கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, September 15, 2014

வட்டார வரலாற்றுச் சுவடிகள்

கர்னல் காலின் மெக்கன்சி, தென்னிந்தியப் பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் பல வட்டார வரலாறுகளைத் தொகுத்துள்ளார். இந்த ஆவணங்கள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் வைக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் சில பதிப்பிக்கப்பெற்று வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுப்புகள் சு.சௌந்திரபாண்டியன் அவர்களால் பதிப்பிக்கப் பெற்று, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு நூலாக்கம் பெற்றுள்ள வரலாற்றுத் தொகுப்புகளின் தரவுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
-           தொண்டை மண்டல வரலாறுகள் (1997)
-           சோழ மண்டல வரலாறுகள் (1999)
-           பாண்டிய மண்டல வரலாறுகள் (1997)
-           கொங்கு மண்டல வரலாறுகள் (1997)
ஆகிய தொகுப்புகள் அந்தந்த பகுதி சார்ந்த புரிதலை ஓரளவு ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, எழுதப்பட்ட வரலாறுகள் பல இம்மண்டலங்கள் குறித்து பதிவு செய்திருந்தாலும் இதுவரை அறியப்படாத பல வரலாற்றுத் தரவுகளை இத்தொகுப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன. இதனைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
தொண்டை மண்டலத்தின் வரலாறு, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்குப் பல வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டுள்ள தொண்டை மண்டலத்தை, முதற்பல்லவன், சிம்மவிஷ்ணு போன்ற பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதனை சதாசிவப் பண்டாரத்தார் முதலியோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு எழுதப்பட்ட வரலாறுகள் பல தொண்டை மண்டலத்தைப் பதிவு செய்திருந்தாலும் அறியப்படாத சில தகவல்களை ‘தொண்டை மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பு ஆவணப்படுத்தியுள்ளது. இத்தொகுப்பில் 17 சுவடிகளின் விவரணங்கள் தொகுக்கப்பட் டுள்ளன.
இதில் தொண்டை மண்டல வரலாறுகள், மருதங் குறும்பர் கோட்டை வரலாறு ஆகிய சுவடிகள் குறும்பர்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. குறிப்பாக, தொண்டை மண்டல வரலாறுகள் எனும் சுவடியில்,
-           கர்நாடகாவில் இருந்த குறும்பர்கள் எவ்வாறு தொண்டை மண்டலத்திற்கு வந்தனர்
-           குறும்பர்கள் புகலூர்க் கோட்டை உட்பட பிற கோட்டைகளைக் கட்டிய வரலாறு
-           ஆதொண்டைச் சோழன் குறும்பர்களை வென்று தனது சோழ ஆட்சியை நிறுவிய குறிப்புகள்
போன்ற செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், குறும்பர்கள் சமண மதத்தைப் பரப்ப முயன்ற கருத்துகள் உள்ளன. இதன்மூலம், குறும்பர்களின் வரலாற்றில் சைவ- சமண மதப்பூசல் ஓர் இன்றியமையாத இடத்தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், வேளாளர்கள், வடுகர்கள், மறவர்கள், வாணாதிராயர்கள், சேதுபதிகள், தெலுங்கு நாயக்கர்கள், பயிராவிகள், சுல்தான்கள், தஞ்சை/மதுரை நாயக்கர்கள், ஆற்காட்டு நவாபு ஆகியவர்களின் குறிப்புகள் இதில் உள்ளன. இதன் மூலம், தொண்டைமண்டலம் பல்வேறு அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கி வந்துள்ளமையை அறிந்துக்கொள்ளலாம். விஜயாலய சோழன் அபராஜித பல்லவனை வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் என்பது எழுதப்பட்ட/ அறியப்பட்ட வரலாறு. இக்கருத்திற்கு முரணாக, குலோத்துங்க சோழன் என்பவன் தொண்டை நாட்டை உருவாக்கினான் என்பதை ‘பண்டைய மும்மண்டல மன்னர்களின் வரலாறு’ எனும் சுவடி பதிவு செய்துள்ளது. இதில் அரசாட்சி முறை, அரண்மனை முறை, படைமுறை, புதியதாக ஓர் ஊர்/நாட்டை எவ்வாறு உருவாக்குவது, வரகுண பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் சோழநாடு முழுவதும் எவ்வாறு பாண்டியர்களின் கீழ் இயங்கியது போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், திருவள்ளூர், பெரியபாளையம் ஆகிய கோயில்களுக்கு ஆங்கிலேயக் கம்பெனியார் செய்த ஆலயப்பணிகள் / தருமங்களை திருப்பாலை வனம் எனும் கைபீதும் சித்தாமூர் சமண மடத்தின் வரலாற்றை சித்தாமூர்க் கைபீதும் குறும்பர்களை வென்ற ஆதொண்டைச் சோழன் பற்றிய குறிப்புகளையும் காத்தவராயன், சேதுராயன் ஆகியோர் கட்டிய கோட்டைகளின் விவரணங்களையும் திருவிடைச் சக்கரம்கோட்டை வரலாறு எனும் சுவடியும் குறிப்பிடுகிறது. அதேபோல, வேலூர்க் கோட்டையை ஆட்சி செய்த இசுலாமியச் சிற்றரசர்கள் பற்றியும் வடஆற்காடு பகுதிகளில் நாயக்கர்கள்
எவ்வாறு சிற்றரசர்களாகத் தொழிற்பட்டுள்ளனர் என்பதை வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி எனும் சுவடி ஆவணப்படுத்தி யுள்ளது.
தொண்டை மண்டல வரலாற்றில் ஆற்காடு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆற்காட்டுப் பகுதியில் காணப்படும் ஊர்கள்/ இசுலாமியர்கள் தொடர்ந்து இப்பகுதியில் இருப்பதற்கான காரணங்கள் போன்றவைகளை ‘ஆற்க்காட்டுப் பூர்வீகச் சரித்திரம்’ எனும் சுவடி குறிப்பிடுகிறது. இசுலாமிய அரசர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்துக் கோயில்களின் மண்டபங்கள் எவ்வாறு மசூதியாக்கப்பட்டன என்பன போன்ற செய்திகளை திருக்கழுக்குன்றக் கைபீது விளக்குகிறது. மேலும், பொன்விளைந்த களத்தூர், கள்ளப் புலியூர், அழிபடைதாங்கி, பல்லாவரம், மாமல்லை ஆகிய ஊர்களின் வரலாற்றுப் பின்புலங்களையும் இத்தொகுப்புச் சுவடிகள் கட்டமைத்துள்ளன. இவ்விதமாக, தொண்டைநாடு தமிழ்ச்சமூக இயங்குதளத்தில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது.
‘சோழ மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பில் 6 சுவடிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள சுவடிகளின் காலம் பொதுவாகக் கி.பி.19 ஆம் நூற்றாண்டாகும். குறிப்பாகச் சோழமன்னர் மகத்துவம்/சோழ தேசத்துப் பூர்வீகச் சரித்திர வியாக்கியானம் ஆகிய சுவடிகளின் காலம் கி.பி. 1810 ஆகும்.
சோழமன்னர் மகத்துவம் எனும் சுவடியில்,
-           பவிஷ்யோத்திர புராணத்தில் வடமொழியில் பதிவு செய்யப்பட்ட சோழர் பற்றிய வரலாற்றைத் தமிழில் சரபோசி மன்னன் எழுதியுள்ள செய்தி
-           இருவேறு சாதிகளைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவர்களே சேர, சோழ, பாண்டியர்கள்
-           குலோத்துங்க சோழன், தேவசோழன், சசிசேகர சோழன், சிவலிங்கசோழன் போன்ற 16 சோழர்களின் விவரணங்கள்/ கோயிற்பணிகள்
-           பீமசோழன் ஏற்படுத்திய அன்னசத்திரங்கள் / அறச்சாலைகள்
-           இராசேந்திர சோழன் கட்டிய கோயில்களின் பட்டியல்
போன்றவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சைப் பெரிய கோயிலை முதலாம் இராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாறு. ஆனால், கரிகாலன் என்று சுவடியின் குறிப்புகள் உள்ளன. இது வரலாற்றிற்கு முரணான கருத்தாகு மெக்கன்சி, சோழ மன்னர்களைக் குறித்துக் கேட்ட வினாக்களுக்கு விடைதரும் வகையில் ‘சோழதேச பூர்வீக சரித்திர வியாக்கியானம்’ எனும் சுவடி உள்ளது. இதில், சேர, சோழ, பாண்டியர்களின் வருமானம்/சோழ நாட்டின் வளங்கள் முதலியன குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் சைவர்களுக்கு முன் சமணர்களே தமிழை வளர்த்தனர் என்றும் பல சைவக் கோயில்கள் முன்பு சமணக்கோயில்களாக இருந்தன என்றும் குறிப்புகள் உள்ளன. இதனையடுத்து நாயக்க / மராட்டிய அரசர்களின் தகவல்களும் தேரூர்ந்த சோழன் கதையும் இடம்பெற்றுள்ளன.
சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் வமிசாவளி எனும் சுவடி, 66 - சோழர்கள், 50 - சேர அரசர்கள், 70 - க்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்கள், 70 - பாளையப்பட்டுக்களைக் குறிப்பிடுகின்றது. மேலும் மறவர்/ கவுண்டர் பாளையங்கள் குறித்தும் 25 கோட்டைகளின் பட்டியல்களும் உள்ளன. ‘ஸ்ரீரெங்கம், திருச்சிராப்பள்ளியார் சொன்ன உத்தரவுகள்’ எனும் சுவடி வினா-விடை அமைப்பில் உள்ளது. இதில், 115 - க்கும் மேற்பட்ட தமிழகக் கோயில்களின் பட்டியல்களும் சோழ, பாண்டிய/ கொங்கு மண்டலங்களின் எல்லைகளும் சுருக்கமாகக் கூறப்பட்டுளளன. சந்திரவம்ச வரலாறு எனும் சுவடி, சூரியவம்சம், சந்திரவம்சம், சந்திர - சூரிய வம்சங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. இதனையடுத்து, 23 - சோழர்களின் பட்டியல் காணப்படுகின்றது. மேலும், தொண்டைச் சோழன், தொண்டை நாட்டை ஏற்படுத்தியவன் என்றும் தெற்கே இருந்த குடிகளை அழைத்து வந்து தொண்டை நாட்டில் குடியேற்றினான் என்றும் குறிப்புகள் உள்ளன. இவ்வாறு தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு மக்களின் குடியேற்றங்களை ஆராய மெக்கன்சியின் சுவடிகள் பெரிதும் பயன்படுகின்றன. சம்புகேசுவரத் தலமகாத்மியம் எனும் சுவடி, திருவானைக்காவல் பற்றியது. குறிப்பாக, அகத்திய தீர்த்தம், இராமதீர்த்தம், அக்னி தீர்த்தங்களுக்கு பெயர்க்காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பாண்டிய மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பில் 14 சுவடிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பசுமலை வரலாறு, கூத்தநாச்சித் தோப்பில் சந்தை கூடின விவரம் எனும் சுவடிகள் புராணக்கதைகளை தத்துவ அடிப்படையில் விளக்குகிறது. கம்பம் கிராமம் உண்டான வரலாறு எனும் சுவடி பராக்கிரபாண்டியனைப் பற்றியும் ஓரிடத்தில் கோயில் எவ்வாறு உருவாக்கப்படுகிறது எனும் தகவல்களையும் பதிவு செய்கிறது. சின்னமனூர் அக்கிரகார வரலாறு, இராஜசிம்ம பாண்டியன்/ சின்னம நாயக்கனைப் பற்றியும் பூலாவினேஷ்வர சுவாமி வரலாறு, வீரபாண்டியனைப் பற்றியும் குறிப்பிடுகிறது. உத்தம பாளையம் உண்டான வரலாறு எனும் சுவடியில்,
-           கல்லையதாச நாயக்கன் எனும் பாளையப்பட்டு சிற்றரசன் உத்தம பாளையத்தை ஆட்சி செய்த விதம்         வடமாநிலத்தைச் சேர்ந்த கன்னார்கள் உத்தம பளையத்தில் செய்த வணிகம் போன்ற தகவல்கள் உள்ளன.
சுரபிநதி வரலாறு, காளத்தீஸ்வர சுவாமி புராண வரலாறு, தேவாரம் பாளையப்பட்டு சோலைமலை அழகர் தலபுராண வரலாறு, கோம்மைப் பாளையப்பட்டுத் திருமலைராயப் பெருமாள் தலபுராண வரலாறு ஆகிய சுவடிகள் அந்தந்த தலத்தின் பெயர்க்காரணம் / வரலாற்றுப் பின்புலத்தை விளக்குகின்றன. நீர் நிர்வாகத்தின் பொறியியல் நுட்பங்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு முதுகுளத்தூர்ப் பகுதி மக்கள் விண்ணப்பம் எனும் சுவடி பதிவு செய்துள்ளது.
-           பாண்டியர்கள் சந்திரவம்சச் சத்திரியர்கள்
-           குலசேகர பாண்டியன், மலயத்துவச பாண்டியன், தடா தகாதேவி (கணவன்- சுந்தர பாண்டியன்), உக்கிர பாண்டியன், வீரபாண்டியன், அபிஷேக பாண்டியன், விக்கிரம பாண்டியன், ராஜசேகர பாண்டியன் ஆகியவர்களைப் பற்றிய குறிப்புகள்
-           தமிழர் போர் முறை, மண்டலம், படலம், அரைச்சந்திர வியூக முதலிய படைநிறுத்தங்கள்
போன்றவைகளை பாண்டியச் சரித்திரம் எனும் சுவடியின் மூலம் அறியலாம். ஏமநாயகி எனும் தாசியின் கதை, ஒன்பது இரசங்கள் இலயம், இரசவாதம், சுந்தரேசுவர பாத சேவக பாண்டியன் மீது சோழ அரசன் படையெடுத்த வரலாறு குறித்தும் குறிப்புகள் உள்ளன. தாமிரபரணி மகாத்மியம் எனும் சுவடி, திரிகூடமலைப் பகுதியில் காணப்படும் 18 தீர்த்தங்கள்/ 9 சிவாலயங்களின் பட்டியல்களைத் தருகிறது. குறிப்பாக, சிவசன்மா, சாந்தன், விருத்தாசுரன், அருச்சுனன் போன்றவர்களின் கதைகளும் இடம்பெற்றுள்ளன.
‘கொங்கு மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பில் 38 - சுவடிகள் இடம் பெற்றுள்ளன. சிவகிரி சுப்பிரமணியசுவாமி தல வரலாறு, தான்தோன்றிக் கிராமத் தேவஸ்தான வரலாறு, தூரம் பாண்டிக் கிராமக் கோயில் வரலாறு, முன்னூர்க் கிராமக் கோயில் வரலாறு, திண்டுக்கல் தருமராசர் கோயில் திருநாள் வரலாறு, அகரத்து முத்தாலம்மன் வரலாறு, பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு, பழனித் தல வரலாறு ஆகிய சுவடிகள் அந்தந்த தலங்கள் உருவான வரலாற்றை புராணங்களின் பின்புலத்தோடு விவரிக்கின்றன.
-           கொங்கு மண்டலம், கோயமுத்தூர், புலியூர், திருமுக்கூடல், புன்னைவனம், பஞ்சமாதேவிக் கிராமம், வேட்டை மங்கலம், வாங்கல், பவித்திரம், குப்பம், புகளூர் ஆகிய ஊர்களின் வரலாற்றுத் தரவுகளையும் இத்தொகுப்புச் சுவடிகள் முன்னிறுத்துகின்றன.
குறிப்பாக, ஊற்றுக்குளி பாளையக்காரர் காலிங்கராய கவுண்டனுக்கு எழுதிய கடிதத்தில்,
-           தமிழகத்தில் நிலவிய ஆங்கிலேயர்களின் ஆட்சி முறைமை
-           ஆங்கிலேயர் காலத்துத் தமிழகத்தின் போர்நிலை போன்ற செய்திகள் உள்ளன.
கொங்கு மண்டல வரலாறு எனும் சுவடியில், கொங்கு மண்டலத்தில் 42 நாடுகள் இருந்ததாகக் குறிப்பு உள்ளது. ஆனால் 37 நாடுகளின் பெயர்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. மேலும், சேரமான் பெருமான் எனும் அரசன், திருக்காளத்தில் இருந்து 14 ஆயிரம் வேடர்களை அழைத்து வந்து கொங்கு மண்டலத்தில் குடியமர்த்திய செய்திகளும் இதில் உள்ளன. மசகூர் மகாசனங்கள் கைபீது, மசகூர் தேனீசுவரசுவாமியின் வரலாற்றையும் ஹைதர் அலி, திப்புசுல்தான் / மதுரை மன்னர்களின் ஆதிக்கத்தையும் குறிப்பிடுகிறது. இதேபோல, அகத்தியல், குலசேகரபாண்டியன், ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியவர்களைப் பற்றி கொடுமுடி தேவத்தானக் கைபீது பதிவு செய்துள்ளது.
திண்டுக்கல் நகரத்து வியாபார வரலாறு எனும் சுவடி, பாண்டிய மண்டலத்தில் நிலவிய வியாபாரக் கூறுகள்/ பொருட்களைப் பட்டியலிடுகிறது. இந்த வியாபார முறையே, 300/400 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மண்டலத்தில் நிலவியிருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறாக இத்தொகுப்புகளின் வழி கொங்கு மண்டலப் பகுதிகளின் வரலாற்றுத் தரவுகளை ஓரளவு தொகுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக மேற்கண்ட மண்டலங்களின் வரலாறுகள் குறித்துப் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. எனினும், இத்தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டுள்ள மெக்கன்சியின் ஆவணங்களில் அரிய வரலாற்றுக் குறிப்புகள் / பண்பாட்டுச் செய்திகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. மேலும், வரலாறு/ பண்பாடு ஆகியவற்றிற்காக மட்டுமில்லாது உரைநடை போன்ற தமிழ்மொழிக் கூறுகளுக்காகவும் இத்தொகுப்பு பதிப்புகள் உதவுகின்றன. குறிப்பாக, 17-19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களிடையே, வரலாறுகள் குறித்த புரிதல்கள் எவ்விதம் இருந்தது என்பதனை இச்சுவடிகள் உணர்த்துகின்றன. இதன்மூலம், மேற்கண்ட மண்டலங்களில் நடைபெற்று வந்த தமிழ்ச்சமூகத்தின் இயங்கு முறைக் குறித்த தகவல்களை ஓரளவு கட்டமைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.