கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, December 16, 2013

ஆரைப்பற்றை இது ஆரையம்பதி எனவும் அழைக்கப்படும்

.
தமிழ் ஈழத்தின் தெற்கிலும் இலங்கைத் தீவின் கிழக்கிலுமாய் அமைந்துள்ள ஒரு ரோசமும் வீரமும் விளைந்த தொன்மையான கிராமந்தான் ஆரையம்பதி. 

தோன்மை வரலாற்றுடன் தொடர்புடையதினால் வேடர் வரலாறும் கிராமத்தின் அயலிலே பிணைந்துள்ளது. இலங்கையின் ஆதி குடிகள் இயக்கரும் நாகரும் என்று மகாவம்சம் கூற விழைந்த போதிலும் ஆய்வாழர்கள் இவர்களை நாகரிகம் மிக்கத் திராவிட இன மக்களாக இனம்காணுகிறார்கள். வேடர்களை விலக்கப்பட்ட இனமாக மகாவம்சம் சித்தரிக்க முனைந்த போதிலும் இலங்கையின் ஆதி குடிகளாக செழுமை சேர்த்தவர்கள் வேடர்கள். தமிழ்க் கடவுளான முருகன் குறவள்ளியை மணம் புரிந்தது வேடுவ சாதியாரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைகிறது.

முருகனுக்கு கோயில் எழுப்பி அறுபடை வீடுகண்டு தமிழகத்தின் பக்தியும் தமிழும் செழித்தன. இதே மரபைப் பின்பற்றி கிழக்கிலங்கையிலும் முருகனின் அறுபடை வீடுகளாக - ஆறு ஸ்தலங்கள் பாராட்டுப் பெறுகின்றன. வடக்கே வெருகல் கங்கையின் கரையில் எழுந்தருளி இருக்கும் சித்திரவேலாயுதனார் கோயில்;;; சித்தாண்டி சித்திரவேலாயுதனார் கோயில்;;; கோயில் போரதீவு சித்திரவேலாயுதனார் கோயில்;;; மண்டூர் முருகன் கோயில்; உகந்தை முருகன் கோயில்; திருக்கோவில் சித்திரவேலாயுதனார் கோயில் ஆகிய ஆறுமே அவை. கதிர்காமத்தைப் போன்றே மண்டுPர்; முதலிய முருகன் கோயில் திருவிழாக்களிலே வேடுவக் கன்னிப் பெண்கள் கலந்து கொள்வதும் வேடர் பூசை வேலன் வெறியாட்டம் என்பன நிகழ்வதும் வேடர்களின் தொன்மையையும் தமிழர்களுடனான பக்தி உறவையும் நிலைநாட்டும். புலிஞன் மஞ்ஞன் காத்தான் காங்கேயன் ஆகியன வேடுவப் பெயர்கள். ஆரையம்பதியின் அயலிலே அமைந்துள்ள ஊர்கள் பலவும் இப்பெயர்களினால் இன்றும் வழங்கப் பெறுகின்றன. அவ் ஊர்கள் அவ்வப்பெயர் கொண்ட வேடுவ அரசனின் பெயரால் நிலைத்துள்ளன என்பதை சுவாமி விபுலானந்தரும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆரைப்பற்றைக்குப் படுவான் கரையில் அமைந்துள்ளது வேடன்கரை. அறுபடை வீடுகளுள் ஒன்றாக எண்ணப்படாவிட்டாலும் ஆரைப்பற்றைக்கு அணி சேர்ப்பது அங்கு எழுந்தருளியுள்ள முருகன் கோயில்.

கிழக்கிலங்கையின் தலைநகராக விளங்கும் மட்டக்களப்பிலிருந்து தென்திசையில் நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது ஆரையம்பதி. இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டை – மண்முனையும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை- காங்கேயனோடையும் மேற்கில் புகழ் பூத்த தேனாறாம் மட்டக்களப்பு வாவியும் அரண்செய்ய இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது. ஆதில் மா பலா வாழை தென்னை கமுகு ஆல் அரசு வேம்பு வம்மி (கடம்பு) தேத்தா ஆகிய மரச்சோலைகளுக்கிடையே இன்றும் ஒரு கவிதையாகவே ஆரைப்பற்றை காட்சியளிக்கிறது…

குல ஒற்றுமைக்கும் நட்புறவுக்கும் சாட்சி சொல்வதைப் போல குருகுலத்தோர் தெரு வேளாளர் தெரு சாண்டார் (பணிக்கர்) தெரு செங்குந்தர் தெரு வண்ணார் தெரு பறையர் (சாம்பான்) தெரு பொற்கொல்லர் தெரு ஆகிய குலப் பெயர்கள் கொண்டழைக்கப்படும் தெருக்கள் அணிசெய்கின்றன. அத்துடன் அலையன் குளம் ஆனைக் குளம வண்ணான் குளம; வம்மிக் கேணி தோணா பால் வாத்த ஓடை ஆகியன எமது ஊருக்கு நீர்வளம் சேர்க்கின்றன. அக்காலத்தில் வீடுகளில் கொட்டுக் கிணறுகள் இருந்தன. தேத்தா மரத்தின் நடுப் பகுதியைத் தோண்டியெடுத்த பின்னர் குழல்போன்ற மரக்கொட்டினை நிலத்தில் பதிப்பார்கள் கிணற்றைப் பாதுகாக்கும் கட்டுமானம் இந்தக் ‘கொட்டுக்குத்தான்’ இருக்கும்.

ஆரைப்பற்றை என்ற பெயர் பற்றியும் பலவாறு வழங்குவர். ஆரை+பற்றை ஸ்ரீ ஆரைப்பற்றை. ஆரை என்பது நான்கு இலைகளைக் கொண்ட ஒரு செடி. இப்பகுதியில் இச்செடி பற்றை பற்றையாக வளர்வதால் ஆரைப்பற்றை என தாவரவியல் சார்ந்து தமிழ் மரபு பேணி இப்பெயர் ஏற்படலாயிற்று என்பார் ஒரு சாரார். ஆரை என்பது நீரோடையைக் குறிக்கும் என்றும் நீரோடைகள் இங்கு நிறையக் காணப்பட்டதால் இப்பெயர் வந்ததாக இன்னொரு சாரார் கூறுவர். கம்பருக்கும் ஒளவையாருக்கும் வித்துவப் போட்டி நிலைத்ததாக இங்கு கதையுண்டு. அவ்விரு புலவர் மேதைகளும் வித்துவச் செருக்கைக் காட்டுவதற்கு இந்த ஆரைச் செடியை துணைக்கு அழைப்பார்களாம் ! ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் நடந்த போட்டியின் உச்சக்கட்டத்தில் கம்பர் ஏதோ சொல்ல, அதற்கு ஒளவை “ஆரையடா சொன்னாயடா” என்று சிலேடையில் பதிலடி கொடுத்தாராம்:

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
முட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேர்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயடா

ஆரைப்பற்றை என்ற பெயரினை தற்கால இளைஞர்கள் நாகரிகமாக ஆரையம்பதியாக அழைக்கத் துவங்கினரெனச் சிலர் தவறாகக் கருதுகிறார்கள். ஆரைப்பற்றையையும் காத்தான்குடியையும் எல்லைவகுத்துச் செல்வது எல்லை வீதி. இந்த எல்லை வீதியிலே தமிழ் அடையாளம் பேண 1907 ஆம் ஆண்டு கட்டப்பெற்ற திருநீலகண்டப் பிள்ளையார் கோயிலின் மணித் தூணிலும் 1911 ஆம் ஆண்டு விநாயகப் பெருமான்மீது பாடப்பட்ட பதிகத்திலும், ஆரையம்பதி எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆக ஆரையம்பதி என்ற பெயரும் பல தலைமுறைகளாகவே நிலைத்து வந்துள்ளது என்பது புலனாகும். ஆரையம்பதியில் மக்கள் குடியேறிய வரலாறு ‘மட்டக்களப்பு மாண்மிய’த்தில் பதிவாகியுள்ளது. இந்நூலே யாழ்பாண வரலாறு சொல்லும் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ போல மட்டக்களப்பின் வரலாற்றைச் சொல்லும் தொன்மையான நூலாகும். ஆதில் காணும் வரலாறு வருமாறு:

குலசேனன் என்கிற கலிங்க தேசத்தான் மகள் உலகநாச்சி என்பாள். இவள் தன் சகோதரன் உலகநாதனுடன் மட்டக்களப்புக்கு வந்தாள். வரும்பொழுது புத்தபிரானுடைய ‘தசனம்’ கைலைமலையில் பெறப்பட்ட ஸ்படிகலிங்கம் ஆகிய இரண்டு புனித சின்னங்களைக் கொண்டு வந்தாள். அப்பொழுது இலங்கையை மேகவண்ணன் என்கிற அரசன் அரசாண்டதாகச் சொல்லப்படுகிறது. அவ்வரசனிடம் உலகநாச்சி புத்த தசனத்தை அன்பளிப்புச் செய்தாள். ஆதனால் மகிழ்ந்த அரசன் அவள் விருப்பப்படி “மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பிரதேசத்தை” தானமாக வழங்கும்படி மட்டக்களப்புப் பகுதியை அப்பொழுது ஆண்ட தன் நண்பனான குணசிங்கனை கேட்டுக் கொண்டார் என்பர். இந்த குணசிங்கனின் காலம்
உலகுள்ளோர் புகழ்ந்து வாழ்த்த
உற்றவர் விழுந்து போற்றத்
தலைவனாய் எழுந்து மட்டக்
களப்பில் இருந்த காலம்
கலைவளர் கலியுகத்து

மூவாயிரத்து ஐந்நூறு கடந்த காலம்
புலவர்கள் பாடச் செங்கோல்
ஓச்சினான் புரவலன் குணசிங்கன்

என மட்டக்களப்பு மான்மியம் வரையறை செய்கிறது. மேகவண்ணனின் விருப்பத்திற்கு இணங்க குணசிங்கன் உலகநாச்சிக்கு கையளித்த பிரதேசமே மண்முனையாகும். இன்றும் மட்டக்களப்பினை அண்டிய நிர்வாக அலகுகள் மண்முனையை மையப்படுத்தியே வகுக்கப்பட்டுள்ளன. காட்டைச் செப்பனிட்டு கலிங்கத்திலிருந்து பல குடும்பங்களை வரவழைத்து அதில் குடியேற்றி அப்பகுதியிலே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிகரத்துடன் கூடிய அழகிய கோயிலும் கட்டி குளமும் கட்டி குளமும் வெட்டுவித்தாள். இந்த இடம் ‘சிகரம்’ என்றும் ‘கோயில்குளம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வுலகநாச்சி குணசிங்கனின் சகோதரனான கிரசரன் என்பவனை மணந்து கனகசேனன் வள்ளி என இரண்டு மக்களைப் பெற்று வாழ்ந்து வந்தாள். தோடர்ந்து இந்தியாவிலிருந்து உலகநாச்சியின் அழைப்பின் பேரில் வந்தோர் வாவிக்குப் படுவான்கரையில் அமைந்த காணிகளிலும் குடியேறி விவசாய வாழ்க்கையை மேற்கொண்டனர். அவர்கள் தமது வழிபாட்டுக்காக கொக்கட்டிச்சோலையில் தான்தோன்றியீசுவரர் ஆலயத்தை நிறுவினர். இந்தக் கோயிலின் சிறப்பு தேரோட்டமாகும். பெரிய தேர் சித்திரைத் தேர் ஆகிய இத் தேர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுவர். இந்தக் கோயிலின் தேர்த்திருவிழாவுடன் ஆரையம்பதி ஸ்ரீ முருகன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உறவு வரலாற்றுக் காலம் முதல் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அமைதியாகவும் இயற்கையின் அருட்கொடையால் கிடைத்த தொழில்களையும் சுகித்து வாழ்ந்த இம்மக்களுடைய வாழ்க்கையிலே போர்த்துக்கேயரின் வருகை மாறுதல்களை நிகழ்த்துவதாயிற்று. 1505 ஆம் ஆண்டில் புயல் நிமித்தம் காலியில் கால் வைத்த போர்த்துக்கேயர் கோட்டை அரசுடன் தொடர்பு வைக்கலாயினர். கோட்டை ராஜ்யம் அவர்கள் கைக்கு வந்ததும் இலங்கையின் ஏனைய பகுதிகளையும் தமது ஆட்ச்சிக்கு உட்படுத்த முனைந்தனர். யாழ்ப்பாண ராஜ்ய வீழ்ச்சிக்குப் பின்னர் கிழக்கில் இருந்த தமிழ் பிரதேசங்களையும் தமது ஆட்சிக்கு உட்படுத்துவதில் தீவிரம் காட்டினர். போர்த்துக்கீசர் தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் தாம் சார்ந்த கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக இந்துக் கோயில்களை இடிக்கலாயினர். இவ்வாறுதான் உலகநாச்சியார் காலத்தில் கோயில்க்குளத்தில் கட்டப்பட்டிருந்த காசிலிங்கேசுவரர் போத்துக்கீசரால் கி.பி 1627 இல் உடைத்து சிதைக்கப்படலாயிற்று. கோயில்குளம் தன் பொலிவை இழந்தது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் வட திசையில் புலம் பெயர்ந்து தற்கால ஆரைப்பற்றை ஊரை நிறுவினர். போர்த்துக்கீசரால் சிதைக்கப்பட்ட ஆலயத்தில் இருந்த நிலைகள் படிக்கற்கள் கருங்கல் தூண்கள் ஆகியவற்றை கொண்டுவந்து தமது புதிய குடியிருப்பில் முருகன் கோயில் ஒன்றைக் கட்டினர். இதுவே இன்றும் ‘முருகன் கோயில்’ என்றும் ‘கந்தசாமி கோயில்’ என்றும் ஆரையம்பதி மக்களால் பாராட்டப்படுகிறது.

இக்கோயில் ஆரம்பத்தில் பிள்ளையார் கோயிலாகவே இருந்ததென்றும் காலப்போக்கில் அது முருகன் கோயிலாக மாறியதென்றும் வரலாறு உண்டு. இச்சந்தர்ப்பத்தில் மூர்த்திகள் மாறிய வரலாறு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தில் நடந்தமையும் ஒப்புநோக்கிப் பார்க்கத் தக்கது. அமிர்தகழியில் ஆரம்பத்தில் மாமாங்கேஸ்வரர் கோயிலில் ஈஸ்வரரே மூர்த்தியாக அமைக்கப்பட்டது என்றும் பின்னர் அது மாமாங்கப் பிள்ளையார் கோயிலாக மாறிற்று என்றும் கூறுவர்.

ஆரைப்பற்றையிலே கந்தசாமி கோயிலைத்தவிர பரம நைனார் ஆலயம் திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம் எள்ளுச்சேனைப் பிள்ளையார் கோயில் பேச்சிஅம்மன் ஆலயம் காளிகோயில்கள் சிவன்கோயில் கண்ணகி அம்மன் கோயில் மாரியம்மன் கோயில் ஆதிவைரவர் கோயில் ஆகிய பல கோயில்கள் வழிபாட்டுக்கு உண்டு. ஆரையம்பதியை நான்கு திசைகளிலிருந்தும் வரக் கூடிய கெட்ட ஆவிகளிலிருந்தும் பார்வைகளிலிருந்தும் பாதுகாக்கும் முகமாக வடக்கிலும் மேற்கிலும் பரம நைனார் கோயில்களும் கிழக்கில் பத்திரகாளி கோயிலும் தெற்கில் ஆதி வைரவர் கோயிலும் காவல் தெய்வங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக சொல்லுகின்றனர்.

மட்டக்களப்புப் பகுதியிலே வேளாண்மைச் செய்கை சித்திரை மாதம் வரை நீடிக்கும். அதனைத் தொடர்ந்து வைகாசி ஆனி மாதங்களில் கண்ணகி மாரியம்மன் பேச்சியம்மன் சடங்குகள் நடைபெறும். அம்மன் கோயில் சடங்கு காலங்களில் ஊருக்குள் மச்சம் மாமிசம் உண்பது தவிர்க்கப்படும். ஊர் முழுவதும் தூய்மையும் பக்தி உணர்வும் கொண்டுவிடும். வேப்பிலை வாசமும் கமுகம்பூ தாமரை ஆகிய பூக்களின் வாசமும் கற்பூர சாம்பிராணி வாசமும் ஊரை ஆக்கிரமித்து விடும். சிலம்பு உடுக்கை பறை (தவில்) ஓசையிலும் ஊரே ஒரு தெய்வீக கோலம் கொண்டு விடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே வெருகல்கங்கை முதல் தெற்கே குமுண ஆறுவரை பரந்து கிடந்தது. சுதந்திரத்திற்கு பிற்பட்ட மாறுபட்ட அரசியல் காரணங்களினால் 1963 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் ஒன்று தனியாக அதிலிருந்து கல்லியெடுக்கப்பட்டது. ஆதற்கு முன்னிருந்த நிலையை பிராமிக் கல்வெட்டுகள் ஐந்து நிர்வாகப் பற்றுக்களைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பினைக் குறிக்கிறன. அவையாவன (1)கோரளைப் பற்று (வாழைச்சேனை ஏறாவூர்) 2.விந்தனைப் பற்று (மகாஓயா) 3.மண்முனைப் பற்று (மட்டக்களப்பும் பிரதேசங்களும்) 4.வேகம் பற்று (இங்கினியாகல போன்றன) சம்மாந்துறை பற்று (இதனுடன் அக்கரைப் பற்றும் பானமைபற்றும் இணைத்துச் சொல்லப்படும்.) 
மட்டக்களப்பு பிரதேசத்தில் தமிழரும் முஸ்லிம்களும் அடுத்தடுத்த பிரதேசங்களில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். குழல் புட்டு அவிக்கும் பொழுது மாவும் இடையிடையே தேங்காய்ப் பூவும் இட்டு அவிக்கப்படுவது போல இவை அழகாக அமைந்துள்ளன என்று அக்காலப் பேச்சாளர்கள் குறிப்பிடுவது வழக்கம். இத்தகைய அமைதியை சுதந்திரத்திற்குப் பிற்பட்ட அரசியல் வாதிகள் குலைத்து விட்டமை நெஞ்சுக்கு வருத்தமாக உள்ளது.

ஆனால் ஆரைப்பற்றை முஸ்லீம் கிராமங்கள் சூழ்ந்த பழம்பெரும் தமிழ்க் கிராமமாக செழித்து வளர்ந்துள்ளது. ஆரையம்பதியைச் சுற்றி காத்தான்குடி காங்கேயன் ஓடை பாலமுனை ஒல்லிக்குளம் ஆகிய முஸ்லீம்கள் வாழும் கிராமங்கள் உள்ளன. தமிழ் கிராமத்தின் மணியோசை முஸ்லீம் கிராமங்களிலும் முஸ்லீம் கிராமங்களிலிருந்து எழும் புனித தொழுகை ஒலி தமிழ்க் கிராமங்களிலும் கேட்பது தொன்றுதொட்டு நிலவி வந்துள்ள தெய்வ பந்தமாகும்.

ஆரைப்பற்றையின் மேற்கு எல்லையாக இருக்கும் வாவி வடக்குத் தெற்காக முப்பத்திரெண்டு மைல் நீளத்திற்கு பரந்து கிடக்கின்றது. இந்த வாவி மீன் பிடிப்போருக்கு ஜீவனம் நடத்தும் வளத்தினை அளித்து வருகின்றது. மீன்பிடிப்போர், இறால்வலை வீசுவோர் நண்டுக் கூடு போடுவோர்… வாவியில் நண்டுகளுக்கு மட்டுமன்றி ஓரா மீனுக்கும் செத்தல் மீனுக்கும் கூடு வைப்பதும் உண்டு. சில காலங்களில் வாவிக் கரையில் அத்தாங்கின் மூலம் இறால் பிடிப்பதும் உண்டு. தென்னோலை மடித்து இறால் கட்டுவதும் உண்டு. மட்றால் பிடிக்கும் காலத்தில் இது பம்பல். எங்கள் பகுதி மக்களுக்கு அது வாவியல்ல தாய்ப்பால் !

எங்கள் பகுதியில் உள்ள தேசிய கனிகளுள் கிண்ணம்பழம் முக்கியமானது. வேறு தேசிய கனிகளும் உள. கிழக்குப்புறமாக காட்டுரோட்டை தாண்டி கால் வைத்தால் குணுக்கு குணுக்கான பற்றைக்காடுகள். எங்கள் ஊரின் தேசியக் கனித்தோட்டம் இதுதான்! நூவல் முந்திரி ஈச்சை கறுக்கா காரல் துவரை மருங்கை சேனை கிளா சிமிட்டி முதலிய தேசிய கனிகள் காலத்துக்குக் காலம் பழுத்துக் குலுங்கும். கனிகளென்றில்லை எங்கழூரில் சில தேசிய மலர்களும் உண்டு. கார்த்திகைப்பூ கணங்காப்பூ ( செண்பக மலர் ) தாமரை திருக்கொன்றை வம்மி கோடைப்பூ (இது தோணாவில் வளரும் நீர்ப்பூ. பொங்கல் காலத்தில் இதற்கு பலத்த கிராக்கி). இவற்றுள் கனங்காவும் வம்மியும் பூக்கும் காலத்தில் ஊர் முழுவதும் இந்த மலர்களின் வாசனையில் நிரம்பி இருக்கும். ஆரையம்பதியின் தாவர இயலை குறிப்பிட்ட நான் இம்மண்ணுக்குரிய கீரை வகைகளையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். குமிட்டி நத்தைச் சூரி திராய் குறிஞ்சா பால் குறிஞ்சா முல்லை முசுட்டை முயல்பாஞ்சான் வாதமடக்கி மொசுமொசுக்கை காரல் கானாந்தி எனப் பட்டியல் நீளும். இவற்றைச் சுவையாக ஆக்குவதற்கு எங்கள் கிராமத்திற்கென்றே தனிப் பாக முறைகள் இருந்ததாக ஆரையம்பதி தாய்க்குலம் பெருமைப்படுவதை நான் அறிவேன்.

ஆரையம்பதி மக்களின் தொழி;ல் பன்முகப்பட்டது. தெருப் பெயர்களே சில குலத் தொழில்களைச் சொல்லும். அக்கரையில் - படுவான்கரையில் - களனி நிலம் கண்டு விவசாயம் செய்வோர் உண்டு. மீன்பிடித்தொழில் தும்புத்தொழில் - கயிறு திரித்தல் தும்பத்தடி கட்டுதல் வலை பின்னுதல் தோணி வெட்டுதல் வைத்தியம் சோதிடம் பிரம்புத் தொழில் என இப்பட்டியல் நீளமானது. ஆங்கிலக் கல்வியின் வரவாலே பயன்பெற்று உயர் அரசாங்க உத்தியோகங்களிலே அமர்ந்தும் எம் பிறந்த மண்ணுக்குப் பலரும் பெருமை சேர்க்கிறார்கள்.

எழுவானில் வங்காள விரிகுடாவும் படுவானில் மட்டக்களப்பு வாவியும் தழுவும் பிரதேசம் ஆரையம்பதி என்பது மீண்டும் அழுத்தம் பெறுவதை விரும்புவேன். கடலிலும் உப்பு நீர் வாவியிலும் உப்பு நீர். இதனாற் போலும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கும் நன்றி உணர்வு அம்மண்ணின் மைந்தருக்கு உண்டு அத்துடன் அவர்கள் ரோஷம் பாராட்டு மும் மானவீரர்களாகவும் வாழ்கிறார்கள்.

நன்றி – நவம் ஆசிரியர்

1 comment:

Note: Only a member of this blog may post a comment.