கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 18, 2013

சாதி என்றால் என்ன ?


சாதி என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன?

சாதி என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன?


மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான்.  ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது. அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர்.  இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள்  தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன.  இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே சாதிகள். 

ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும்.  அண்ணல் அம்பேத்கர் ஒருவித வரலாற்றுச் சட்டகத்தை மனதில் கொண்டு  இத்தகைய போக்கை பிராம்மணீயம் என அழைக்கிறார். ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை.

மனிதர்கள் அனைவரும் ஒன்றே, சாதி வேறுபாடுகள் காலாவதியானவை என்கிற எண்ணமே மானுடநேய எண்ணமாகும். ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.

சாதி என்றால் என்ன? வர்ணம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா?

ஒருவர் தன்னுள் எழும் ஆர்வத்தினால் திறமை பெறும் தொழில் சார்ந்த வாழ்க்கைமுறைக்கு வர்ணம் என்று பெயர். இது நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது.  இவற்றில் ஒன்றையோ, பலவற்றையோ தேர்ந்தெடுத்து ஹிந்துக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இதிகாசங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. சாதி என்பது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவது. பெற்றோரின் சாதியே அவர்களின் குழந்தைகளுடைய சாதியாகும் என்று சொல்லுவது சாதி முறை.

வேதகாலத்தில் சாதி என்பதே இல்லை, வர்ணம் என்பது இருந்தது.  வர்ணம் வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதருக்குத் தந்தது. சாதி அந்த சுதந்திரத்தை முற்றிலுமாக மறுத்தது.  சாதியத்தை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போதைய பொதுவான வெகுஜன புரிதலில் வர்ணமும் சாதியும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அது தவறான புரிதல்.

அப்படியானால், சாதியத்திற்கு வேதங்களில் இடம் இல்லையா?

நிச்சயமாக, இல்லை. அண்ணல் அம்பேத்கர் வேதகால முறை குறித்து மிகவும் விரிவாக விவரிக்கிறார்.  வர்ணாசிரமம் அடைந்த மாறுபாடுகளை அவர் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார்:

முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது.

தொடக்க காலத்தில் ஒருவரது வர்ணத்தை மனு மற்றும் சப்தரிஷிகள் எனும் அமைப்பினைச் சார்ந்த முதுமக்கள் தீர்மானிப்பார்கள். நேர்முகத் தேர்வு போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம் இது தீர்மானிக்கப்பட்டது. இந்த வர்ண ஒதுக்கீடானது ஒரு யுகம் எனப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அப்போது மனு மற்றும் சப்தரிஷி எனக்கூறப்படும் முதுமக்கள் குழுவும் மாற்றி அமைக்கப்படும். இதுவே மன்வந்தரம் என கருதப்பட்டது. புராணங்களில் கூறப்படும் இந்த மன்வந்தரம் என்பதே ஒரு மனிதரின் வர்ணம் ஒதுக்கிடப்படும் காலகட்டமாகும். இதன் மூலம் வர்ணம் என்பது ஒருவருக்கு கொடுக்கப்படும் பதவி என்பதும் அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவே இருந்தது என்பதும் தெளிவாகும்.

இந்த முறையிலிருந்த குறைபாடு என்னவென்றால், இந்த நேர்முகத் தேர்வு அத்தனை சரியாக ஒருவரது திறமைகளை மதிப்பிட முடியாது. மேலும் ஒரு வர்ணத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முறையான பயிற்சியும் இருக்காது.

எனவே குருகுல முறை பண்டைய பாரதத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆச்சாரியர் எனும் குரு 12 ஆண்டுகள் காலத்திற்கு மாணாக்கருக்கு பயிற்சி அளித்து அதன் அடிப்படையில் மாணவரின் வர்ணம் எது என்பதனை நிர்ணயிப்பார். அந்த வர்ணமே மாணவரின் வாழ்க்கை முழுக்க நிலைக்கும். இந்த முறை முந்தைய முறையைக் காட்டிலும் சீர்மைப்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்த முறையிலும் வர்ணம் என்பது பிறப்படிப்படையில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் எப்போது உபநயன சடங்குகள் வீட்டிலேயே செய்யப்படும் முறை உருவாகியதோ அப்போது பிறப்படிப்படையிலான வர்ண-சாதி முறை ஏற்பட்டது.

அம்பேத்கர் இவ்வாறு கூறியுள்ளார் சரி. ஆனால் வேதங்களில் அம்பேத்கரின் இந்த வரலாற்று ஊகங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?

ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில இங்கே.

வேத மகரிஷிகள் பலர் இன்று தாழ்த்தப்பட்டதாக கருதப்படும் குலங்களில் வந்தவர்களே ஆவர். உதாரணமாக மீமாம்ச பாஷ்யம் எழுதிய சாபர மகரிஷி வேடரின் மகனாவார். இன்று சாபரர் எனும் குலம் தாழ்த்தப்பட்ட குலமாகும். சாபர பாஷ்யம் இந்து தத்துவ ஆன்மிக உலகின் அரும்பெரும் பொக்கிஷமாக விளங்கும் போது அந்த மகரிஷியின் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டிருப்பது இந்து தருமத்துக்கு எதிராக இழைக்கப்படும் பாவமல்லவா?

சத்யகாமன் எனும் பாலகனுக்கு தன் தந்தை  யார் என்பதே தெரியாது. ஆனால், அவன்  கௌதம மகரிஷியின் குருகுலத்தில் ஏற்கப்பட்டு வேத மந்திரங்களை காணும் சக்தி பெற்ற பெரும் அந்தண மகரிஷியானார் என சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது.

தாசி பெண்ணின் மகனாகப் பிறந்து, சூதாடும் மனைகளில் வளர்ந்தவரென்ற போதிலும், கவாக்ஷ மகரிஷி ஞானம் உடையவராகத் திகழ்ந்தார். வேத மந்திரங்களை ஞானக் கண்ணால் கண்ட மந்திர திரஷ்டா எனப்படும் மிகவும் உயர்ந்த ஆன்மிக நிலையில் வாழ்ந்த மகரிஷி அவர். அவரால் அருளப்பட்ட வேதமந்திரங்கள் மிக உயர்ந்த முக்தி நிலையை அளிப்பவை. அவரே சரஸ்வதி நதி தீரத்தில் நடந்த சோமயாகத்தின் எஜமானராக இருந்தருளினார் (ரிக் வேதம் - ஐதரேய  பிராம்மணம்). அவரே நீர் நிலைகளைக் கட்டுப்படுத்திய சுயநலவாதிகளை அழித்து நீர் நிலைகளை மக்களுக்கு பொதுவான வளமாக ஆக்கினார் (சாமவேதம் - கௌஷீதகீ பிராம்மணம்). ரைவகன் எனும் வண்டி இழுப்பவர் பிரம்மஞானம், கொண்டிருந்தார் என்றும் அவரிடம் மன்னரே வந்து மண்டியிட்டு ஞானம் பெற்றார் என்றும் சாந்தோக்ய உபநிடதம் கூறுகிறது. பவிஷ்ய புராணத்தின் படி பராசரரின் அன்னை சூத்திரர் ஆவார். பாரசரருக்கும் மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவரே நான்கு வேதங்களையும் தொகுத்தளித்த மாமுனிவரான வேத வியாசர்! ஐததேரய பிராம்மணத்தை எழுதிய மஹிதாச மகரிஷியும் சூத்திர குடும்பத்தில் பிறந்தவரே ஆவார்.

எனவே, வேத காலத்தில் வர்ணம் பிறப்படிப்படையில் அமையவில்லை, வேத இலக்கியத்தில் பிறப்பு அடிப்படையிலான சாதியத்துக்கு இடமில்லை என அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதற்கு் தெள்ளத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

சுதந்திரத் தன்மையுடைய வர்ண அமைப்பு, எதனால் சுதந்திரமற்ற சாதிய அமைப்பாக மாறியது?

வேத நெறி சுதந்திரத்தை கொள்கையாகவும், செயலாகவும்கொண்டது. ஆனால், பிற்காலத்தில் வேத நெறிக்கு எதிராகத் தோன்றிய சுயநலவாதங்கள் வர்ண அமைப்பை சுதந்திரமற்ற அமைப்பாக மாற்றின. வேதநெறியை இகழ்ந்தன.

ஆனால், பழங்கால நூல்கள் சில வேதநெறிக்கு எதிராக சாதியம் பேசுகின்றனவே. அவை கூறும் சாதியக் கருத்துக்களைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

இப்பழங்கால நூல்களில் உள்ள கருத்துக்களை மாற்றலாம் என இந்து மதம் சொல்லுகிறது. இந்த நூல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை, தற்காலிக சட்டங்கள் (ஸ்மிருதி) என்று இந்து மதம் வரையறுக்கிறது. ஆதிக்க மனப்பான்மை இன்றி உயிரினங்கள் அனைத்தும் சம உரிமையோடு  சுதந்திரமாக  வாழவேண்டும் என சொல்லுகிற வேதநெறியை இந்துமதம் மாற்றமுடியாதது, நிரந்தரமானது (ஸ்ருதி) என வரையறுக்கிறது.

சாதிப்பாகுபாடுகளை வலியுறுத்தும் தர்ம சாஸ்திரங்கள் இந்து தருமத்தின் அடிப்படை வேதங்களோ, உபநிஷதங்களோ, கீதையோ அல்ல - அவை ஸ்மிருதிகள் எனப்படும் தற்காலிக சட்டங்களே. இச்சட்டங்கள் இன்று பெரும்பாலும் எங்கும் செயல்முறையில் இல்லை.

ஆனால் அதுமட்டும் போதாது. கருத்தளவிலும் இச்சட்டங்களை இந்துக்கள் முழுமையாக மறுதலிக்க வேண்டும். இன்று உலக அரசியல் சட்டங்களில் உன்னதமான அரசியல் நிர்ணய சட்டமாக விளங்கும், அன்ணல் அம்பேத்கர் தலைமையில் தேசபக்த தலைவர்கள் இணைந்து உருவாக்கிய பாரத அரசின் அரசியல் நிர்ணய சட்டமும், அதன் அடிப்படை கருத்தாக்கமுமே இந்துக்களின் சமூக செயல்பாடுகளை நிர்ணயிக்கும் சட்டமாகத் திகழ வேண்டும்.

ஆனால் சாதி முறை என்பது இனரீதியில் உருவானது, கைபர், போலன் கணவாய் வழியாக படையெடுத்த ஆரியர்கள் இங்குள்ள பூர்வீகவாசிகளான திராவிடர்களை அடிமைப்படுத்தி அவர்களை சூத்திரர்களாக்கினார்கள். பிராம்மணர்கள் ஆரிய வந்தேறிகள். இதைத்தான் ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்குமான போராட்டமாக இந்து மதத்தின் அடிப்படையான ரிக்வேதமே சொல்கிறது எனக் கூறுகிறார்களே?

இது குறித்தும் பாபாசாகேப் அம்பேத்கரே தெளிவுபடுத்தியுள்ளார். ஆரிய - தஸ்யு எனும் பதங்கள் இனத்தைக் குறிப்பவை அல்ல என அவர் கூறியுள்ளார். ஆரியப் படையெடுப்பு என்பதே ஒரு இனவாதக் கற்பனையாகும் எனக் கூறும் அம்பேத்கர், பிராம்மணர்களும் சரி சூத்திரர்களும் சரி வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறும் ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டினை முழுமையாக மறுத்துள்ளார். அவர் கூறுவதாவது -

“ஆரியப் படையெடுப்புக் கோட்பாடானது உண்மைத்தகவல்களின் மேல் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக முதலில் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு உருவாக்கப்பட்டு பின்னர் அதனை உண்மையாக நிரூபிக்கும் விதத்தில் தகவல்கள் தேர்ந்தெடுத்து புனையப்பட்டதாகும். அது ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும் தரையில் வீழ்கிறது.

வேத இலக்கியங்களில் இந்தியாவின் மீது ஆரிய இனம் படையெடுத்ததற்கோ அல்லது இங்கு வாழ்ந்த பூர்விக வாசிகளாக கருதப்படும் தஸ்யூக்கள் அல்லது தாஸர்களை வெற்றிக்கொண்டதற்கோ ஆதாரமில்லை. தாஸர்கள் அல்லது தஸ்யூக்களுக்கும் ஆரியருக்குமான வேறுபாடு இனரீதியிலானது என்பதற்கோ ஆரியர்களின் தோல் நிறமும் தாஸ-தஸ்யூக்களின் தோல் நிறமும் வேறுபட்டது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை.”

அம்பேத்கர் மேலும் கூறுகிறார்: “தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்கள் என்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே. பிராம்மணர்கள் நாகர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உட்படுத்தப் பட்டவர்களும் நாகர்களே.”

சரி, அம்பேத்கர் இப்படி கூறுகிறார். ஆனால் வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? திராவிட நகரங்களான சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரியர்கள் அழித்ததாகவும் அதன் பிறகு அவர்கள் சாதி முறையை ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார்களே?

இல்லை. இன்றைய நவீன வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் அம்பேத்கர் கூறிய கருத்துக்களில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்ல ஆரிய-இனவாதக் கோட்பாட்டுக்கும் அப்படி ஒரு இனம் இந்தியாவில் பழங்காலத்தில் நுழைந்ததற்கும் எவ்வித மரபணு ஆதாரமும் இல்லை என நவீன மரபணு ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். பிராம்மண சாதி எனக் கருதப்படுபவர்களுக்கும் நம் தேச காடுகளில் வசிக்கும் வனவாசி மக்கள் சமுதாயங்களுக்கும் மரபணுத் தொடர்புகள் உள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது.

சிந்து சமவெளியில் அண்மைக் காலங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஜிம் ஷாப்பர் எனும் அகழ்வாராய்ச்சியாளர் கூறுவதாவது: “அகழ்வாராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியிலிருந்து படையெடுப்பு ஏற்பட்டதாக காட்டவில்லை. (பண்டைய பாரதத்தின்) பண்பாட்டு வளர்ச்சி இந்த மண்ணிலேயே ஏற்பட்ட கலாச்சார பரிமாணமே ஆகும்.”

அதைப்போலவே இருபது ஆண்டுகளும் மேலாக ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட மார்க் கென்னோயர் தம் இணைய தளத்தில் கூறுகிறார்: “பழைய அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதியது போல ஆரிய படையெடுப்பு நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக்கும் அதன் அருகாமையில் வாழ்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட உறவுகள் தொடர்புகள் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” மேலும், ஹரப்பா என்பதே ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஹரிவிப்யாவாக இருக்கலாம் எனும் அறிவார்ந்த ஊகத்தையும் தெரிவிக்கிறார் (ஹரிவிப்யா எனும் இடத்தில் புரு வம்சத்தவர்களுக்கும் துர்வாச வம்சத்தவர்களுக்கும் போர் நடந்ததாக ரிக் வேதம் தெரிவிக்கிறது. அவர்கள் இருவருமே வேத பண்பாட்டை சேர்ந்தவர்கள்.)

அதைப் போலவே, பழைய மரபணு ஆராய்ச்சியாளர்கள் சிலர் சில மேம்போக்கான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஆரிய படையெடுப்புக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், அண்மையில் நடத்தப்பட்ட முழுமையான ஆராய்ச்சிகளோ இந்திய சாதிகளின் மரபணுக்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருப்பதுடன் அவற்றில் வெளியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தின் தாக்கம் (ஆரியப் படையெடுப்பு நடந்திருந்தால் எப்படி இருந்திருக்க வேண்டுமோ அப்படி) இருக்கவே இல்லை எனத் தெரிவிக்கின்றன.

அது மட்டுமலல. அம்பேத்கர் கூறியதைப் போலவே, (”தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்களென்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே”) இங்குள்ள அந்தண சாதியினரும் வனவாசிகளும் மரபணுத் தொடர்புடையவர்கள் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.