வெல்க காளி !!!
குருகுல வரலாறு
எண்சீர் விருத்தம்
முத்திதருஞ்சத்துருசங்காரிருத்ரி
முக்கணிசற் குணவிமலி யருளா னந்தி
நலமாகப்பருவதமாங்கயிலைதன்னை
பத்திரமாய்க் காத்திடும்பூ வலவன் வேடன்
பார்புகழும் வெட்டுவன்கள் வலவன் சீல
வித்தைமிகும் மாவலவன் சரிதங் கூற
வேண்டுவரந் தானுதவிக் காப்பா ளின்றே!
(பஞ்சவர்ண ராஜகாவியம்)
பாரத நாடு
இப்பரந்த வுலகம் பல தேசங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் நமது இந்திய நாடுமொன்று, இந்திய நாட்டைப் பாரதநாடு, புனிதநாடு, பொன்னாடுயெனப் பல பெயர்களிட்டு அழைக்கப்படுகின்றது. விவசாயம், வியாபாரம், கைத்தொழில் போன்ற துறைகளில் இந்திய நாட்டினரே தலைசிறந்து விளங்கினரென்று நமது பண்டைநூற்களும், அந்நிய நாட்டாரின் நவீன நூற்களும், போதிய சாட்சியளிக்கின்றன. வியாபாரத்திற்கென, தற்காலம் போன்ற கப்பல் வசதியில்லாத அக்காலத்தில், கடல்கடந்து அந்நிய நாடுகளுக்குச்சென்று, பொருள்திரட்டி இந்திய நாட்டைப் பொன்னாடாக விளங்கவைத்தனர். உலோகப்பொருள்களை நிலத்திலிருந்து எடுத்து நகைகள், பாத்திரங்கள், பண்டங்களாகச்செய்து உபயோகித்த தனிப்பெருமை நமது இந்திய நாட்டினருக்குத்தானுண்டு. சுருக்கிக் கூறுவோமாகில் இந்திய நாடொன்றே இவ்வுலகத்திற்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளது. இத்தகைய மேம்பாட்டினை இந்திய நாட்டினர் கொண்டு விளங்கியதற்குத் தகுந்த காரணகர்த்தர்கள் அன்று அரசுபுரிந்து வந்த மன்னர்களேயாகும். “மன்னைப்போல் தேசம், மாதாபோற் பிள்ளை” யென்ற பழமொழிப்படி நாட்டினர் நன்மைபுரிவதும், தீமை புரிவதும், அரசனின் நடத்தையைப் பொருத்திருக்கிறது. எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட காலத்தில் மன்னன் உத்திரவுப்படி அதிரச்செய்யும் முரசின் வொலியையும், எக்காளவொலியையுங்கேட்டு, குடிகள் படையாகத் திரண்டு எதிரிகளைத் துறத்தி மன்னனை மகிழச்செய்ய முற்படுவது அரசன் குடிகளிடங்காட்டும் உண்மை அன்பினால்தான். இத்தகைய முறையில் அரசுரிமை நடாத்திய இந்தியநாட்டு இறைவர்கள் பலர். அவர்களின் தலைசிறந்து விளங்கியவர்கள் சந்திரகுல மன்னர்கள். வீரமே உருவாகத் திரண்டு தோன்றியவர்களும், வீரத்தை இந்திய நாட்டிற் ஸ்தாபித்தவர்களும், சந்திரகுல மன்னர்களென்பதை உலகசரித்திரமும், பாரதபாகவதாதிகளும் பகருகின்றன. இவர்கள் அரசுபுரிவதையும், எதிரிகளேற்பட்டகாலத்து போர்புரிவதையுமே சிறந்ததாகக் கொண்டவர்கள். ஆயினும் தங்களுக்கு எதிரியாகத் தோன்றிய எவனையும், மறைமுகமாக விருந்து தாக்குவதென்ற பழிதொழில் இவர்களுக்கிருந்ததேயில்லை. எதிர்ப்பு ஏற்பட்டால் நேர்முகமாக நின்று தங்கள் வீரத்திறமையைக்கொண்டு எதிரிகளைத் தோற்கடித்து வெற்றியடைவதே இவர்களின் உண்மைத்தர்மம். இத்தகைய வீரப்பெருமை சந்திரகுல மன்னர்களுக்கேவுரியது.
குருகுலம்
சந்திரகுல மன்னர்களைக் குருகுல மன்னர்களென்றும் அழைப்பதுண்டு. சந்திரகுல மன்னனான புரூரவர்மன் வழித்தோன்றிய யயாதி ராஜனுக்கு குருயென்ற புதல்வனொருவனிருந்தான். இவனுக்குக் கல்வி கேள்வியிற்சிறந்த பயிற்சியும் ராஜ்யபாரம் நடத்துவதில் தகுந்த பாண்டித்தியமும், எதிரிகளைத் தோல்வியுறச்செய்து வீரக்கொடி நாட்டி, வெற்றிபெறுவதில் மிகத்திறமையுமுண்டு. இப்புகழ்படைத்த மன்னனின் வழிவந்த யாவருக்கும் “குருகுலத்தார், குருகுல மன்னர்,” யென மற்ற பெயர்களும் வழங்கப்பட்டன. இக்குருகுல பரம்பரையில் கௌரவர்கள், பாண்டவர்கள், தோன்றினர். இக்குருகுல பாண்டவர்களின் கொடி ஒரு காலத்தில் இந்திய நாட்டிலன்றி இவ்வுலகெங்கும் பறந்ததுண்டென்பதற்குப் பாண்டவர்களிலொருவரான யுதிஷ்டிரான் புரிந்த “இராஜசூயயாகம்” ஒன்றே சிறந்த அத்தாக்ஷியாகும். இதுவன்றிப் பரதன் என்ற சந்திரகுல மன்னன் இந்திய நாட்டைப் பரிபாலித்து வந்த காரணங்கொண்டே நமது இந்திய நாட்டிற்குப்பரதநாடு, பாரதநாடுயெனப்பெயரிடப்பட்டது. இதிலிருந்து குருகுலத்தினரின் வீரம், போர்வலிமை, அரசுத்திறன், எதிரியின்மை, போன்ற உண்மை ஆதிக்கத்தை நாம் நன்குணரப்பாலது. சகோதரபான்மையுள்ள கௌரவ, பாண்டவர்களுக்குள் நாட்டின் காரணமாகவும், பாண்டவர்களின் மேட்டிமை காரணமாகவும் பிணக்கு ஏற்பட்டது. கௌவரவர்கள் பாண்டவர்களைக் கொடும் விரோதிகளாகப் பாவித்தனர். பல வஞ்சகத் தீஞ்செயல்களை வகுத்தனர். சாம, பேத, தான, தண்டமெனுஞ் சதுர்விதவுபாயங்களைப் புரிந்தனர். அவைகளின் விளைவே பாரதப்போர். குருகுலப்போரென்றுஞ் சொல்லுவதுண்டு. பாண்டவ, கௌவரவர்களின் இப்பெரும் போரைப் பேசாதார் சிலரேயாவர். இப்போரிற் பல லக்ஷங் குருகுல வீரர்கள் உயிர் நீத்தனர். பலகோடிப்பொருள்கள் விரையமாயின. இச்சண்டையொன்றே சிறப்பாக குருகுலத்தினரின் வீழ்ச்சிக்கும், பொதுவாக பாரத நாட்டின் குறுக்கத்திற்கும் காரணம். வெற்றி பெற்ற பாண்டவர்கள் வேந்தராக விளங்கினர். பாண்டவர்களுக்குப் பின்னர் குருகுல பரம்பரையினர் க்ஷீணித்தனர். பல விரோதிகளேற்பட்டுச்சண்டையின் காரணமாகவே வடநாடு விட்டுத்தெற்கு நோக்கி வந்து பெத்தாப்பிநாட்டை, உடுப்பூர் என்ற தலைநகரிலிருந்து அரசாண்டனர். இக்கால முதல் குருகுலத்தினர் முன்போல முன்னேறவாரம்பித்தனர். இங்கு மன்னனாக விருந்தவர்கள் அநேகர். அவர்களின் மிகச்சிறந்தவன் நாகராஜன். இவரின் தெய்வபக்தி, விருந்தோம்பல், சீரிய ஆட்சி, முதலிய ஒழுக்கத்தினைப்பற்றி இன்றும் பல நூற்கள் புகழ்ந்து கூறுகின்றன. இவருக்குக் குலதெய்வம் காளிதேவி, எக்காரியத்திலிறங்குவதாயினும், காளிதேவியின் அருள் பெற்றே இறங்குவதென்ற விரதம்பூண்டவர். இவர் காலத்தில் குருகுலத்திற்கே சிறந்த புகழ் பெருக வாரம்பித்தது. ஆனால் புத்திரப்பேறின்றி இவர் விசனக்கடலில் வீழ்ந்திருந்தார். காளிதேவியின் கருணைப்பெருக்கால், இவரது மனைவி தத்தையென்பவள் ஓர் ஆண் மகவையீன்றனள். திண்ணன்யெனப் பெயரிடப்பெற்ற அச்சிறு குழந்தை இளமைக் காலந்தொட்டே நல்லொழுக்கத்தையும், கல்வியையும், உலகானுபவத்தையும் பழகியதின்றி, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், முதலிய துறைகளிலும் மிகத் தேர்ச்சியுற்று வீரவாலிபனாக விளங்கினான். ஒருநாள், நாணன், காடன் யெனும் இருவர்கள் பின்தொடர திருக்காளத்தி மலைச்சாரலில் வேட்டையாடிக்கொண்டு சென்ற திண்ணன், ஆங்கு குடுமித்தேவரைக்கண்டு, ஆராக்காதல் கொண்டு, பக்தி மேலீட்டால் தேவருக்கு இறைச்சியமுது படைத்துப் பூசிக்குந்தருணம், அவர் திருக்கண்ணிலிருந்து இரத்தம் பெருகுவதைக்கண்டு மனம்பெறாமல், தன் கையிலிருந்த அம்பினால் தனது கண்ணைக் களைந்து வைத்து அப்பினார். பின்னர், தேவரின் மற்ற விழியும் இரத்தம் சொரிய, அக்கண்ணையும் அடைப்பான் வேண்டித்திண்ணன் தனது மற்றொரு கண்ணையும் களைந்தெடுக்க ஆரம்பிக்குஞ்சமயம் “நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!!” வென்று குடுமித்தேவர் திருவாய்மலர்ந்தருளி தனதின்னருளைப்பாலித்தார். காளத்திநாதனினருள் பெற்றதிண்ணன் அன்று முதல் “கண்ணப்பன், கண்ணப்பன்” யென்றழைக்கப்பட்டான். (இவரது சைவசமயப் பற்றும் சிவபக்தியும் அளவிடற்பாலதன்று. பெரிய புராணங்கூறும் கண்ணப்ப நாயனார் இவரே. இவரது சிலையைச் சிவஸ்தலங்களில் வைத்து இன்றும் பூஜிக்கின்றனர்.) நாகராஜன் காலகதியடைந்த பின்னர் பெத்தாபிநாட்டைக் கண்ணப்பன் பரிபாலிக்க மகுடஞ்சூட்டப்பெற்றேன். இவன், குருகுலத்தின் புகழை நாடெங்கும் நாட்டுவதைக் கண்ட மற்ற நாட்டரசர்கள் நடுங்குற்றனர். அந்நிய நாட்டரசனை விரட்டி அவனது நாட்டைக்கைப்பற்றவேண்டுமென்ற ஆசை இவனுக்குயிருந்ததே யில்லை. அந்நிய மன்னர்களுக்குத் துன்பம் நேரிட்ட காலத்து, உதவிபுரிந்து துன்பத்தை விலக்கமட்டும் ஆசைப்பட்டிருந்தானென்று கண்ணராஜனின் சரிதம் கூறுகிறது.
தமிழ் மூவேந்தர்கள்
இக்காலத்தில் தென்னாட்டைச் சேரன். சோழன், பாண்டியன் என்ற தமிழ் வேந்தர்கள் மூவர் அரசாண்டுவந்தார்கள். இவர்களிற் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னனின் நாட்டில், ஒட்டியர், சல்லியர் என்ற கொள்ளைக்காரர்கள் புகுந்து, குடிகளைத் துன்புறுத்தியதின்றி, அரசுரிமையையுங்கூட கைப்பற்ற முயற்சித்தனர். தகுந்த பக்கபலமில்லாத பாண்டியன் தனக்கு வுதவியளிக்கத்தகுந்த மன்னர்களைத்தேடி யலைந்து, இறுதியாக பெத்தாப்பிநாட்டு மன்னனான கண்ணப்ப மன்னனை யணுகித்தனக்கு உதவி புரியும்படி வேண்டிக்கொண்டான். கண்ணப்ப ராஜன் பாண்டியன் முறைகேட்டு மனமிறங்கி, தனது குருகுலப்படையுடன் தென்னோடு வந்து பாண்டியனின் விரோதிகளை விரட்டியடித்து வெற்றி பெற்றுப்பாண்டிய நாட்டைப்பாண்டியனுக்கே பட்டாபிஷேகம் பண்ணிவைத்தார். இத்தகையவுதவிபுரிந்த கண்ணப்ப மன்னனுக்குக் கைமாறாகத் தனது கொங்குநாட்டைப் பரிசளிப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டினான். அதுகேட்ட கண்ணப்ப மன்னன் “உதவிபுரிந்ததற்குக் கைமாறாக உங்கள் நாட்டை ஒப்புக்கொள்ளோம்” யென மறுத்து, உடுப்பூருக்குச் சென்று ஒரு நூற்றாண்டிருந்து ஒண்ணுதலாள் பாகன் ஒள்ளிய மலரடியைச் சேர்ந்தான். இவர் காலத்துக்குப் பின்னர் இவரின் புதல்வனான விஜயராஜன், நாகவல்லி என்பவளை மணந்து, அரசுபுரிந்து வருநாளில் ஆண்மகவொன்று பிறந்தது. அக்குழந்தைக்குக் காளத்திமன்னன் எனப்பெயரிட்டனர். இவன் பருவகாலத்தில் சகல கலைகளையுங் கற்றுணர்ந்து, பட்டமும் சூட்டப்பெற்றான். இவன் மகனுக்கு முத்தணிராஜன் எனப்பெயரிட்டான். இச்சிறுவன் சிறந்த அறிவாளியாகவும், பல நாட்டு மன்னர்களைப் பயங்கொள்ளச்செய்யும் பலம்பொருந்தியவனாகவுமிருந்தான். இவனது தந்தைக்குப்பின்னர் உரிமைப்படிப் பெத்தாப்பிநாட்டு மன்னனாகி வாழ்ந்திருந்தான். இவனுக்கு வெட்டுவன், வேடன், காவலவன், பூவலவன், மாவலவன் என ஐந்து மக்களிருந்தனர். இவர்கள் மிக்கத்திறமை வாய்ந்தவர்கள். அழகில்லாத ஒருவனுக்குச்சௌந்தரராஜனென்றும், சிவந்த நிறமுள்ள ஒருவனுக்குக் கறுப்பன்யெனவும் பெயரிடுவதுபோல, அக்காலத்தில் குருகுலத்தினரிடம் உண்மைக்கு மாறாகப் பெயரிடும் வழக்கம் இருந்ததேயில்லை. வலிமை மிகுந்திருந்த கண்ணப்பனுக்குத் திண்ணனென்றும், காட்டிற்பிறந்ததின் காரணமாக ஒருவனுக்குக் காடன் என்றும், வில்லுக்கு நாணேற்றுவதில் மிக்க வலிமைபெற்றிருந்த ஒருவனுக்கு நாணன் என்றும், பெயரிட்டிருந்தனர். அதுபோன்று, போர்களத்தில் எதிரிகளை வெட்டுவனேயொழிய வெட்டுப்படாத ஒரு மகனுக்கு வெட்டுவன் என்றும், வேட்டையாடுவதில் வல்லவனான மற்றொரு மகனுக்கு வேடன் என்றும், எதிரிகளுக்குப்பயந்து எவன் வந்து தன்னை அடைக்கலம் புகுந்தாலும் அவனைக் காப்பாற்றும் சிறந்த குணத்தையுடைய மற்றொரு மகனுக்குக் காவலவன் யென்றும், அழகிற்சிறந்திருந்த ஒரு மகனுக்குப் பூவலவன் யென்றும், யானையேற்றம், குதிரையேற்றம் போன்ற வித்தைகளில் வல்லவனாயிருந்த மற்றொரு மகனுக்கு மாவலவன் என்றும், பெத்தாப்பிநாட்டுப் பேர்மிகு மன்னன் பெயரிட்டிருந்தான். முத்தணிராஜன் காலகதியடைந்தபின்னர் மூத்தகுமாரன் வெட்டுவனென்பான் பட்டத்திற்கு வந்தான். இவரின் பரம்பரையாரையும், இவரது சகோதரர்கள் பரம்பரையாரையும் இக்காலத்தில் வெட்டுவர், வேட்டுவர் யென அழைக்கின்றார்கள். வெட்டுவராஜனை, திருக்கச்சையன், கச்சேந்ரதுரை, கச்சைய மன்னன் எனப்பல சிறப்புப் பெயரிட்டுக் கூறுதலுமுண்டு. இவனின் ஆட்சித்திறமை மிகமிகக் கீர்த்தி வாய்ந்தது. அதிகாலையிலெழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தேவி பூஜைபுரிந்து, குருவின் உபதேசங்களைப் பெற்ற பின்னர்தான் மற்ற காரியங்களைக் கவனிப்பது. இவன் காலத்தில் இவனுக்கு விரோதிகளேயிருந்ததில்லை. மற்ற நாட்டினருக்கு உதவி புரிதலன்றி, கைப்பற்றவேண்டுமென்ற எண்ணம் இவனுக்கு உதிக்கவுமில்லை. தெருக்கள் தோறும் அன்னச்சத்திரங்கள் வைத்து உணவின்றி ஒரு ஜந்துவும் தன்னாட்டில் உறங்கக்கூடாதெனக் கடுங்கட்டளையிட்டவன். எனவே, இவனின் உயரிய மாண்பைப் போற்றாதார் ஒரு சிலராவது உண்டென்று கூற உற்ற ஆதாரமில்லை.
மூவேந்தர்கள் சிறைப்படல்
இக்காலத்தில் பெருமலை நாட்டைப் பரிபாலித்துவந்த மிருகராஜன், பரசன், உத்தண்டன், அச்சுதன், களப்பாலன் யென்ற ஐவர்கள் தென்னாட்டுக்குட் புகுந்து குடிகளின் செல்வத்தையெல்லாம் கொள்ளைகொண்டதன்றித் துன்புறுத்தியும் வந்தார்கள். சஞ்சலங்கொண்ட குடிகள், அன்று அரசர்களாயிருந்த சச்சேந்திரவர குணதுங்கபாண்டிய மன்னனிடத்திலும், சேரவேந்தனிடத்திலும், சோழராஜனிடத்திலும், சென்று தங்களுக்கேற்பட்டுள்ள் இன்னலைக்கூறி முறையிட்டனர். இதுகேட்ட மூவேந்தர்களும் சினங்கொண்டு தங்களின் படைகளை யேவினர். எதிரிகளான ஐவர்களும், அவர்களின் படைகளும், மிக்க பலம் பொருந்தியிருந்ததால், மூவேந்தர்களின் படைகளை வெட்டி வீழ்த்தி வஞ்சகமாக சச்சேந்திரவாகுணதுங்க பாண்டியனையும், மற்ற சேர, சோழ மன்னர்களையும் பிடித்துக்கடற்கோட்டையில் விலங்கிட்டுச் சிறைப்படுத்தினார்கள். எனினும், தென்னாட்டுக் குடிகளுக்குத் துன்பந் தீர்ந்தபாடில்லை. என்செய்வார்கள் பாவம், தாயைப்பிரிந்த சேய்போல கோவேந்தனைப் பிரிந்த குடிகள் செய்வதின்னதென்று தோன்றாமல் வறுமையின் காரணமாக மடிந்தனர்சிலபேர். நாட்டையிழந்து பிறநாட்டை நாடினர் சிலபேர். வாடினர் சிலபேர். ஓடினர் சிலபேர். இவ்வாறாகப் பனிரெண்டாண்டுகள் கழிந்தன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் புதல்வர்கள் மூவரும் ஒன்றுகூடித் தங்கள் தந்தையர்களைச் சிறை மீட்கத்தக்க வுபாயத்தை யோசித்தனர். ஒன்றுந் தோணாதவர்களாய் “சிறை மீட்கும் உபாயங்காணாமல் நாட்டிற்குத் திரும்புவதில்லை” யென்றவுறுதி பூண்டு வடதிசை நோக்கி கடந்து, ஒரு காட்டையணுகினர். அங்கு ஒரு முனிவர் எதிர்ப்பட்டார். இளவேந்தர்கள் மூவரும் முனிவரைப் பணிந்து, தாங்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் புதல்வர்களென்றும், சிறைப்பட்டுள்ள தங்கள் தந்தையர்களை மீட்கும் முயற்சிபூண்டு இவ்வழிச் செல்வதாகவும் கூறினர். செவிக்கொண்ட முனிவர் மனமிறங்கி இளைஞர்கள் மூவரையுந்தேற்றி, சிறை மீட்கத் தகுந்த உபாயந்தனக்குத்தெரியுமென மொழிந்தார். “கூறுக” வென்று சிறுவர்கள் மூவரும் செப்பி முனிவரை நோக்கி முன்னின்றனர். “இளைஞர்களே! உங்கள் தந்தையர்களைச் சிறைப்படுத்தியுள்ள மிருகராஜன், உத்தண்டன், அச்சுதன், பாசன், களப்பாலன் ஆகியவர்கள் மிக்க வலிமைபடைத்தவர்கள். இதுசமயம் உங்களிடத்திற்படைகளுமில்லை, போதிய பக்கபலமுமில்லை. ஆதலால் எதிரிகளை எதிர்ப்பதென்பது உங்களால் முடியாத காரியம். பெத்தாப்பி நாட்டை, உடுப்பூர் என்ற தலைமைப் பட்டணத்திலிருந்து பரிபாலித்துவரும் வெட்டுவமன்னன் (திருக்கச்சேந்திர மகாராஜன்) மிக்கவலிமையுள்ளவன். இரத, கஜ, துரக, பதாதிகளென்ற நான்கு வகைப்படைகளும் அவனிடமுண்டு. உதவிவேண்டுவோருக்கு ஓடோடியுஞ்சென்று இன்னலைத்தவிர்த்து நன்மைபுரிவதே அவனது மனப்பான்மை, இதுவின்றி பூவலவன், காவலவன், மாவலவன், வேடன் யென்ற நான்கு சகோதரர்களும்முண்டு. அவர்களின் வீரத்தன்மை அளவிடக்கூடாதது. சிறுவர்களான நீங்கள் வெட்டுவமன்னனிடம் சென்று முறையிடுங்கள். உங்களெண்ணம் வெற்றியுறும்” யெனச் சொல்லி அவ்விடம் விட்டகன்றார். இளைஞர்கள் மூவரும் மனமகிழ்ச்சியுடன் அன்றிரவுக்குள்ளாக உடுப்பூரை நாடினர். சத்திரத்திலமுதருந்தி ஆங்கே இரவைக்கழித்து, மறுநாட்காலை வெட்டுவராஜனின் கொலுமண்டபத்திற்குள் சேவகர்களின் உத்திரவு பெற்றுச்சென்றனர். வெட்டுவமன்னன் தனது சகோதரர்கள், அமைச்சர்கள் புடைசூழ, மண்டபத்தை யடைந்து சிங்காதனத்திலமர்ந்தார். மண்டபத்தை நாடி வந்திருக்கும் மைந்தர்களை மன்னன் அமரச்செய்து “தாங்களெவ்வூர்? எக்காரணம் பற்றி இங்கு வந்தீர்கள்? எம்மாலாகும் பணிகளே தேனுமுண்டோ? யென வினவினார். மைந்தர்கள் முகமலர்ச்சியோடெழுந்து, “அரசபெருமா! நாங்கள் தென்னாட்டைப் பரிபாலித்த சேர, சோழ, பாண்டிய வேந்தர்களிந் புதல்வர்கள். சென்ற பனிரெண்டாண்டுகட்கு முன்னர் எங்கள்ன் தந்தையர்களைப் பெருமலைநாட்டு மன்னர்களான மிருகராஜன், களப்பாலன், அச்சுதன், பாசன், உத்தண்டன் ஆகியவர்கள் சிறைப்பிடித்துக் கடற்கோட்டையில் வைத்திருக்கிறார்கள். தந்தையர்களைப் பறி கொடுத்த நாங்கள் தகுந்த பலமின்றிப் பகைவர்களை இதுகாறும் எதிர்க்கவில்லை. போதிய உதவிதரவல்ல தங்கள் சமுகத்தை நாடினோம்” எனக்கண்ணீருக்குத்துக் கலங்கி நின்றார். கண்ட கச்சேந்திரமன்னன் (வெட்டுவன்) “அரசிளங்குமார்கள்! அஞ்சுவதும், ஆகாத்தொழில் புரிவதும், கெஞ்சுவதும், கீர்த்தியிழப்பதும், மக்களுக்கன்றி மன்னர்களுக்குங்கூட. இழிவியற்றத்தக்கதன்றோ? அங்ஙனமாகச் சிறந்த யுவவேந்தர்களாகிய நீங்கள் கலங்காதீர்கள். “பேராண்மை யென்பதறுகண் ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு” யென்ற தெய்வப்புலவர் திருவாக்கின்படி ஒன்றுற்றபோது அதற்கஞ்சாமையே பெரிய ஆண்மையென்றும், அதற்குரியதை உலகியலறிந்து செய்வதுதான் அதற்குப் படைக்கலமென்றும், நாம் கருதவேண்டும். ஆகவே, இன்னல் விளைந்த இச்சமயம் அஞ்சாதீர்கள். நம்மாலியன்ற உதவியைச் செய்கின்றோம். பொறுமின்! பொறுமின்!! யெனச் சிறுமன்னர்களைத் தேற்றினன். மறுநாட்காலை வெட்டுவமன்னனும், அவனது சகோதரர்களும், அன்னை காளிதேவியின் மலரடியை மனத்தேத்தி, குருவின் பொற்பதம் பணிந்து செய்வனவற்றையும், செய்யவேண்டுவனவற்றையும் புகன்று, ஆசிபெற்று தமது படைகளை மிருகராஜன் முதலியவர்களுடன் போருக்குத்தயாராகும்படிச் சேனாதிபதிக்கு உத்திரவிட்டான். அரசன் கட்டளைப்படி சகலபடைகளுந் தங்கள் தங்கள் ஒலிச்சின்னங்களை முழக்கினர். பேரிகை முழக்கம் பேரிடியைத்துறத்தின. டமாரங்கள் அதிர்ந்தன. எக்காளவொலி எட்டுத்திக்குகளிலும் முட்டிப்புகுந்தது. இத்தகைய ஆர்பாட்டத்துடன்படைகள் அரண்மனை வாயலிற் சூழ்ந்து அணிவகுத்து, அரசன் வரவை அன்புடன் எதிர்நோக்கி யாங்கு நின்றனர். போர்க்கோலம்பூண்டு, வாகைமலை தோள்புரள, காவலவன், பூவலவன், மாவலவன், வேடன் யெனுஞ் சகோதரர்கள் புடைசூழ, கச்சேந்திரமன்னன் காட்சிமிகுந்த அரண்மனை வாயிலைக்கடந்தனன். வெண்சங்குநாதம் எழுந்தது. வெடியின்துடி காளத்திமலைச்சாரலில் தவழ்ந்து மழுங்கிற்று. ஓங்கும் புலிக்கொடிகள் உயர்த்தப்பெற்றன. மேருவையொத்த தேருகளில் பஞ்சகல்யாணிப் புரவிகள் பிணைக்கப்பட்டதும், மன்னர்கள் ஐவரும் ஆரோகணித்தனர். ஜே! ஜே!! வென்ற சீரிய கோஷத்துடன் வடதிசை நோக்கி மாண்புறச்சென்றனர். கடுகி நடந்து, சில நாட்களில் கங்கை நதியைக் கடந்து கரையேறினர். ஆங்கு சிரமந்தீர்ந்து, மீண்டுஞ் செல்வதெனச் சௌகரியமான விடத்தில் தங்கினர். உணவுகள் தயாரித்து வுண்டுகளித்தனர். இதுசமயம், மிருகராஜனின் புதல்வர்கள் ஆங்குற்று கச்சேந்தி மன்னையணுகி “நீங்கள் வந்த காரணத்தை யறிந்தோம், நீங்கள் கனவிலும் செய்து முடிக்கொணாத வொன்றைச் செய்து முடிப்பதாக மனப்பால் குடித்து, இங்குற்ற உங்கள் புல்லறிவை யென்னெனப் புகல்வோம். மரியாதையாகத் திரும்பி இருப்பிடம் போய்ச்சேருங்கள்” என மொழிந்தனர். செவிக்கொண்ட திருக்கச்சேந்திர மகாராஜன் புன்னகை பூத்து “இளைஞர்காள்” பொறுமின்! அவசரமென்பது உம்போன்ற அரசர்களுக்கு விரோதி. எங்கள் திறமையையும், உங்கள் திறமையையும், உற்றுநோக்கிப் பக்ஷ்பாதமின்றி, நடுவுநிலைமைகாட்டித் தீர்மானிக்க, அறைகூவி அழைக்கும் சமர்க்களம் ஒன்றிருக்க ஏன் வீண்வார்த்தை பேசிக்கொள்ளவேண்டும். ஆங்குச்சென்று அதனைத் தீர்மானிப்போம். பொறுமின்! பொறுமின்!! ஆதலால் நீங்கள் சென்று உங்கள் தந்தையாரிடம் நாளைக்காலைப்போருக்கு ஆயத்தமாயிருக்கச் சொல்லுங்கள்” யெனப் பொன்முடிப்புவனேந்திர வெட்டுவ மன்னன் புகன்றான். நன்றெனச்சென்ற சிறுவர்கள் பெருமலையை நாடி தங்கள் தந்தையிடம் நடந்ததை நவின்றனர். செவிக்கொண்ட மிருகராஜனின் கண்கள் சிவந்தன. சிவந்தமுகம் சீரிய சினத்தைத் தெரிவித்தது. மீசை படபடவெனத் துடித்தது. வலிமை மிக்க சேர, சோழ, பாண்டிய மன்னர்களுங்கூட எனது சிறைக்குள், விலங்குடன் கிடைக்கச்செய்த யென் வீரம், கேவலம் வெட்டுவன் படைக்காக அஞ்சப்போவதில்லை. அவனதுபடைகளும், அவனும், எனது கைவாளுக்கு ஒரு நாழிகை யிறைக்குக்கூட ஆனவர்களல்ல. யாவற்றையும் நாளைக்காலை சதுரமலைச்சாரலிற் பார்ப்போம். மைந்தர்களே! நமது படையைத் தயாரியுங்கள்” எனக் கட்டளையிட்டான். மறுநாட் காலை படைகளுடன் மிருகராஜேந்திரன் குருகுல வீரர்களை யெதிர்க்கச் சதுரமலைச்சாரலை யணுகிப் போர்முரசையதிரச்செய்தான். குருகுலப்படைகளுந்தயாராயிற்று. புலிக்கொடிகள் உயர்த்தப்பெற்றன. வேல், வில், அம்பு, வாள், முதலிய படைக்கலங்களை எடுத்தனர். போர்புரியுங்காலத்திற்செய்ய வேண்டிய தந்திரங்களையும், மற்ற பாஷைகளையும், ஒருவரோடொருவர் கலந்து பேசிக்கொண்டனர். மன்னர்கள் ஐவரும் முன்செல்ல, மற்ற படைகள் பின் தொடர்ந்து சதுரமலைச்சாரலைச்சார்ந்தனர். பூவலவன் படைகளும், மிருகராஜன் படைகளும், அதிகாலையிற்போரை ஆரம்பித்தனர். இருதரப்பினரும் மாலைவரை சமர்புரிந்த காட்சி பாரதப்போரை ஞாபகப்படுத்திற்று. அம்புகள் மேகத்தினும் மிக்க வேகத்தையுற்று விரவிப்பறந்தன. ஆனால், இருமன்னர்களும் சலித்தார்களில்லை. இந்நிலையில் பூவலவன் அம்புகள் மிருகராஜேந்திரனின் உடலிற்புகுந்து, பெரிய வழிகளைச்செய்து உறுத்த ஆரம்பித்தன. பூவலவன் படையினர் கொண்டுள்ள வேல்கள் மிருகராஜன் படையினர் உடல்களுக்குட்சென்று சென்று திரும்பின. இனி வெற்றியடைவதில்லை என்ற தீர்மானங் கொண்டு மிருகமன்னனின் படைகள் புறங்காட்டியோட ஆரம்பித்தன. இச்சமயம் படைப்பலமிழந்த மிருகராஜேந்திரனின் தேர்மீது பூவலவன் காணப்பட்டான். பூவலவன் கரங்கள் மிருகராஜனின் முடியையும், கொடியையும் பற்றின. என் செய்வான் பாவம்! மிருகமன்னன் ஒன்றுந்தோன்றாவதனாய்ப் புறங்காட்டிப் பெருமலையை நோக்கி விரைவாக ஓடினான். புறங்காட்டியோடும் போர்வீரனை வெட்டி வீழ்த்துவதோ, அம்பு கொண்டெய்வதோ, சுத்தவீரனின் இலக்ஷ்ணமல்ல வென்று நினைத்த பூவலவன், பின்னோடிச்சென்று மிருகமன்னனைப் பிடித்தான். துடிதுடித்த மிருகனின் வீரம் பலகாதம் தாண்டிப்பறந்தது. சிறிது நேரத்தில் வெட்டுவராஜேந்திரன் முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டான். கண்ணுற்ற சகோதரன் கச்சையமன்னன் மற்றுள்ள உத்தண்டன், களப்பாலன், அச்சுதன், பரசன், ஆகியவர்களிருக்கும் இடத்தைக் கண்டுவரவும், சமாதானமொன்று சொல்லிவரவும், ஒரு தூதனைக் கூட அனுப்பி மிருகனை வழிகாட்டும்படி ஆஞ்ஞாபித்தான். கடுகிநடந்து ஆறு நாழிகைகளிற் பெருமலை உத்தண்டன் சமூகத்தையணுகினர். மிருகராஜனின் கோலம் அச்சுதனையும், மற்றுள்ள மூவர்களையும் உருகச்செய்தது. “அரசே! தங்களுக்கு இக்கோலம் ஏற்பட்டதேனோ?” வென்று வினவினர். மிருகராஜன் கண்ணீர்ததும்ப “என் செய்வேன், இதோ என் உடலைப்பாருங்கள்,” என்று அம்புபாய்ந்த வடுக்களையும், தனக்கேற்பட்டுள்ள அபஜெயத்தையும் கூறி அழுதான். கண்ட நால்வர்களுங் கடுங்கோபங்கொண்டு தூதனை நோக்கி யாது விசேடம், எதற்காக வந்தீர், உடன் தெரிவிக்கவும், போருக்கெழ வேண்டும்,” என்றார்கள், பெருமலைமன்னரே! எங்கள் மன்னர், சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைச் சிறை மீட்பதற்காகவே போர்புரிய வந்தார்கள். எங்களுடன் போர்புரியத் தங்களுக்குப் போதிய வல்லமையில்லை யென்பதற்கு மிருகராஜனின் தோல்வியொன்றே போதிய சான்றாகும். இவ்வபஜெயம் வரப்போகும் தோல்வியின் உற்பாதம். ஆதலால் மூவேந்தர்களையும் சிறை நீக்கிவிட்டு இந்நாட்டை யென்றென்றும் ஆண்டிருங்கள்” என மொழிந்தான், இதைக்கேட்ட பெருமலை மன்னர்கள் ஆர்ப்பரித்தெழுந்து “குருகுலத்தூதனே! உங்கள் படைகளையும், உங்கள் மன்னர்களையும் சமர்க்களத்திற்கு வரச்செய், மற்ற செய்திகளை ஆங்கிருந்து பேசுவோம்,” யென மொழிந்தனர். தூதன் திரும்பிவந்து வெட்டுவ மன்னர்களிடம் நிகழ்ந்தவற்றைச் சொல்லி நேரும் போருக்கு ஆயத்தம் செய்தான். மறுநாட் காலை சதுரமலை யோரத்தின் பரசன், களப்பாலன், உத்தண்டன், அச்சுதன்படைகளும், வெட்டுவப்படைகளும் போர்புரிந்தன. உத்தண்டனும் மாவலவனும் போர் பொருகினர், சரங்கள் பறந்தன, மாவலவன் உத்தண்டனுடலை அம்புகளால் ஊடுருவச்செய்தான். சகிக்கவியலாத உத்தண்டன் புறங்காட்டி ஓடுவதுகண்டு, மாவலவன் பின் தொடர்ந்து சென்று உத்தண்டனை ஒரே வெட்டாய் வெட்டி வீழ்த்தினான். கண்ணுற்ற களப்பாலன் சீரியெழுந்து மாவலவனை மற்போர்புரிய அறைகூவி யழைத்தான். இருவரும் புரியும் மற்போரைக் கண்ட காவலவன் ஓடிவர, களப்பாலன் மாவலவனை தூக்கி வீசியெறிந்தான். உடனே காவலவன் மற்போர்புரிந்து களப்பாலனை கழுத்தொடிய முறித்துக்கொன்றான். இச்சமயம் பரசன் வீரன் போர்புரிய வந்தனர். கண்ட குருகுலவேந்தர்கள் ஐவரும் சரியென்று பாணங்களை விடுத்தனர். பாசனின் உடல் அம்புகளால் துளைக்கப்பட்டது. இனி “வெற்றி பெறுவதில்லை” யென நினைத்த பாசன் பின்னால் திரும்பி நோக்க, தனது படைகள் புறங்காட்டி யோடுவதைக்கண்டு கலங்கினான். “வெந்தபுண்ணில் வேல்பாய்ந்ததுபோல” அபஜெயத்தின்மேல் அபஜெயம் ஏற்படுவதால் இனி நமக்கு ஜெயமில்லை. ஆதலால் சிறை கிடக்கும் மூவேந்தர்களையும் கொண்டுவந்து குருகுல மன்னர்கள் முன் வெட்டி மடிக்கவேண்டுமெனப் போர்புரிவதை விடுத்துப் புறங்காட்டிக் கடற்கோட்டைவாயலை நோக்கி கடுகிநடந்தான். பரசன் ஓடுவதைக்கண்ட குருகுல மன்னர்கள் விட்டார்களில்லை. பின் தொடர்ந்து சென்று கடற்கோட்டைவாயலிற் பாசனைக்கைப்பற்றினர். பின்னர் சிறையிலிருந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களை மீட்டு, அவர்களுக்கிடப்பட்டிருந்த விலங்குகளை விலக்கியெடுத்துப் பாசனுக்கிட்டனர். மூவேந்தர்களையும் அழைத்துக் கொண்டு, வெற்றிமுரசு அதிர, வெண்சங்கமுத, தாரையொலிக்க, டமாரங்கள் முழங்க, புலிக்கொடிகள் பறக்க, வெட்டுவப்படையினர் ஜே! ஜே!! யென்ற வீரமுழக்கத்துடன் தென்னாடு நோக்கித் திரும்பினர். சில நாட்களில் உடுப்பூருக்கு வந்து சேர்ந்தனர். வேந்தர்கள் மூவரும் சில நாட்களை உடுப்பூரிற் கழித்துத் தங்கள் ஊருக்குப் போவதாகவும், தங்களுடன் வெட்டுவமன்னர்களும் வரவேண்டுமென வேண்டினர். ஏற்றுக்கொண்ட குருகுல வேந்தர்கள் நன்னாளொன்றிற் புறப்பட்டார்கள். வினையின் காரணமாக விளைந்த பனிரெண்டாண்டு சிறையை மீட்டுவைத்த குருகுலத்தாருக்கு தங்களின் நன்றிகாரணமாக கொங்குநாட்டைப் பரிசளித்துப் பட்டமியற்றவேண்டுமென மூவேந்தர்களுந் தீர்மானித்துத் தங்களபிப் பிராயத்தை வெட்டுவமன்னன்பால் சமர்ப்பித்தனர். வெட்டுவமன்னன் அவர்களின் எண்ணத்தை ஒருவாறு ஏற்றுக்கொள்ள குறித்த நாளிற் கருவூரில் ஒன்று கூடினர்.
மகுடாபிஷேகம்
கலியுகம் 4175 ஆங்கிரஸ ஆடி எட்டாம் தேதி சுக்கிரவாரம் தசமி திதி, அவிட்ட நக்ஷ்த்திரமும் சேர்ந்த சுபநாளில் குருகுல மன்னர்கள் ஐவருக்கும் `ராயர்' என்ற பட்டம் வழங்கி கொங்கு இருப்பத்துநாலு நாடுகளையும் பாரம்பரியமாய் “ஆண்டு கொள்க” வெனச் செப்பேடு பட்டயமு மெழுதிக் கருவூர் சுவாமியின் முன்னதாக வெட்டுவராஜேந்திரனுக்கு முடிசூட்டினர். மற்றுள்ள நால்வருக்கும் இளவரசுப்பட்டமும் ஈந்தனர். அன்றுமுதற் கொங்குமண்டலத்தை இராஜநீதி சிறிதும் வழுவாது அரசாண்டு குடிகளிடம் கொஞ்சங் கடமைபெற்று, எதிரிகளின் பயமின்றி இன்புற்றிருந்தனர். இப்பட்டாபிஷேக நிகழ்ச்சியைக் காஞ்சிபுரம் செப்பேடு கூறுகிறது.
கொங்குநாடும், குருகுலமன்னரும்
பூந்துறைநாடு, தென்கரைநாடு, காங்கேயநாடு, பொன்கலூர்நாடு, ஆறைநாடு, வாரக்கனாடு, பூவாணியநாடு, அரையநாடு, ஒடுவங்கநாடு, வடகரைநாடு, கிழக்குநாடு, நல்லுருக்கநாடு, வாழவந்திநாடு, அண்டநாடு, வெங்காரைநாடு, காவடிக்கனாடு, ஆனைமலைநாடு, இராசிபுரமணநாடு, தலையநாடு, தட்டையநாடு ஆகிய 24 நாடுகளைக்கொண்ட கொங்குமண்டலத்தைக் குருகுல மன்னர்கள் குறிப்பு நாட்டெல்லையிலிருந்து செங்கோற் செலுத்தி வந்தார்கள். இவர்கள் வசித்து வந்த கோட்டையின் சின்னங்கள் திங்களூரில் (குறிப்புநாடு) இன்றும் காணப்படுகின்றன. மற்றும் வெட்டுவன் சகோதரர்கள் ஆங்காங்கு கொங்கு நாடெங்கும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். இதற்குப் பல சான்றுகளும், ஆதாரங்களும், கல்வெட்டுகளும், சிலாசாசனங்களும் உள.
செய்யான் பல்லவராயன்
தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்ததனாற்
சொல்லிய போசள வீர புசபலன் றுகளுறுசீர்ப்
பல்லவ ராய னெனப்பட்ட மீயப் படைசெலுத்த
வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே!
(கொங்குமண்டல சதகம்)
வரலாறு
மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அரச்சலூரிலிருந்து அரசுரிமை நடாத்திய வெட்டுவகுலத்துச் செய்யான் பல்லவராயன் என்பவர் ஓய்சல வீரவல்லாள வேந்தனுக்கு எதிரிகளான் இன்ன லேற்பட்டகாலத்து,படைகளுடன் சென்று எதிரிகளைத் தோர்க்கடித்து, ஜெயம்பெற்றுவந்தான். இவனது யுத்த தந்திரத்தையும், உதவுமெண்ணத்தையும் மெச்சி `பல்லவராயன்' என்ற பட்டப்பெயரிந்து கொண்டாடினர். இவனது சாசனம் அறச்சலூர் புற்றிடங்கொண்ட நாயினார் ஆலயத்தின் தென்புறச் சுவற்றில் வரையப்பட்டுள்ளது. (இதுவின்றி வெட்டுவர்களைச்சார்ந்த சில சாசனங்கள் ஆங்குள்ள பிரபலஸ்தர்களால் மண்ணிற்புதைத்து மறைத்துவிடப்பட்டதாகவும், இன்னும் சில இடங்களில் சாசனக்கற்களை உடைத்தெரிந்திருப்ப தாகவும் கேள்வி. இதற்குக்காரணம் வெட்டுவகுலத்தினர்பால் கொண்டுள்ள விரோத மனப்பான்மையே) இவன்மீது சில நூற்கள் கூறப்பட்டுள்ளன. ஆகவே! வெட்டுவ மன்னர்கள் பூந்துறை நாட்டையும், அரசாண்டுள்ளனரென்பதற்கு இதுவுமோர் அத்தாட்சியாகும்.
அல்லாளன் இளையான்
வடமுக நின்று வருகா விரியின் வனத்தையென்றுந்
திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த
அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைந்துவளர்
வடகடை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே!
(கொங்குமண்டல சதகம்)
வரலாறு
கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை அனாய நாட்டில் வடகரை ஆற்றூரில் வெட்டுவரில் இம்முடித்திருமலை அல்லாள இளையாநாயக்கன் யெனத் தக்கோனொருவனிருந்தான். அவன் திருச்செங்கோடு ஸ்ரீ நாகேஸ்வரர் அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலிய திருப்பணிகள் செய்தான். மைசூர் பெருங்கலகக்காரனும், கொள்ளைக்காரனுமான நஞ்சையவுடையார், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற் கொள்ளையடித்துக்கொண்டு போனார். என்றாலும், ஆறை இளையாநாயக்கன் பலத்தசேனையுடன் சென்று அவர்களை வழிமறித்துக் கொள்ளைப்பொருள்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து சேர்ந்தான். அழிந்தவற்றிற்குத் தன்னுடையதாகப் பல உதவினான். சாலிவாகன சகாப்த்தம் 1565 தாரண ஐப்பசி 25உ (கி.பி.1643) நாகேசுரர் கோவிலில் சம்புரோக்ஷணஞ் செய்வித்திருக்கிறான். காவிரியின் வடபுறம் அணையிலிருந்து வாய்க்கால் பிரித்துப் பாசனவசதி செய்வித்திருக்கிறான். இன்றும் இவ்வாய்க்காலை ராஜவாய்க்காலென வழங்கிவருகிறார்கள். இவனது முன்னோன் இம்முடிப்பட்டம் தியாகப்பெருமாள் நாயக்கனென்று காஞ்சிபுரம் செப்பேட்டி லெழுதப்பட்டுள்ளது. ஆகவே, வெட்டுவர்களுக்கு நாயக்கர் யென்ற பட்டப்பெயரும், ஆறைநாட்டு ஆட்சியும் இருந்ததென்பதை இதனாலறியலாம்.
கோபண மன்றாடி
தென்பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச்செழியன்
முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம்பொடவர்
பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங்களந்தை
மன்பூ வலனெனுங் கோபண னுங்கொங்கு மண்டலமே!
(கொங்குமண்டல சதகம்)
வரலாறு
பாண்டிய மண்டலத்தின் ஆளுகையைப்பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகா பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரமபாண்டியனைக் குலசேகரன் நாசஞ்செய்யவும், இதனைக்கேள்வியுற்ற சிங்களத்தரசனான பராக்கிரம பாகு-தன் தண்டநாயகனான இலங்காபுரி யென்பானைப் பலத்தசைனியத்துடனனுப்பினாள். அவன் இராமேசுரத்தையும், சுற்றுள்ள சில நாடுகளையும் பிடித்து, பராக்கிரமபுரம் யென்ற தலைமைப் பட்டணமொன்றமைத்து அரசுபுரியலானான். இவனை எதிர்த்த பாண்டியமன்னனையும் கொன்றான். அச்சமயம் கொங்குநாட்டைப் பரிபாலித்து வந்த குருகுல மன்னர்களிலொருவனான கோபணன் (பூவலவகுலத்தான்) தனது படைகளுடன் சென்று சிங்களப்படைகளை திருக்கானப்பேர், தொண்டி, பாசி, பொன்னமராவதி, மணமேற்சூடி, மஞ்சங்குடி என்னும் இடங்களிலெதிர்த்துச் சிங்களப் படைகளை பாண்டிய நாட்டைவிட்டு ஓடும்படிச் செய்தான். 1898 சென்னை ஆர்க்கிலாஜிகல் வருஷாந்திர ரிபோர்ட்டிலும், காஞ்சிபுத்திற்கடுத்த ஆரம்பாக்கத்துக் கோயிற் சாசனத்திலும் இப்படையெடுப்பு எழுதப்பட்டுள்ளது. இம்மாயினர் கோவை ஜில்லா, புரவிபாளையம் ஜமீன்தாராக இன்றும் இருந்து வருகின்றனர். இதிலிருந்து காவடிக்க நாட்டிலிருந்தும் குருகுலமன்னர்கள் அரசு புரிந்திருக்கிறார்களென்று காணக்கிடக்கிறது.
குறிப்பு நாடு
குறிப்புநாட்டுச் செப்பேட்டின் நகல் சுபமஸ்து ஈஸ்பரி அம்மன் மகாமண்டலேஸ்வானரிய தனவிபாடன பாசைக்கரிதப்பு வராதகண்டன் யெம்மண்டலம் திரை கொண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேஸ்வரன் ராஜமார்த்தாண்டன் ராஜகெம்பீரன் ராஜபுங்கரன் ராசவச்சிரதன் சேரன், சோளன், பாண்டியன் மூவராசாக்களும் ஆரிலொரு கடமைகொண்டு அசையாமணிகட்டி ராஜியபரிபாலனம் பண்ணுகின்ற சாலிவாகன சகார்த்தம் 1815 இதன்மேல் செல்லாநின்ற ஸ்ரீமுக ஆவணி 20தேதியும், சுக்கிரவாரமும், தசமியும் அமுர்தகெளிகையும் கூடின சுபதினத்தில் ஆளுத மகாசுவாமி மூவராசாக்களும் செங்கோலதிகாரம் செலுத்துகின்ற நாளையில் வடதேசத்திலிருந்து குருகுலத்து வேட்டுவ ராஜாக்கள் எங்களுக்கு உதவியாகத் தருவிச்சு இருந்ததினாலே யிவர்களில் நரசிங்கராயர், சந்தணராயர், பல்லவராயர், பூவலவராயர் இந்த நாலுபேருக்கும் குறிப்புநாடு 32 கிராமத்துக்கும் சதிர்மத்தியில் கைத்தமலை, அருளுமலை, வட்டமலை, திட்டமலை, பவளமலை இந்த 5 மலையுள்ள சதுர்மத்தியில் வடக்கு காவல காஞ்சிநாட்டுக்கு சேர்ந்த பாரியூர் எல்லைக்குந் தெற்கு முடச்சியூர் எல்லை பவளமலைக்கும், தெற்கு பூந்துரைநாட்டில் பெருந்துரை எல்லை எழுத்துப்பாரை கருங்காட்டுக்கும், மேற்கு காங்கயநாட்டெல்லைக்கும், ஆருநாட்டில் நம்பியூர் எல்லைக்கும், கிழக்கு இந்த நால்பாங்கிலேயும் அங்கமச்ச அடையாளம் சிலாசாசனங்கள் உவிக்குளியும், செப்புப்பட்டயமும் எழுதிக்கொடுத்து நாலுபேருக்கும் குறிப்புநாடு முப்பத்திரண்டு கிராமமும் சர்வ அதிகாரம் பண்ணிக்கொண்டு துஸ்டநிர்க்கிரக சிஸ்டபரிபாலனம் செய்துகொண்டு தரும நீதியாய் புத்திர பவுத்திர பாரம் பரிகதையாய் சுகமே இருக்கும் படிக்கு இன்னால்வருக்கும் பட்டாபிஷேகம் பண்ணி நாட்டாரென்றும், பட்டக்காரரென்றும், பாளையக்காரரென்றும் நிலைநாட்டுப்பண்ணி வச்சிருக்கிறோம். குறிப்புநாடு 32 கிராமத்துக்கும் விபரம், குருமந்தூர், கோசணம், செவியூர் அயிலூர், கொளப்பலூர், அலிங்கியம், முடச்சியூர், கலிங்கியம், ஆதியூர், சிருவலூர், குண்ணத்தூர், அளுக்குழி தாளுன்றி, திங்களூர், முத்தூர், நல்லூர், திருப்பூர், வாய்ப்பாடி, விஜயமங்கை, கூடலூர், சிருக்களிஞ்சி, செங்கப்பள்ளி, மண்ணறை, பாலதொளுவு, அல்லாளபுரம், வெள்ளரவழி, முகுந்தை, கந்தாகண்ணி கொடுமணல், அமுக்கியம், தெக்கலூர், ஊத்துளி இந்த 32 கிராமமும் சருவ அதிகாரம் பண்ணிக்கொண்டு சகமே யிருக்கும்படிக்கு நாங்கள் மூவராசக்களும் ஒரு மனசுடனே எழுதிக்கொடுத்த செப்பேடு பட்டயம் யிதுக்கு மதுரை மீனாக்ஷியம்மன், சொக்கனாத சுவாமி பூமி, ஆகாசம், சந்திர, சூரியர் சாக்ஷி இந்த சாசனப்பட்டயத்தை யிகளிதஞ் செய்தபேர்கள் காசி கெங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள். ஸ்ரீராமஜெயம் இக்குறிப்புநாடு மிகக் கீர்த்திமலிந்ததென்பதற்குப் பல பாடல்களும் அத்தாக்ஷிகளும் உள.
அறுசீர் விருத்தம்
வேதிய ராசு செல்வம் மிகுந்திடு வணிகர் நல்ல
நீதிவேட் டுவரின் ராச நிலமைகுன் றாதநாடு
மாதுளை மறுக்கை தேமா மல்லிகை தென்னை புன்னை
கோதிலா வனங்கள் சூழ்தென் குறிப்புநன் னாடு தானே!
(பழங்கவித்திரட்டு)
மற்றுள்ள பாடல்களை விரிந்த பதிப்பிற் பிரசுரிக்கப்படும். குருகுல மன்னர்கள் கொங்குநாட்டிற்கு வந்து அரசாட்சிபுரிய வாரம்பித்ததும் வாழ்ந்த நாட்டைக் குறிப்புநாடு யென்று அழைக்கப்படுகிறது. குறிப்புநாட்டுப் பெருமான்னபரம்பரையினர் இன்றும் திங்ளூருக்கடுத்த அப்பச்சிமார் மடத்திற்கு அதிபராயிருக்கின்றார்கள். அப்பச்சிமார்மடம் என்பது தென்னாடெங்கும் புகழ்பெற்றதோர் தெய்வஸ்தலம். இத்தலம்பற்றிய பாடல்கள் பல.
எழுசீர் விருத்தம்
சந்ரபுரி மாநகரி லிந்ரவோ லக்கமாய்த்
தழைத்திட விளங்கு மடமாம்,
தண்டமிட் கவிவாணர் கொண்டாட வேவந்த
சற்சங்க மான மடமாம்,
விந்தையுட னேமுனிவ ரானமதி யோர்களும்
மெய்ப்பாய்வி ளங்கு மடமாம்,
வீரமிகு ரெணசூர அப்பச்சி மாரய்யன்
வீற்றிருக் கின்ற மடமாம்,
கொந்துலவு குலமாதர் சிந்துநட னம்பரவு
கொலுவலங் கார மடமாம்,
கூறரிய கொங்குமலை யாளமும் ஈழமுங்
கொண்டாட வந்த மடமாம்,
அந்தமிக வாகவே பழனியய் யன்நீதி
அர்ச்சனைகள் செய்யு மடமாம்,
அம்புவியில் மெய்ப்பான அப்பச்சி மாரய்யன்
அன்னந்தந் துதவு மடமே.
(பழங்கவித் திரட்டு)
எனப்பாடல் பெற்றது அப்பச்சிமார்மடம். இங்கு பல நாட்டினரும் வந்து அப்பச்சிமாரய்யன் தரிசனம் பெற்றுத் தங்கள் தங்களின்னல்களைத் தீர்த்து இன்னருள் புரியுமாறு இறைஞ்சி நிற்பர்.
படங்கொண்ட பாம்பலங் காரர்க்கு மாறாத பக்திகொண்டு திடங்கொண்ட நெஞ்சோடு திண்கொண்ட தோள்கொண்டு சீர்த்திகொண்டு அடங்கொண்ட பேய்நோய் விடந்தீர்த் தருள்கின்ற வப்பச்சிமார் மடங்கொண்டு வண்புகழ் கொண்டதன் றோகொங்குமண்டலமே! என்று கொங்கு மண்டல சதகம் (பழைய ஏட்டுச்சுவடி) கூறுகிறது. இத்தகைய மாபெருங் கீர்த்திமலிந்த அப்பச்சிமார்மடத்திற்கு தற்சமயம் மடாதிபதியாயிருப்பவர் உயர்திருவாளர் ஆண்டமுத்துக்கவுண்டர் அவர்கள். பொதுநல நோக்கமும், வறியோரைக்காக்கும் மனமுமுடையவர். மற்றும் ஸ்தலஸ்தாபனங்களிலெல்லாம் அங்கம் பெற்றுள்ளார். சென்னை மாகாணத்திலுள்ள பெரும் அறிவாளிகளில் இவருமொருவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலிய பாஷைகளை நன்கு பயின்றவர். குறிப்பு நாட்டெல்லைக்குள் வாழும் தமது குடிகளுக்கின்னலேற்பட்ட காலத்து உடன் விலக்கி, இன்பம்பயப்பதே இவரின் மனப்பான்மை. இவருக்கு மூன்று சகோதரர்களுண்டு. மூவரும் நன்கு ஆங்கிலம், செந்தமிழ் பயின்றவர்களே. இவர்களிலொருவர் வழக்கறிஞராகவுமிருக்கின்றார். இவர்களின் தேசமுன்னேற்ற ஆர்வம் இன்றும் என்றும் சுடர்விட்டுத்துலங்கி விளங்குகிறது.
வல்விலோரி
மூவேழ் துறை முறையுளி கழிப்பிக்
கோவெனல் பெயரிய காலை யாங்கது
தன்பெய ராகலி னாணி மற்றியா
நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர்
வேட்டுவ ரில்லை நின்னொப் போர்…..
(புறநானூறு)
மேற்காட்டிய கவி வல்விலோரியை வன்பரணர் யென்ற தமிழ்வாணன் இவனது வள்ளன்மைக்காகப் புகழ்ந்து பாடியது. வல்விலோரியின் வாசஸ்தலம் கொல்லிமலை. இம்மலை சேல நாட்டைச்சார்ந்தது. இவன், வள்ளல்கள் இருபத்தொருவரில் தலைசிறந்து விளங்கியவன். இதிலிருந்து சேலநாட்டையும், அருகாமையிலுள்ள நாடுகளையும், குருகுலமன்னர்களே பரிபாலித்தனரென்றறிய வேண்டியிருக்கிறது. இதுவின்றி வள்ளண்மைக்கும் நல்லணிவகுத்த பெருமை வெட்டுவ குலத்திருக்கே உண்டென்று கூறலாம்.
கடியநெடுவெட்டுவன்
முற்றிய திருவின் மூவ ராயினும்
பெட்பின் றீதல் யாம்வேண் டலமே,
விறற்சினந் தனிந்த விரைபரிப் புரவி
யுறுவர் செல்சார் வாகிச் செறுவர்
தாளுளந் தபுத்த வாண்மிகு தானை
வெள்வீ வேலிக் கோடைப் பொருன
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக!
வார்கலி யாணர்த் தரீ இயகால் வீழ்த்துக்
கடல்வயிற் குழீஇய வண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா வாங்குத் தேரோ
டொளிறுமருப் பேந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே!
(புறநானூறு)
மிகுந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை நாங்கள் விரும்போம். வென்றியானுளதாகிய சினந்தீர்ந்த விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையையுடைய அஞ்சிவந்தடைந்த பகைவர்க்குச் செல்லும்புகலிடமாய் அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவர் முயற்ச்சியையுடை தளர்ந்த உள்ளத்தைக்கெடுத்த வாட்போரின் மிக்க படையினையுடைய வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலியையுடைய கோடையென்னும் மலைக்குத்தலைவா! சிறியனவும், பெரியனவுமாகிய புழைகளைப் போக்கறவிலக்கிய மானினது திரட்சியைத் தொலைத்த கடியசெலவையுடைய சினமிக்க நாயையும், வலியவில்லையுமுடைய (கடிய நெடு) வெட்டுவ! நீ நோயின்றி யிருப்பாயாக. என மேற்கூறிய கவியிலமைத்துப்பாடிப் புகழ்ந்த பெருந்தலைச் சாத்தனாரின் ஆசை மழுங்குமாறு பரிசீந்துகாத்து கடிய நெடுவெட்டுவ மன்னைக் கொங்கு நாடு நன்கறியும். இவனும் குருகுல மரபைச்சார்ந்தவன்தான். இது போன்று வெட்டுவமன்னர்களின் கீர்த்தியையும், வலிமையையும், போர்த்திறனையும் புகழ்ந்து பாடும் புறநானூறு 152, 153, 158, 204, 34, 159, 189, 202, 247, 324 ஆகிய கவிகளிற்காணலாம். ஆகவே, சகலதுறைகளிலும் வெட்டுவமன்னர்கள் மேம்பாடுற்று விளங்கி யிருக்கினறார்கள்.
தீரர்கள் தனைமூ வரசருந் தழுவிச்
சிறைதனி லிருந்திடும் நாங்கள்
வீரர்க ளான வுங்களாற் பிழைத்தோம்
மேவுமெம் மாசிலோர் பாகம்
கூரது செய்து கொங்கினை யளித்தோம்
கொற்றவ ரேயிதை யாண்டு
நேரதா யெங்கட் குதவியா யிருந்து
நிலைத்திட வேண்டுமென் றளித்தார்.
(பழங்கவித்திரட்டு)
என்றபடி கொங்குநாட்டின் கோவேந்தர்களாக மகுடஞ் சூட்டப்பெற்ற குருகுல மன்னர்கள் கொங்குநாடெங்கும் பரவி வசிக்கின்றனர். வழக்கப்படி இவர்கள் கவுண்டர், ராயர், வள்ளல் எனப் பட்டப்பெயர் புனைந்துகொள்ளுகின்றனர். “கவுண்டன்” என்னும் பட்டம் தென்னாட்டில் அநேகமாக வேளாளர், வெட்டுவர், வன்னியர் ஆகிய பல வகுப்பினரால் வகிக்கப்படுகிறது. இப்பட்டம் ஒரே பதத்திலிருந்து பிறந்தது. வடநாட்டினர், எதிரிகளுடன் போர்புரிந்து எதிர்களைக் கைப்பிடியாகப்பிடித்த தளகர்த்தனுக்கு “காமுண்டன்” எனப் பட்டமளிப்பது வழக்கமாயிருந்தது. இது குருகுல மன்னர்கள் தென்னாட்டை யடைந்த பின்னர்தான் தென்னாட்டிலும் வழங்கப்பட்ட தென்பது சரித்திரம். கிராமப் பெரியதனக்காரர்களுக்கும் இப்பட்டத்தை (காமுண்டன்) வெட்டுவ மன்னர்கள் ஈந்தனர். நாளடைவில் காமுண்டன் என்பது காமிண்டனாகி, காவண்டனாகி, காவுண்டனாகி, கவுண்டனாக மருவிற்றென்பது சரித்திரக்காரர்கள் கருத்து. கண்ணுற்ற மற்ற வகுப்பினரும் கவுண்டனென்பது சிறந்த பட்டமென யாவரும் வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். “கவுண்டிக்கை” “ஊர்க்கவுண்டன்” எனச் செல்லிக் கொள்ளுவதும் இக்காரணம் பற்றியதே; கவுண்டன் என்று ஒரு பரம்பரையினர்க்குப் பட்டமிருக்குமாயின், அவர்களாவது, அவர்களின் முன்னோர்களாவது, போர்த்தொழிலிற் சிறந்தவர்களாயிருந்திருக்க வேண்டும். அக்காரணஞ் சிறிதுமில்லாமல் கவுண்டன், காமிண்டன் எனப் பட்டஞ் சூட்டிக்கொள்ளும் வழக்கம் கொங்கு நாட்டிலுள்ள சிற்சில குடும்பங்களிலிருக்கிறது. ஆகவே, கவுண்டனென்ற பட்டத்தை கொங்குநாட்டிற்குள் புகுந்துவிட்ட பெருமையும், அதை வகிக்கின்ற பெருமையும், கீர்த்தியும், வெட்டுவகுலத்தினருக்கே வுண்டென்பது ஆராய்சி. மேற்கூறிய புகழ்மலிந்த குருகுலத்தினர் நாளடைவில் வெட்டுவர், பூவலவர், காவலவர், மாவலவர், வேடர் யென்னும் ஐம்பிரிவினராகப் பிரந்து விளங்கினர், விளங்குகின்றனர். தற்காலம் வெட்டுவர், பூவலவர், வேடர், காவலவர் ஆகிய நாலு பிரிவினரே காணப்படுகின்றனர். மற்றோர் மறைந்திருப்பதற்கும், அருவியதற்கும், தக்ககாரணம் அறியக்கூடவில்லை. வெட்டுவகுலத்தினரை வேட்டுவரென்றும் அழைக்கின்றதுண்டு. சென்னையிலுள்ள ஹேமல்டன்பிரிட்ஜ் நாளடைவில் அம்பட்டன் வாராவதியென மருவியது போல, பல உண்மைப்பெயர்களை நெடித்தும், குறுக்கியும், புகலுகின்ற பழக்கம் தமிழ்நாட்டில் பண்டைக்காலந்தொட்டு இருந்து வருகின்ற முறையில் வெட்டுவர் என்ற பெயர் வேட்டுவர் என நெடிக்கப்பெற்றுள்ளது.
வெட்டுவர் பெருமை
எழுசீர் விருத்தம்
கங்கைச் சடைமுடி வெண்ணீச ருக்கன்று
கண்பதித் திட்ட பெரியோர்
கண்ணப்ப சீர்பாத சேகரர் மேலான
காளத்தி வெற்பு முடையோர்
செங்கைசிலை யூன்றியே வில்வத்தி லேறியே
சிவராத்திரி கண்ட பெரியோர்
தெட்சணா புரமென்ற பூமிக்கு முடையவர்
சீரான கீர்த்தி யுடையோர்
கொங்குதல முடையவர் கொற்றவர் கற்றவர்
கொல்லிங்கி ரிக்கு முடையோர்
கூறரிய பாண்டியன் சோழன்சே ரன்வந்து
கொண்டாடு வலிமை யுடையோர்
வங்கக் கடலுலகில் வீரான வெட்டுவர்கள்
வாகைமா லைப்பு யத்தோர்
வாய்வீறு சொன்னவரின் மார்ப்பைப்பி ளந்திடுவர்
வளராச மணவா ளரே!
(பழங்கவித்திரட்டு)
எனப்புகழ்கொண்ட பெரும்பான்மைக் கூட்டத்தினராகிய வெட்டுவமரபினர் இன்று சிறுபான்மையினராகத் தோன்றுவதற்குச் சிறந்த காரணம் கல்வியின்மையும், ஒற்றுமையின்மையுமே. “முயற்சி திருவினையாக்கும்” என்ற முதுமொழிப்படி முயற்சிமிகுமாயின் முன்னேற முடியுமென்பதைக் காலச்சக்கரம் காட்டுகின்றது.
இணையத்தில் வெளியிட நமக்கு வழங்கியவர்
திரு. ஆனந்தகுமார்.பி(பெங்களூர்) வரலாற்று சமூக ஆய்வாளர்.
குருகுல வரலாறு நூல் தொகுப்பாளர் ஈரோடு சந்தச்சரபம், திரு.எஸ்.வேல்சாமி கவிராயர் அவர்கள்
ஆசிரியர்: ஈரோடு, சந்தச்சரபம் திரு.எஸ்.வேல்சாமி கவிராயர். வெளியீடு: அப்பச்சிமார்மடம், குருகுல நூற்பதிப்புச் சங்கத்தரால் வெளியிடப்பட்டது. வெளியிட்ட ஆண்டு: 1934.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.