மரியாதைகள் அறிஞ்ச காப்பாற்றி இரக்ஷிக்க வேண்டிக் கடுப்பண்ணின படிக்கு நடந்துவரக் காத்து இருக்கிறேன். ஆயிரத்து எண்ணூற்று ஏழாம் வருஷம் ஆகஸ்டு மாதம் முப்பதாம் தேதியில் ஆண்டிப்பட்டி பாளையக்காரர் - பெரியதம்பி பொம்மைய நாயக்கன் ஒப்பிதம்” (D.3138:47).
1807ஆம் ஆண்டு பாளையப்பட்டுகளுக்கு இடையில் இருந்த எல்லைத் தகராற்றை இக்குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளமுடி கின்றது. கிழக்கிந்தியக் கம்பெனிகளிடம் இவர்கள் கொண்டிருந்த அபிமானத்தையும் பணிவையும் புரிந்துகொள்ள இந்த வம்சாவளிச் சுவடிகள் உதவுகின்றன. மேலும் விண்ணப்ப மனுக்களாகவும் வம்சாவளி குறிப்புகள் செயல்பட்டிருப்பதை உணர முடிகின்றது. சில வம்சாவளிகளில் தங்களால் வரி செலுத்தமுடியாத நிலையில் இருப்பதை வம்சாவளி குறிப்பு தந்தவர்கள் கூறியுள்ளனர். கொப்பையனாய்க்கர் ஜமீன்தாரி வம்சாவளியில் இடம்பெற்றுள்ள குறிப்பு ஒன்று,
“அந்தத் தெய்வதானம் பாளையப்பட்டு பூமிக்கி துரைத்தனத்துக்கு றாமசாமினாய்க்கரை பட்டங்கட்டி வைத்து மக்களூட்டு துரைய வர்கள் நாளையில் தெய்வதானம் பாளையப்பட்டுக்கு வருஷம் 1க்கு... 2100புதீர்ப்பு செய்தார்கள். அதே மேரைக்கிச் சாதாருண வருஷம்முதல் றாட்சத வருஷம் வரைக்கும் காணிக்கையும் கொடுத்துக் கொண்டு பாளையப்பட்டை அனுபவித்து வருகையில் உஞ்சிதுரை னாளையில் துவாசி வாசுதேவப்பிள்ளையிடத்தில் யெழுமடைனாய்க்கர் குமாரன் நல்லதாதுனாய்க்கன் மித்திரமாய் 1005 ள யாவினை குடுக்கிறோமென்று சொன்னபடியினாலே யென்னிட மாக இருந்த பூமியை வலுவந்தத்திலே அவனுக்கு தெய்வ தானத்தைக் கட்டிக் குடுத்தார்கள். பின்னும்யென் சொந்தப் பாளையப் பட்டையும் சப்தி பண்ணினார்கள். அப்பால் ஆற்டீசுதுரையவர்கள் நாளையில் நளவருடம் யென்னை வரவளைத்து உன் பாளையப்பட்டு கும்பினியார் சப்தி பண்ணியிருப்பதால் மாதம் 1க்கு 80ரூபாய்ச்சம்பளம் செய்திருக்கிறோமென்று சொல்லி நள வருஷ முதல் றுதோக்காரி வருஷம் வரைக்கும் சம்பளம் பத்தினேன். ரத்தா வருடம் சாரீசு பெரீசு துரையவர்கள் யென்னை வரவளைத்து யென் பாளையப்பட்டு சப்தியா யிருந்ததையும்விட்டு குடுத்து யென்க்கு கும்பினியிலிருந்து சிறிது பணமுங் குடுத்து வகையறுப்பு பூவீ 1380 268 ஆக தீர்ப்பு செய்து அனுப்பினார். அப்படியே குறோதன வருஷம் வரைக்கும் செலுத்தினேன். ஆனால் பைமேஷ் தீர்வை முன் பாரமாக விளுந்தபடியினாலே குடீயள் 10 வருஷம்தீற்பு அதனங் குடுத்து கைமெலிந்து ஒடுங்கி போய்விட்டபடியினாலே பணம் நிலுவை யாச்சுது. அதே மேரைக்கி சப்தி பண்ணி அமீனா நேமுகஞ் செய்து கொண்டார். 9 வருஷம் கும்பினியில் சப்தியா யிருப்பதால் வருஷா வருஷம்லுக்குசானுக்கு உள்ளாய்ப் போறதல்லாமல் அடியேன் பாக்கி தாரனாய்ப் போனேன் - ஆனதால் அடியேன் பேரில் கும்பினியார் தயவு செய்து காப்பாத்த வேண்டியது” (D.3847:120).
இவர்களது மொழிநடையும் வம்சாவளி குறிப்புகளை எழுதிய விதமும் கிழக்கிந்திய கம்பெனியிடம் இவர்கள் வைத்திருந்த அபிமானத்தையும் அச்சத்தையும் உணர்த்தி நிற்கின்றது. மேலும், ஒவ்வொரு ஆட்சியாளரிடமும் தங்களது மூதாதையர்கள் எப்படி அபிமானத்தைப் பெற்று வாழ்ந்திருந்தனர் என்பதைக் குறித்து விட்டு இப்பொழுது கிழக்கிந்திய கம்பெனியரிடமும் அதே அபிமானத் தோடு இருந்து வருகின்ற முறைமையையும் அல்லது அபிமானத் தைப் பெறவிரும்புகின்ற மனோநிலையையும் வம்சாவளி குறிப்புகளை வாசிக்கும் போது உணரமுடிகின்றது. தங்களது ஒருதலைமுறை முன்னோர் உதாரணமாகத் தந்தை அல்லது அவர் சார்ந்த உறவினர்கள் கம்பெனியாரால் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்களையும் சந்தேகத்தின் பரில் தான் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தையும் குறித்துள்ள பகுதிகளைப் பார்க்கும்போது அதில் எந்தவித கோபமோ வருத்தமோ வெளிப்படவில்லை. மாறாக, தன்னுடைய நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி யிருப்பதையும் தன்நிலை மீதான கழிவிரக்கத்தையுமே காணமுடி கின்றது.
“சல்லிப்பட்டி எரம நாய்க்கன் வமிசாவளி”யின் இறுதியில் இடம் பெற்றுள்ள குறிப்பு“யென்தேப்பனாற் பெறிய நல்லமுத்து நாய்க்கர் நாளையில் அறமனை யாற் யிட்ட கட்டளைப்படிக்கு நிகுதி பணம் செலுத்தி விச்சுக் கொண்டுவறும் நாளயில் மஹாராஜ ராஜ ஸ்ரீ கும்பினி சற்காறுலே சல்லிப்பட்டி பாளையகறுக்குக்கு பத்தில் மூணுசாறி நிகுதி செய்து யிறுநத சமயத்தில் சறுக்காறுலே றுசுவுயில்லாமல் பாறாறியான படியனாலே நெகமத்துலே யிறுக்கப்பட்டவனை சறுகாறுலே கண்டு பிடிச்சு சறுகாறுக்கு குத்தவாளியான படியனாலே கும்பிணி சறுகாறுக்கு ரொம்பவும் குத்தவாளியாஇ தெயிவகதி அடைஞ்சான்.மஹா ராச ராச ஸ்ரீ கும்பினி சறுகாறுலே யென்னை யும் யென்னை சேற்ந்த செனத்தையும் திண்டுக்கல் முதலானயிடங்களுலே கைதுலே வச்சுயிறுந்து தொரைகள் தயவு செயிது யெனக்கும் யென்னைச் சேர்ந்த சனத்துக்கு மாசம் 1க்கு படி வீறாயன் யிறுவத்தினாலு பொன் நிகுதி செயிது வூறுலே போஇ யிறுக்கச் சொல்லி உத்திரவு செய்த படியனாலே அறமனையாற் கட்டளையிட்ட படிக்கு மாசம் மாசம் படியும் பத்திக்கொண்டுயிறுக்குரேன்.
நான் பதினாலு வயசு சிறுபுள்ளையஇ யென்னைச் சேர்ந்த குஞ்ச குளந்தை சயிதமாஇ பறாறியா இ போஇ யிருந்து வந்து செனத் துடனே னாற்பது சனத்துடனே தயவு செயிது யிருக்குரபடியிலே சீவனம் பண்ணி கொண்டு சல்லிப்பட்டிக்கு சேந்த தொண்டைமான் புத்தூரு கிறாமத்திலே ஆசறுலே யிறுந்து. மஹா றாஜ ஸ்ரீ கும்பிணி துரைகள் தயவுக்குப் பாத்திரனாயி காத்துக் கொண்டு யிறுக்கிரேன். யெற்றமனாயக்க ருசு” (D.3130:7).
இப்படி செய்யாத தவறுக்குத் தவறுதலாகத் தண்டனை வழங்கப்பட்டு இறந்து போன தனது தந்தையைக் குறித்த செய்திகள் இடம்பெறுகின்ற வேளையில் கம்பெனி சர்க்காருக்கு விரோதமாக நடந்து கொண்ட தனது தந்தை குறித்த எதிர்மறையான கருத்துகளைப் பதிவு செய்கின்ற வம்சாவளிக் குறிப்பையும் காணமுடிகின்றது. 'சிஞ்சுவாடி சம்பே நாய்க்கர்' வம்சாவளியில் “யென் தோப்பனாறானவன் சின்ன பொம்மனாய்க்கன் மஹாராச ராச கும்பினி துரையவற்கள் சறுக்காறுக்கு மிகவும்குத்தவாளியாஇ நடந்து கொண்டபடி யனாலேயும் பறாறியாஇ சறுக்காறுலே கப்பட்ட படியனாலேமிகவும் குத்தவாளியான படியனாலே கும்பினியாற் உத்திரவுபடிக்கு தெயிவகதியானான்.
நாளது ஆசறுலே யிறுக்கப்பட்ட முத்துமலை யாண்டி சம்பே னாயக்கன் நானும் என்னைச் சேந்த சனமும் திண்டுக்கல் முதலான யிடங்களிலே கைதுலேயிருந்து மகா - ராச ராச ஸ்ரீ காரோ சாயபு துரையவற்கள் கடாட்சம் செயிது மாசம் 1க்கு மேற்படி வீறாயன் பணம் 13 பணம் ரு பணம் உத்திரவு செயிது ஊறுலே போஇ இருக்கச் சொல்லி உத்திரவு செயிதபடியனாலே நிக்குதிபடிக்கு செலுத்தி கொண்டு ஆசறுலே யென்னை சேந்த செனம் பதனஞ்சு சனத்துடனே மகா - ராச- ராச ஸ்ரீ துரையவர்கள் கட்டுபண்ணின படியிலே சீவனம் பண்ணிக் கொண்டு சஞ்சுவாடி குடியிறுப்புக்காரனாயி கும்பினியார் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு யிறுக்குரேன். சம்பே நாயக்கன் றசுவு (D.3849:143).
தனது தந்தை மற்றும் உறவினர்கள் கொல்லப்பட்டதையும் தான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதையும் எதார்த்தமாக வும் எந்தவொரு வருத்தமும் கோபமும் இன்றிப் பதிவு செய் துள்ளதை உணரமுடிகின்றது. பாளையக்காரர்கள் என்பவர்களை இதுவரைப் பதிவு செய்துள்ள தமிழக வரலாற்று நூல்கள் யாவும் மறக்குடியினர், வெள்ளையரை எதிர்த்த போராட்ட வீரர்கள் என்றே கட்டமைத்துள்ளன. ஆனால் ஆரம்பகாலத்தில் 1816இல் தொடங்கி உள்ள பாளையப்பட்டுக்கள் தங்களைக் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவாளர்களாகவும் அவர்களுக்கு அடங்கி நடக்கின்ற குடிகளாகவும் வெளிப்படுத்திக் கொள்ளவே விரும்பியிருக்கின்றனர் என்பதை வம்சாவளி குறிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. அப்படிப் பட்ட பாளையப்பட்டில் தோன்றிய தொன்ம வடிவமே வீரபாண்டிய கட்டபொம்மன் என்பதையும் இத்தருணத்தில் நினைவிற்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் பாளையப்பட்டுகள் குறித்த வரலாற்றை மீள்வாசிப்பு செய்யவேண்டிய தேவையும் இங்கு ஏற்படுகிறது.
‘கோட்டைக்காடு ஒடுக்கம் கறுப்பதம்புறான் வம்சாவளி’யில் புதிய வேண்டுகோள் ஒன்றையும் காணமுடி கின்றது. வைதிக மரபின் அடிப்படையில் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதைத் தனது மூதாதையான ரெகுனாத பண்டிதர் ஒரு கழுவாயின் பொருட்டு நடத்திவந்ததைக் குறித்துள்ளது இவ்வம்சாவழி. அவர் இறந்ததும் அவருக்குச் சமாதி எழுப்பி ஒரு சாமியாரைக் கொண்டு நித்திய பூசனைகள் செய்துள்ளனர். அந்தப் பளனிச்சாமியார் விபூதி கொடுத்தால் சகல வியாதிகளும் சொஸ்த மாகும் என்கிற நம்பிக்கையும் அவர்களிடையே இருந்துள்ளது. அந்தச் சாமியாரும் சமாதியானபின் இரண்டு சமாதிகளுக்கும் சுப்ரமணிய சுவாமி, விநாயகர், பைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் நித்திய பூசனைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர். ஆனால் பரதேசிகளுக்கு அன்னமிடுதல் முன் நடந்த அளவிற்கு நடைபெற வில்லை என்பதைக் குறித்துவிட்டு அதற்கான காரணங்களைக் கூறியுள்ளனர்.
.....வந்த பரதேசியளுக்கு அன்னங்குடுத்து வருகிறது. முன் அடைந்துபோன பெரியோர்களுக்கு அவரவர் அடைந்த தினத்தில் குருபூசை செய்து அன்னதானம் நடந்து வருகுது. இந்த ஸ்தலத்தில் மேலெளுதிய மானுபத்தில் இப்போ பாதி மானுபம் நடந்து வருது. யேதுனாலே யெண்ணால் ஸ்ரீ ஆற்டீசு துரையவர்கள் னாளையில் பைமேஷ் முன்னுக்கு கிறாமத்தார் பயந்து பொருப்பு வருமென்று பாதிமானுபம் யெளுதி விச்சார்கள். (அதியனூத்து பாலகிருஷ்ணய்யா கையெழுத்து. தெலுங்கில் உள்ளது.) பாதிமானுபங் கட்டுப்பட்டு போச்சுது. நீக்கிக் கொஞ்சம் மானுபம் நடந்து வருகுது. கும்பினியாரவர்கள் தயவுசெய்து பாளையப்படி மானுபங்கள் நடத்தும்படியாக உத்திரவு குடுத்தால் பறதேசிகளுக்கு அன்னதானம் நடந்து வரும். கும்பினியாரவர்கள் எங்கள்மேல் கிறுபை செய்யும் படியாய் தயவு செய்து ரட்சிக்க வேண்டியது. இப்போ நடந்து வருகிறது சற்காரிலே புஞ்சை குளி.... 1000 பணம் நஞ்சை குளி 21/4 குழி இவளவும் நடந்து வருகுது.( D.3849)
1816ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த வம்சாவளிச் சுவடிமூலம் அக்காலத்தில் சமாதி வழிபாடுகளும் அது சார்ந்த அன்னதானச் செயல்பாடுகளும் இருந்துவந்த முறைமையை அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்த வம்சாவளிச்சுவடிகளை அடிப்படையாக வைத்து ஒரு இனத்தின் தொடக்ககால வரலாற்றை அடையாளங்காண்கிற பெருமுயற்சியும் ஒருசில நடைபெற்றுள்ளன. உதாரணத்திற்குத் தமிழகத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் “பாளையப்பட்டுக் களின் வம்சாவளி” என்ற பெயரில் வெளியிட்டுள்ள நான்கு தொகுதிகளை யும் Nicholas B.Dirks அவர்களுடைய The Hollow Crown Ethno History oan Indian Kingdomஎன்கிற ஆய்வு நூலையும் கூறமுடியும். புதுக்கோட்டை சமஸ்தான ராமச்சந்திர ராஜா தொண்டைமான் குறித்த விரிவான ஆய்வு இது. பேரரசுகளை அடுத்து தோன்றிய குறுநில சமஸ்தானங் களில் புதுக்கோட்டை சமஸ்தானம் குறிப்பிடத்தக்க அளவு பிரசித்தி பெற்று இருந்த வரலாற்றை இவ்வாய்வு பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்த கட்டத்தில் கொங்குமண்டல வரலாறு, பாண்டியமண்டல வரலாறு, தொண்டை மண்டல வரலாறு என்று ஒரு பிரதேச அடிப்படையிலான வரலாறுகளைக் கட்டமைக்கவும் இச்சுவடிகள் பயன்பட்டுள்ளன. இந்த முயற்சிகளைக் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தின் வெளியீடு களாக சௌந்தர பாண்டியன் பதிப்பித்துள்ளார். இவர்களது முயற்சிக்கு அடித்தளமாக இருப்பது மெக்கன்சி தொகுத்தளித்த வம்சாவளிச் சுவடிகளே.
குறிப்பிட்ட சுவடிகளே இன்று நூலாக்கம் பெற்றுள்ளன. இன்னும் நூலாக்கம் பெறவேண்டிய பல வம்சாவளிச் சுவடிகள் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் உள்ளன. இவற்றை வருங்கால வரலாற் றாசிரியர்கள் கவனத்தில் கொண்டு தமிழ்ச்சமூக வரலாற்றைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
சில வம்சாவளிச்சுவடிகளில் இடம்பெற்றுள்ள வம்ச பரம்பரை அட்டவணைகள்.
ஆண்டிப்பட்டி பாளையக்காரர் பொம்மநாயக்கன் வம்சாவளி சாலிவாகன சகாப்தம் 1354க்கு கலியுகம் 4533 முதல்....
1.சக்கம பொம்ம நாயக்கன் பட்டம் வருஷம் 20
2.இவர் குமாரன் பெரிய தம்பி (பெரிய தம்பி) பொம்ம நாயக்கன் பட்டம் வருஷம் 25
3.இவர் குமாரன் ஆண்டி பொம்ம நாயக்கன் பட்டம் ஆண்டு 15
4. இவர் குமாரன் சிறுக்காம பொம்ம நாயக்கன் பட்டம்
ரு 25
5. இவர் குமாரன் தாத பொம்மநாயக்கன் பட்டம் ரு 13
6. இவர் குமாரன் கருமந்தன்னு பொம்ம நாயக்கன் பட்டம் ரு 26
7. இவர் குமாரன் கதிற பொம்ம நாயக்கன் பட்டம் ஆண்ட ரு 38
8. இவர் குமாரன் இம்முடி பொம்ம நாயக்கன்
பட்டம் ஆண்ட ரு 37
9. இவர் குமாரன் பெரிய தம்பி பொம்ம நாயக்கன் பட்டம் ரு 65
10. இவர் குமாரன் குமாரபொம்ம நாயக்கன் பட்டம் ஆண்டரு 50
11. இவர் குமாரன் வண்டபொம்ம நாயக்கன் பட்டம் ஆண்டரு 41
12. இவர் குமாரன் சிறுகாரம் பொம்ம நாயக்கன் பட்டம் ஆண்ட
ரு 13
சாலிவாகன சகாப்தம் 1354 - முதல் சகாப்தம் 1724 - துந்துபி வருஷம் பாளையப்பட்டு ஆதீனம் உப்பின - 3079 ஆண்டு வந்த பட்டம் 12.
ஆவலப்பன்பட்டி ஆவலப்ப நாயகன் வம்சாவளி சாலிவாகன சகாப்தம் 1318 முதல் சகாபுதம் 1715க்கு u 397 பட்டமங்களுடைய வரிசைகளும்...
1. அவுற சொதேய னாயக்கர் பட்டம் ஆண்ட ரு 49
2. யிவற் குமாரன் குமாரசோத தேனாயக்கற் பட்டம் ஆண்ட ரு 38
3. யிவர் குமாரன் பெரிய சோதேயதனாயகற் பட்டம் ஆண்டரு 36
4. யிவற் குமாரன் ஆவுல சொதேய னாயக்கர் பட்டம் ஆண்ட
ரு 29
5 யிவர் குமாரன் ஆவுல சொதேய னாயக்கர் பட்டம் ஆண்டu 24
6. யிவர் குமாரன் குமார பட்டத்து ஆவலப்ப நாயக்கர் ட்டம் ஆண்ட u 30
7. இவர் குமாரன் - சோதே னாயக்கர் பட்டம் ஆண்ட u 19
8. இவர் குமாரன்தம்பி குமார பட்டத்து சொதேய னாயக்கர்
பட்டம் ஆண்ட u 23
9. இவர் குமாரன் - றாம சொதேய னாயக்கர் பட்டம் ஆண்ட u 35
10. இவர் குமாரன் நாகய சொதே னாயக்கர் பட்டம் ஆண்ட u 32
11. இவர் குமாரன் சின்ன சொதேய னாயக்கர் பட்டம் ஆண்ட u 27
12. யிவர் குமாரன் வேலாயுத னாயக்கர் பட்டம் ஆண்ட u 18
13. யிவர்குமாரன் குமார பட்டத்து சொதேனாயக்கர்
பட்டம் ஆண்ட u 15
14. யிவற் குமாரன் றாயே சோதே னாயக்கற் பட்டம் ஆண்ட u 22
14 பட்டங்கள் 297 ஆண்டுகள்.
ஊற்றுக்குழி காலிங்கராயர் வம்சாவளி
1.காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 50
2.யிவர் குமாரன் நஞ்சய காலிங்கறாய கவுண்டர் பட்டம் ஆண்ட u 40
3.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21
4.இவர் குமாரன் நஞ்சய காலிங்க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 20
5.இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 19
6.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 21
7.இவருடைய தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12
8.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 23
9.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21
10.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 16
11.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர்பட்டம் ஆண்ட u 9
2. இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26
13. இவர் குமாரன் விருமாண்டை காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 30
14. இவர் தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 11
15. இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 20
16. இவர் குமாரன் ஈஸ்வர மூர்த்தி வண்றாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 6
17. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட u15
18. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 31
19. இவர் குமாரன் விறுமாண்டே காலிங்க ராயக்கவுண்டர் பட்ட ஆண்டு u 23
20. இவர் குமாரன் பிள்ளை முத்துகாலிங்க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 13
21. இவர் குமாரன் சின்னய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 19
22. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u20
23. இவர் குமாரன் நஞ்சய காலிங்கராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 30
24. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26
25. இவர் தம்பி நஞ்சய காலிங்க ராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12
26.இவர் குமாரன் காலிங்கறாயக்கவுண்டர் பட்டம்ஆண்ட u 29
27.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 2
28. யிவற் தம்பி அகத்தூற் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 4
28 பட்டங்கள், 582 ஆண்டுகள்.
சான்றாதாரங்கள்
குழந்தை வேலன்,க., (ப.ஆ.), நாகசாமி,இரா.,(பொ.ஆ.), பாளையப்பட்டுக்களின் வம்சாவளி-தொகுதி-1, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை, 1981.
சௌந்தரபாண்டியன்,சு.,(ப.ஆ.), தொண்டைமண்டல வரலாறுகள், அரசினர்க் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை,1997.
Nicholas B.Driks, The Hollow Crown Ethno History of an Indian Kingdom, Cambridge University Press, Newyork,2008.
காலின் மெக்கன்சி எழுதி வெளியான கட்டுரைகள்
1. Account of the construction of a Map of the Road from Nellore to Ongole.Dalrymple’s Oriental Repertory, vol.I.
2. Description of the route from Ongole to Innaconda and Belamconda with a map. Ibid.
3. Account of the Kommam tank. Ibid vol.II.
4. Description of the Source of the Pennar River.Ibid
5. Sketch of the life of Hyder Ali Khan. Asiatic Annual Register, 1804
6. History of the Anagundi or Vijaya Nagar Rajas. Ibid.
7. History of the Rajas of Anagundi from enquiries made on the spot. Ibid
8. Account of the Marda Gooroos. Ibid
9. Account of the Batta Rajas. Ibid
10. Description of the Temple at Sri Sailam. Asiatic Researches, vol.V.
11. Remarks on some Antiquities on the West and South Coasts of Ceylon. Ibid. vol.VI.
12. Extracts from Journals descriptive of Jain Monuments and Establishments in the South of India. Ibid. vol. IX There are also translations of several Inscriptions in the same volume, furnished by Col. Mackenzie. - A Descriptive Catalogue of the Oriental Manuscripts and other Articles Vol. I, H.H. Wilson, 1828. p. xii
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.