அண்ணன்மார் கதையும் வாய்மொழி வழக்காறுகளும்
வாய்மொழிப் பரவலை அடிப்படையாகக் கொண்ட நாட்டார் வழக்காறுகள் பலவற்றின் காலத்தைத் தீர்மானிப்பது மிகவும் கடினம். அவை உண்மையின் காரணமாகவோ நம்பிக்கையின் காரணமாகவோ தோன்றிப் பலரின் புனைவு களுக்கும் இடம் கொடுத்துத் தம்மைக் காலத்தால் வளர்த்துக்கொண்டே வந்திருப்பவை. அவற்றை முற்ற முழுக்க அப்படியே வரலாறாகக் கொள்ள முடியாது என்றாலும் அவை வரலாற்றுக்கான தரவுகளில் ஒன்றாகப் பயன்படும் என்பதை மறுக்க முடியாது. சில முடிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சில முடிவுகளுக்கு இட்டுச் செல்லவும் இத்தகைய வழக்காறுகள் பயன்படும். புதிராக வரலாற்றில் மறைந்து கிடக்கும் சில செய்திகளைச் சட்டென்று வெளிச்சம் போட்டுக் காட்டவும் இத்தகைய வழக்காறுகள் உதவுகின்றன.
நாட்டார் கதைப்பாடல்களில் ‘வரலாற்றுக் கதைப்பாடல்’ என்று ஒருவகை பிரிக்கப்படுகின்றது. அவை மக்கள் நாயகர்களாக விளங்குபவர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்டவை. அவற்றில் வீரம் சார்ந்தவை அதிகம். மக்களின் நம்பிக்கை, மிகைப்படுத்திப் பேசும் இயல்பு,
பலவற்றை இணைத்துக் கதை வளர்க்கும் கற்பனைத் திறன் முதலியவற்றை அக்கதைப்பாடல்களில் காணலாம். அக்கதைப்பாடலின் பல கூறுகள் மக்கள் வாழ்வில் செல்வாக்குச் செலுத்தி நிலை பெற்று வந்திருப்பதையும் அறியலாம். அவை ஏதோ ஒருவகையில் வரலாற்றுக்குத் துணைபுரிபவை.
‘மக்களைக் கவர்ந்துள்ள வீரச் செயல்களையே பாடல்களில் வடித்துள்ளனர். ஓரளவு நடந்த வற்றைப் பேரளவு கற்பனை கலந்து பாடித் தந்து உள்ளனர். மக்களின் தரம், நம்பிக்கை, இயல்பு, தன்மை, வாழ்க்கைமுறை ஆகியவற்றுக்குத் தக்கவாறு கதைப்பாடல்கள் புனைந்துரைக்கப் பெற்றுள்ளன’ (ப.7-8)
எனக் கதைப்பாடல்களின் இயல்பைப்பற்றி அ.நா. பெருமாள் கூறுகின்றார். ஓரளவு நடந்தவை என்னும் அந்த அடிப்படைதான் இக்கதைப் பாடல் களை வரலாற்றுக்குப் பயன்படுமாறு செய்கின்றன. கதைப்பாடல்களின் வரலாற்று அடிப்படையை ஏனைய வழக்காறுகள் கொண்டு உறுதிப்படுத்தவும் செய்யலாம்.
கொங்குப் பகுதியில் வழங்கப்பட்டு வரும் முக்கியமான கதைப்பாடல் ‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் அழைக்கப்படும் கதைப்பாடலாகும். இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன. கொங்கு வேளாளர் தலைவர் களாக விளங்கிய பொன்னர், சங்கர் என்னும் இரு சகோதரர்களின் வரலாற்றைக் கூறும் வீரப்பாடல் இது. இவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்னும் தங்கை ஒருத்தி, கதையின் முக்கிய பகுதி இந்தத் தங்கையின் நோக்கிலிருந்தே நகர்கின்றது. கதையின் இறுதிக் கட்டமான படுகளம் அருக்காணித் தங்கத்தை மையமாகக் கொண்டது. கதைத் தலைவர்களாகிய பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு கின்றனர். அதுவே ‘அண்ணன்மார் சாமி’யாகி யுள்ளது.
கொங்கு வேளாளர் சாதியில் அண்ணன் மாரின் பெயரைக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் பெரும்பான்மையாக உள்ளது. பொன்னர், சங்கர் ஆகிய அவர்களது இயற்பெயர் அவ்வளவாக வழங்கப் பெறுவதில்லை. பெரியசாமி, சின்னசாமி, பொன்னையன், சின்னையன் ஆகியவை இப் பகுதியில் மிகுதியாகச் சூட்டப்படுகின்றன. பெரிய அண்ணன் என்னும் பெயரும் வழங்குகின்றது. இவை பொன்னர், சங்கர் ஆகிய இருவரையும் குறிக்கும் பெயர்களே ஆகும். இரட்டைக் குழந் தைகள் ஆண்களாகப் பிறக்கும் என்றால் இந்தப் பெயர்களை அக்குழந்தைகளுக்குச் சூட்டுவது பெரு வழக்கு. அருக்காணி, தங்கம், தங்கம்மாள் ஆகிய பெயர்கள் பெண்களுக்குச் சூட்டப்படுகின்றன. இக்கதையில் வரும் பிற பாத்திரங்கள் பெயர் களாகிய ராக்கியண்ணன், முத்தாயி, பவளாயி, பாவாயி முதலிய பெயர்களையும் மக்கட் பெயர் களில் காணலாம்.
அண்ணன்மாரின் தந்தையாகிய குன்னடை யானை இக்கதைப்பாடல் ‘மசையன், மசச்சாமி, மசக்கவுண்டன்’ என்றெல்லாம் குறிப்பிடும். அவரது குணத்திற்கு உவமையாக ‘வெள்ளைச் சோளம்’ என்றும் கதை கூறும். இவையெல்லாம் ‘வெகுளி’ என்னும் பொருள் கொண்டவை. பங்காளிகளின் சூழ்ச்சிகளை எல்லாம் அறியாமல் எல்லாரையும் நம்பிவிடும் அவரது குணத்தை விவரிக்க இத்தகைய சொற்கள் கையாளப்படுகின்றன. இவை இன்று மக்கள் வழக்கிலும் உள்ளன. எதையும் நம்பி விடும் குணமுள்ள, விவரமில்லாத ஆட்களுக்குப் பட்டப் பெயர்களாக ‘மசையன்’ உள்ளிட்டவை வழங்கு கின்றன.
இப்பகுதியில் வழங்கிவரும் விடுகதை ஒன்றும் முக்கியமானது.
‘பெரியண்ணன் வேட்டிய மடின்னாலும் மடிக்க முடியாது
சின்னண்ணங் காச எண்ணுனாலும் எண்ண முடியாது’
என்பது அப்பழமொழி. வானம், விண்மீன்கள் என்பன இதற்கு விடை. இதில் பெரியண்ணன், சின்னண்ணன் என்று வருபவை அண்ணன்மாரைக் குறிப்பவையே. இந்த விடுகதையின் பிற வடிவங் களும் உள்ளன. ஆனால் கொங்குப் பகுதியில் குறிப்பாகக் கொங்கு வேளாளர் வழக்கில் இந்த வடிவமே காணப்படுகின்றது. மக்கள் வழக்கில் அண்ணன்மார் கதை எந்த அளவு இரண்டறக் கலந்திருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள். இவற்றால் அக்கதையின் செல்வாக்கு பிடிபடுகிறது.
ஆனால் இக்கதை அடிப்படையில் உருவாகி யுள்ள பழமொழிகள் சில உள்ளன. அவற்றைக் கதை கூறும் வரலாற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். இக்கதையின் முதற்பகுதி அண்ணன் மாரின் பெற்றோராகிய குன்னடையான் தாமரை நாச்சி ஆகியோரின் அவல வாழ்வையும் அவர் களுக்குப் பங்காளிகளே எதிரிகளாக விளங்கு வதையும் காட்டுகின்றது. கதையின் பின்பகுதி வேளாளர் தலைவர்களாகிய பொன்னரும் சங்கரும் வேட்டுவர் தலைவராகிய தலையூர்க் காளியுடன் வீரப்போர் புரிந்து மடிந்து போவதை விவரிக்கிறது. இக்கதைச் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர்.
அப்போதிருந்து இன்றுவரை வேளாளருக்கும் வேட்டுவருக்கும் நல்லுறவு கிடையாது. ஒரே பகுதியில் வசித்தாலும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கும் மனப்பான்மைதான் நிலவுகின்றது. இத்தொடர் பகைக்குக் காரணம் அண்ணன்மார் கதையில் வரும் சம்பவங்கள்தான். அண்ணன்மார் கதை வேளாளருக்கும் வேட்டுவருக்கும் நிகழ்ந்த சண்டை என்பதை மக்கள் இன்றும் தீவிரமாக நம்புகின்றனர். இக்கதை நிகழ்த்தப்படுதல் தொடர்பாக நிலவும் நம்பிக்கைகளை கோ.ந. முத்துக்குமாரசாமி கீழ்வருமாறு பட்டியலிடுகிறார்.
‘அண்ணன்மார் கதை’ படிக்கும் இடத்திற்கு வேட்டுவர் வரலாகாது; வீரப்பூர் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழாவின்போது அண்ணன் மார் அனியாப்பூரில் அம்பு தொடுத்தால் வேட்டுவர் குடியில் ஒரு பிணமாவது விழும்; அண்ணன்மார் கதையை வேட்டுவர் கேட்கவே கூடாது; ஊரில் கதை நடந்தால் வேட்டுவர் காது கேளாத தூரத்திற்குச் சென்றுவிட வேண்டும்’ (ப.34).
வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே உள்ள பகைக்குக் காரணம் இக்கதைச் சம்பவங்கள் தான் என்பதை இந்த நம்பிக்கைகள் காட்டுகின்றன. இக்கதை பங்காளிச் சண்டையைத்தான் மையமாகக் கொண்டது என்று ஆய்வாளரில் ஒரு பிரிவினர் குறிப்பிடுகின்றனர். அவர்கள், அண்ணன்மாரும் வேளாளரும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்னும் கருத்துடையவர்கள். ஆனால் வேளாளர் வேறு பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வந்து குடியேறி யவர்கள் என்னும் கருத்துடைய ஆய்வாளர்கள் அண்ணன்மார் கதை கொங்குப் பகுதியின் பூர்வ குடிகளாகிய வேட்டுவருக்கும் வேறு பகுதியில் இருந்து வந்து குடியேறிய வேளாளருக்கும் இடையே நடந்த சண்டைதான் என்று கருதுகின்றனர்.
இரண்டு சாதியைச் சேர்ந்த மக்கள் சில நூற்றாண்டுகளாகத் தம்முள் பகை பாராட்டி வருகின்றனர் என்றால் அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இட்டுக் கட்டிய ஒரு விஷயம் பகையை உருவாக்கி நிலைப்படுத்திவிட்டது என்பது வெறும் சமாதானம் தான். வேளாளருக்கும் வேட்டுவருக்கும் இடையே பெரும்போர் நடந்த தாகவே ‘அண்ணன்மார் சுவாமி கதை’ தெரிவிக்கிறது.
‘கடலும் சமுத்திரமும் கலந்து பிரிந்தாப்போல்
வெள்ளமதுபோல வீரமலை வனங்களெல்லாம்
வேடுதளம் நிற்குதப்போ
அந்தப்படை சேனை எல்லாம் அணிஅணியாய்
வந்து நிற்க’ (ப.395)
என்று வேடுவர் படையை வருணிக்கிறது அண்ணன் மார் சுவாமி கதை. அதுமட்டுமல்ல, வேட்டுவர் களைப் பூண்டோடு கருவறுக்க முடிவெடுத்துப் பொன்னர் செய்யும் போரை அண்ணன்மார் சுவாமி கதை இவ்விதம் விவரிக்கிறது:
தட்டைய நாடும் தாராபுர நாடும்
பள்ளிப்பொதி நாடு பருத்திப்பொதி நாடு
வெத்திநாடு வேங்கல நாடு இதுவெல்லாம் வெட்டியே சங்கரித்து
ஆத்தூரு பின்னம் அடுத்த பவுத்திரமும்
காங்கைய நாடும் கருவூர்ப்பதி நாடும்
வெண்டையம் குலுக்கி நாடு வெத்தியுள்ள நன்னாடும்
பூந்துறை நாடும் புகழ் பெரிய நன்னாடும்
ஓமல நாடு ஓங்குபுகழ் அறைய நாடு
கிழக்கு வளநாடு கீர்த்தி உள்ள மேனாடு
பெரிய மலையாளம் பெம்ந்துறையும் நன்னாடு
வேடுதளம் உள்ளதெல்லாம் பொன்னர் வெட்டிக் கருவறுத்து
ஆணென்று பிறந்ததெல்லாம் பொன்னர் அறுத்துச் சிரமறிந்தார்
(ப.413)
அதாவது வேட்டுவர் வாழ்ந்த பல இடங் களுக்கும் பொன்னர் படை சென்று அவர்களைக் கருவறுக்கும் விதத்தில் போர் புரிந்ததாக இப்பகுதி தெரிவிக்கிறது. அக்காலத்தில் பெரும்பகுதியும் காடாக இருந்த கொங்கு நாட்டில் வேட்டுவர் குடியிருப்புகளைத் தாக்கி அழித்தது வேளாளர் படை எனக் கொள்ள இடமிருக்கிறது. வேளாண்மை நில உருவாக்கத்திற்கு வேட்டுவரையும் அவர் சார்ந்த காடுகளையும் அழித்தல் தேவை. ஆகவே இது மிக முக்கியமான போர். வேட்டுவர்களும் மிகக் கடுமை யாகப் போராடி உள்ளனர். வேட்டுவப் பெண் ஒருத்தி பொன்னரைப் பார்த்து,
‘நாங்கள் பலி எடுக்காது போனாலும் நலமுடனே எங்களுட
வயிற்றுக்கரு உனை வகையாய் பலிவாங்கும்’ (ப.413)
என்கிறாள். அந்த அளவு ஆக்ரோஷமான போர் என இக்கதை கூறுகின்றது. வேட்டுவர் சாதியே அழிந்துவிடும் என்னும் நிலையில் மாயவரின் செயலால் அந்தச் சாதிக்குப் பொன்னர் கருணை காட்டுகிறார். அதை,
‘கட்டை தழையுமடா கருவுகள் உண்டாகுமினி
வெட்ட வெட்டத்தான் தழைக்கும் வெத்தி வேங்கள நாடு’ (ப.415)
என்கிறது கதை. இன்றைக்கும் கொங்கு வேளாளர் இடையே வழங்கிவரும் பழமொழி ‘வெட்ட வெட்டத் தழைக்கும் வேடுவர் படை’ என்பது. இதன் திரிபு வடிவமாக ‘வெட்ட வெட்டத் தழை வான் வேட்டுவன்’ என்பதும் வழங்கி வருகிறது. வேட்டுவரின் வீரப்போர் தொடர்பான வியப் பாகவே இப்பழமொழியைக் கருத வேண்டியுள்ளது. கதைப்பாடலின் அடியும் பழமொழியும் பொருந்திப் போகின்றன. பழமொழியைப் பொருத்தமான இடம் நோக்கிக் கதைப்பாடலாசிரியர் எடுத்தாண்டு இருக்கலாம். அல்லது பாடல் அடிகள் பின்னர் பழ மொழியாக ஆக்கம் பெற்றிருக்கலாம். எவ்வாறு இருப்பினும் போர் காரணமாக உருவான பழ மொழியே இது.
வேட்டுவரின் எண்ணிக்கைப் பெருக்கத்தைக் குறிப்பதாக ஒரு பழமொழி வழங்கி வருகிறது.
‘வேர் வகையை எண்ணினாலும் வேட்டுவர்
வகையை எண்ண முடியாது’
என்பது அது. வேட்டுவருக்குள் இருக்கும் குல வகையைச் சுட்டுவதாக இப்பழமொழிக்குப் பொருள் கொள்வது ஒருபுறம் இருப்பினும் போரில் எதிர் பாராத அளவு வேட்டுவர் படை ஈடுபட்டதைக் கொண்டு அவர்களது எண்ணிக்கையைப் பற்றிய வியப்பாக இப்பழமொழி உருவாக்கம் பெற்றிருக்கக் கூடும் என்று எண்ணலாம். பழமொழிக்குச் சூழல் சார்ந்த பொருள் உண்டு. வேட்டுவரிடமே இப் பழமொழி வழங்கும்போது குலவகையைக் குறிப் பதாகக் கருதலாம். வேளாளரிடம் இது வழங்கும் போது விதவிதமான வகையில் வேட்டுவர் படை வந்ததைக் குறிப்பதாகவே பொருள் குறிக்கிறது. இரண்டு பிரிவினரிடமும் இப்பழமொழி இவ்வாறு வெவ்வேறு பொருளில் வழங்கி வருகிறது.
வேட்டுவர் வேட்டைத் தொழில் செய்யும் சாதி யினர். அவர்களுக்குக் காடே ஆதாரம். வேளாளர் களுக்கு வேளாண்மைத் தொழில். காட்டை அழித்து விளைநிலமாக ஆக்குதல் இவர்கள் வேலை. காட்டை ஆதாரமாகக் கொண்ட சாதி காட்டைக் காக்கப் போராடுவதும் வேளாண் மையை ஆதாரமாகக் கொண்ட சாதி காட்டை அழித்து விளைநிலமாக மாற்றப் போராடுவதும் இயல்பு. இந்த இரண்டு முரண் இயல்புகளுக் கிடையேயான பகைதான் அண்ணன்மார் கதை. அதனால்தான் இன்று வரைக்கும் இந்த இரண்டு சாதிகளுக்கும் இடையே பகை நீடித்துக் கொண்டே இருக்கிறது.
வேட்டுவரைக் கண்டு ஒதுங்கிப் போகும் நிலையை வேளாளர் கடைப்பிடிக்கின்றனர். அதற் கேற்ப அவர்களது குணாம்சம் பற்றிய சில பழமொழிகள் உருவாக்கம் பெற்றுள்ளன.
‘வெள்ளாட்டுக்குத் தீனி போடக் கூடாது;
வேட்டுவனுக்குச் சோறு போடக் கூடாது’
என்பது ஒரு பழமொழி. வெள்ளாட்டுக்குத் தீனி போட்டு அன்பாக வளர்த்தாலும் அதற்கு நன்றி விசுவாசம் இருக்காது என்பது பொது நம்பிக்கை. வளர்த்த கடா மார்பிலே பாய்தல் என்னும் வழக்கும் உண்டு. ஆகவே வெள்ளாட்டின் மீது அன்பு வைத்துத் தீனி போட்டு அதை வளர்க்கக் கூடாது என்கிறது பழமொழி. அதேபோல வேட்டுவனுக்குச் சோறு போட்டால் அவனும் நன்றி விசுவாசத்தோடு நடந்துகொள்ள மாட்டான் என்பது பழமொழியின் கருத்து.
இது போன்ற மற்றொரு பழமொழி,
‘வயிறு முட்டச் சோறு போட்டாலும்
வேட்டுவன் மோட்டுவளையப் பாப்பான்’
என்பது. இந்தப் பழமொழியைக் கேட்டதும் போட்ட சோறு போதாமல் வீட்டின் உள்பகுதி மேற்கூரையான மோட்டுவளையைப் பார்ப்பான் என்று பழமொழி கூறுவதாகக் கருதினேன். இப் பழமொழியை எனக்குக் கூறிய ஆய்வாளர் இராச சேகர தங்கமணி ‘வயிறு முட்டச் சோறு போட்டாலும் கொஞ்சம்கூட நன்றி விசுவாசம் இல்லாமல் இந்த வீட்டில் திருட முடியுமா என்று நினைத்து அதற்காக வீட்டின் மேற்கூரை, பிரித்து உள்ளிறங்க வாகாக இருக்கிறதா என மோட்டுவளையைப் பார்ப்பான்’ என்று பொருள் கொள்ளலாம் என்றார். அதாவது வேளாளருக்கு வேட்டுவர் மீது நம்பிக்கையின்மையைக் காட்டும் பழமொழி இது என்றாகிறது. அவர்களைத் திருடர், நன்றி யில்லாதவர் என இப்பழமொழி கட்டமைக்கிறது.
கால மாற்றத்தால் வேட்டுவரும் இன்று வேளாண்மைத் தொழிலுக்கு வந்துவிட்டனர் எனினும் அந்தப் பழம்பகை இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. வேளாளரிடமிருந்து அண்ணன்மார் கதை பங்காளிச் சண்டைதானே ஒழிய சாதிகளுக்கிடையேயான சண்டை அல்ல என்னும் குரல் ஒலிக்கக் காரணம் உண்டு. வேளாளர் வேறு பகுதியில் இருந்து வந்து குடியேறியவர் என்பதற்கும் ஓர் ஆதாரமாக அண்ணன்மார் கதை இருக்கிறது. வேளாளர் இப்பகுதியின் மண்ணின் மைந்தர் என்னும் பெருமையை நிறுவிக்கொள்ள அண்ணன்மார் கதை பங்காளிச் சண்டைதான் என்று வழக்காறுகளும் இதற்கு ஒத்துழைக்கவில்லை.
பயன்பட்ட நூல்கள்:
1. சக்திக்கனல் (ப.ஆ), 2001, அண்ணன்மார் சுவாமி கதை, சென்னை, நர்மதா பதிப்பகம், ஏழாம் பதிப்பு.
2. அ.நா.பெருமாள், 1987, தமிழில் கதைப்பாடல், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
3. கோ.ந. முத்துக்குமாரசாமி, 2002, அண்ணன் மார் சாமி கதை ஒரு பன்முகப் பார்வை, கோவை, பேரூர் புலவர் பேரவை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.