கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Saturday, June 29, 2013

வேட்டுவரின் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள்

வேட்டுவர் சமூகத்தை சேர்ந்த பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கோத்தகிரி அருகே கருக்கியூர் என்ற இடத்தில் உள்ளதாம்.அதை பற்றிய செய்திகளை எழுத்தாளர் ஜெயமோகன் பின்வருமாறு எழுதியுள்ளார்...

கருக்கியூர் ஓவியங்கள் வேட்டைச்சமூகமாக இருந்த மக்களால் வரையப்பட்டவை. பத்தாயிரம் வருடப்பழைமை அவற்றுக்கிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பிரம்மாண்டமான பாறைச்சரிவு ஒன்றின் பரப்பில் இவை வரையப்பட்டிருக்கின்றன. பாறை ஒரு கூரை விளிம்புபோல நீட்டிக்கொண்டிருக்கிறது. அதனடியில் மழைக்கு நனையாமல் இருநூறுபேர் வசதியாக நிற்க முடியும். ஒருகாலத்தில் வேடர்களின் தங்குமிடமாக இருந்திருக்கலாம். யார்கண்டது , வேடர்தலைவர்களின் அரண்மனையாகவோ அவர்களின் கோயிலாகவோகூட அது இருக்கலாம்.

கருக்கியூர் ஓவியப்பாறைக்குச் செல்லும் வழி மிகமிக செங்குத்தானது. மலைச்சரிவில் வேர்களையும் கிளைகளையும் பற்றிக்கொண்டுதான் இறங்கவேண்டும். வன ஊழியரக்ளின் உதவியில்லாமல் செல்லமுடியாது, செல்ல முயல்வது ஆபத்தானதும்கூட. வனத்துறை அனுமதி கண்டிப்பாகத்தேவை. அங்கே இறங்கிச்சென்று சேர்ந்தபோது உடம்பில் கொதித்த வியர்வை அடங்கப் பத்துநிமிடங்களாயின. அதன்பின்னரே ஓவியங்களை பார்க்கமுடிந்தது.
இந்தப் பாறைமலையின் மேற்குப் பக்கம் அதிகமாக மழை பெய்யும் பகுதி. கிழக்குப்பக்கம் மழை குறைவு. ஆகவே இது விலங்குகளின் புகலிடம். நாங்கள் சென்றபோதுகூட அங்கே ஏதோ விலங்கு இரவு தங்கியிருந்தமைக்கான ரோமங்கள் முதலியவற்றைப் பார்த்தோம். இந்த பாதுகாப்புதான் ஓவியங்களை இத்தனை ஆயிரம் வருடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

இவற்றை இன்று நாம் ஓவியம் என்று சொல்லும் அர்த்தத்தில் ஓவியங்களென சொல்லமுடியாது. மனித உருவங்களெல்லாமே குழந்தைகள் கிறுக்குவதுபோலத்தான் வரையப்பட்டிருந்தன. ஆனால் விலங்குகளின் உருவங்களில் ஆழ்ந்த அவதானிப்பும் கைத்திறனும் தெரிந்தது. முதல்பார்வைக்கு ஓவியங்களைக் கண்டுபிடிப்பதே கடினம். பார்க்க ஆரம்பிக்கையில் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொண்டே இருக்கின்றன. நீருக்குள் மீன்கள் ஒவ்வொன்றாக தெளிந்துவருவதுபோல இவை வருகின்றன.
இருவகையில் இவை வரையப்பட்டிருக்கின்றன. சாம்பல்நிறமான பாறைப்பரப்பில் வெள்ளைக்கல்லால் அடித்து அடித்து தடமாக்கிக் கோடிழுத்து வரையப்பட்டிருந்தன சில ஓவியங்கள்.சிவப்புக்கல்லால் பூச்சாக வரையப்பட்டிருந்தன சில. உண்மையில் பச்சிலைகள் முதலியவை சேர்த்து பலநிறங்களில் வரையப்பட்டிருக்கலாம். கல்நிறங்கள் மட்டும் காலத்தில் எஞ்சியிருக்கின்றன போலும்.

வேட்டைக்காட்சிகள்தான் அதிகமும். வில்லேந்திய வேட்டுவர் படைகள் சூழ்ந்து வேட்டையாடும் நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆய்வாளர்கள் ஆச்சரியமாகச் சுட்டுவது இரு விஷயங்களை . ஒன்று, பலர்சூழ்ந்து காளைமாட்டைப்பிடிக்கும் சித்தரிப்பு. இன்றைய ஜல்லிக்கட்டின் புராதன வடிவம். இன்னொன்று தோள்களோடு தோள்சேர்ந்து பெண்கள் ஆடும் நடனத்தின் சித்தரிப்பு. இது இன்றும் நம்மிடையே உள்ளது. தேடித்தேடி ஓவியங்களை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் குதூகலமான அனுபவமாக இருந்தது.

இங்கும்கூட தேடிவந்து ஓவியங்கள்மேல் சாக்குக் கட்டியாலும் கல்லாலும் சொந்தப்பெயர்களை எழுதிவைத்திருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் இன்னும் அதிககாலம் நீடிக்க வழியில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது . ஆனால் தமிழகத்தில் கலையும் வரலாறும் சூழலும் அழியவிடப்படுவது பற்றி பேசிப்பயனில்லை. தமிழ்ச்சமூகம் அந்த அழிவையே ஆனந்தமாகக் கொண்டாடும் மனநிலையை அடைந்துவிட்டிருக்கிறது....






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.