கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Friday, February 22, 2013

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார்




கண்ணப்ப நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். 

வேட்டுவகுல மைந்தன் 
பொதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர். இவ்வூரில் வேட்டுவ சாதியார் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தத்தையார். இவ்விருவரும் முருகப் பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறைபோல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார். அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்புப்போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத்தோலும் சுரிகையும் அளித்து வேட்டுவ குல முதலியாக்கினார். 

முன்னைத்தவத்தின் பயன் 
குலமுதலியாகிய திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார். அவருடன் வேட்டுவ மறவரெல்லாம் திரண்டனர். கடி நாய்கள்முன்னே பாய்ந்து சென்றன. வேட்டுவரோடி வேட்டைக் காட்டை வளைத்து உட்புகுந்து பல்வேறு ஓசைகளை எழுப்பி வேட்டையாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாளறுவனவும், தலைதுணிவனவும், குடர்சரிவனவுமாயின. அவ்வேளையில் கடியதோர் பன்றி வேட்டைக் காட்டினின்றும் வெளியேறி ஓடலாயிற்று. அதனைக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடிவழியே முடுக்கிய கடுவிசையில் ஓடலாயினார். நாணன், காடன் என்போர் அவரைப் பிந்தொடர்ந்து சென்றனர். ஓடி இளைத்து ஒரு மரச் சூழலில் ஒதுங்கி நின்ற பன்றியைத் திண்ணனார் தம் சுரிகையைச் சேர்ந்த நாணனும் காடனும் இப்பன்றியைத் தின்று பசியாறி நீரும் குடிப்போம் என்றனர். திண்ணனார் "இக்காட்டில் நீர் எங்கே உள்ளது? எனக் கேட்டார். நாணன் ஒரு தேக்குமரத்தைக் காட்டி அம்மரத்துக்கப்பால் ஒரு குன்றின் அயலில் குளிர்ந்த பொன்முகலி ஆறு பாய்கின்றது எனக் கூறினான். பன்றியைக் காவிக்கொண்டு அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது. பட்டதும் அம்மலைக்குச் செல்வோம் என்றார். 'மலைக்குச் சென்றால் நல்ல காட்சி காணலாம்; அங்கே குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்' என நாணன் சொன்னான். மலையை நெருங்கிச் செல்ல திண்ணாருக்கு இனம்புரியாததோர் சுக உணர்வு தோன்றியது. அவருக்குத் தன்மேலிருந்து பாரம் போவது போன்ற உணர்ச்சி பெருகியது. மனதில் புதிரானதோர் உணர்வு அரும்பலாயிற்று. தேவர் இருக்கும் இடம் செல்வோம் என விரைந்து நடந்தார். பொன்முகலி ஆற்றை அடைந்ததும், காடனிடன் தீ உண்டுபண்ணுமாறு கூறித் தாம் நாணனுடன் சென்றார். ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. குடுமித்தேவரிடம் பெருகும் அன்பின் சுகமே தனக்கேற்பட்ட 'புதிரான' சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று. மலைச்சாரலை அடைந்த போது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வேளையில் தேவர்கள் வந்து காளத்திநாதரை வழிபடுவர். அவ்வாறு வழிபடும்போது தேவதுந்துபி எழுதும். அவ்வாத்திய ஓசை திண்ணனாருக்குக் கேட்டது. "இது என்ன இசை" என்று கேட்டார். நாணனுக்கோ அது மலைப்பெருந்தேன்வண்டின் இரைச்சலாகவே தோன்றியது. திண்ணனாரது முன்னைத் தவத்தின்பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பெருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு செல்லத் தான் மலை ஏறிச் சென்றார். தத்துவப் படிகளைத் தாண்டி சிவதத்துவத்தைச் சாரும் சிவஞானியாரைப்போலச் சென்றுகொண்டுருந்தார். இவ்வண்ணம் சென்றுகொண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னமே காளத்திநாதரின் அருள் திருநோக்கம் திண்ணனார் மேற் பதிந்தது. திண்ணனார் முன்னைச் சார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மலைக்கொழுந்தாயுள்ள தேவரைக் கண்டார். அன்பின் வேகத்தால் விரைந்து ஓடிச் சென்று தழுவினார். மோந்தார், ஐயர் அகப்பட்டுக்கொண்டார் என ஆனந்தப்பட்டார். "கரடி, சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பதோ" என்று இரங்கினார். இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில் தேவரின் உச்சியில் பச்சிலை, பூ என்பன தெரிந்தன. "நான் இது அறிவேன்; முன்னர் உன் தந்தையாரோடு வந்த ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி" இலையும் பூவும் இட்டு உணவு படைத்து, சில சொற்களும் சொல்லி நின்றான்; இன்றும் அவனே இச்செய்கை செய்தான்" என நாணன் கூறினான். "இதுவே திருக்காளத்தி நாயனாருக்கு இனிய செய்கை" என்று அதைக் கடைப்பிடிக்கத் திண்ணப்பர் ஆசை கொண்டார். நாயனார் பசியோடிருக்கின்றாரே; இவரிற்குஇறைச்சி கொண்டுவரவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் ஏவவில்லை. சற்றுநேரம் சஞ்சலப் பட்டபின் துணிவுகொண்டு கைகூப்பித் தொழுதுவிட்டு வில்லெடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார். பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து இனியனவெல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவேயில்லை. நாணன், "குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளாவல்லுடும்பென்ன நின்ற" அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் செயலில்லை; நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர். திண்ணப்பார் கல்லையிற் சேர்த்த ஊனமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையிற் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பாரென இரங்கியவராய் விரைந்து வந்தார். வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிடேகமாடினார். தலையிலிருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையிலிருந்து ஊனமுதைத் தேவரின் முன்பு வைத்து "இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார். அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண்துயிலாது நின்ற வீரர் விடியற் சாமமானபோது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்". இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது. 

அந்தணரின் அவதி 
அன்று பகற்போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரங் கற்ற ஆசாரசீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னையர்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே. 
வந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு என்பனவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகலமிதித்தபடியே நின்றார். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினங் கொண்டார். வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார். 
பூசைக்கு நேரம் தாழ்கின்றதென்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றியபின் பொன்முகலி சென்று நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார். 
குடுமித்தேவருக்கு அன்பர் சுவை கண்ட ஊனமுது 
இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாமறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினிற் கோர்த்து, தீயினிற் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார். அதிற்தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். 'இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்' என மொழிந்து திருவமுது செய்வித்தார். 
இவ்வண்ணம் பகல் வேட்டையாடி இனிய செய்கை செய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத் திண்ணப்பர் இருந்தனர். ஆகம முறைப்படி பூசனை புரிந்து சிவகோசாரியார் ஒழுகினார். நாணன், காடன் என்போர் சென்று சொன்ன சொற்கேட்டு ஆறாக் கவலையுடன் வந்த நாகனாரும், கிளையினரும் முயலும் வகையெல்லாம் முயன்றும் தம் கருத்து வாராமற் கைவிட்டுச் சென்றனர். 


"அவன் நமக்கினியன்" - காளத்திநாதர் 
சிவகோசாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார். அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையிற் பெருமான் கனவில் தோன்றி 'இச்செய்கை செய்பவனை நீ இகழவேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாயமைவது; அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயலெலாம் நமக்கினியன். இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை யிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார். சிவகோசாரியார் பெருமானது அருளிப் பாட்டை நினைந்து உருகிய சிந்தையராய் அற்புதம் அறியும் ஆர்வத்தோடு வந்து பூசனையாற்றி ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறியது. 


அப்பர் கண்ணை நிரப்ப தன் கண்ணை அப்பி கண்ணப்பரானார் 
திண்ணப்பர் திருக்காளத்தி அப்பரைச் சேர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற் பொழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழமைபோன்று காட்டினுள் சென்று வேட்டையாடி ஊனமுது ஆதியனவற்றுடன் வந்துகொண்டிருந்தார்.அவருக்குத் தோன்றிய சகுனங்கள் சஞ்சலம் தருவனவாய் இருந்தன. தீய பறவைகளின் ஒலி கொண்டு 'இது இரத்தப் பெருக்கிற்கான துர்க்குறி' எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது நேர்ந்ததோ என எண்ணியவராய் விரைந்து வந்தார். வந்தவர் பெருமானது கண்ணிற் பெருகும் இரத்ததைக் கண்டார். கண்டதும் பதைபதைத்து மயக்கமெய்தினார். அவரது வாயினீர் சிந்தியது. கைசோர்ந்து இறைச்சி சிதறியது. தலையின் பள்ளித்தாமம் சோர்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று இரத்ததைத் துடைத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருந்தது. செய்வதறியாது பெருமூச்சுவிட்டு மீளவும் சோர்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் கொண்டு இத்தீச்செயல் செய்த விலங்குகளுடன் வேடர்கள் உளரோ? என்று எங்கும் தேடிச்சென்றார். எவரையும் காணாது வந்து பெருமானின் பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் வெருண்டதோர் எருதுபோல் காடெங்கும் திரிந்து பச்சிலைகளைப் பறித்துவந்து கண்ணுட் பிழிந்து பார்த்தார். மருந்து பலன் தராமையால் நொந்தார். "ஊனுக்கு ஊன்" என்றோர் மருந்து நினைவு வரவே கண்ணுக்குக் கண் என்றோர் புத்தி புகுந்தது. ஆதலால் தமது ஒரு கண்ணை தோண்டி இரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் அப்பினார். நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். தோள் கொட்டினார். நன்று நான் செய்த இந்த மதி என மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்றைக் கண்ணினின்றும் குருதி பெருகுவதைக் கண்டார். கண்டதும் ஒரு கணம் கவலையுற்றார். மறுகணமே இதற்கோர் அச்சம் கொளேன்; மருந்து கண்டேன் என்றவராய் தம் மற்றைக் கண்ணைத் தோண்டமுனைந்தார். கண் அடையாளம் காண்பதற்காகத் தன் இடதுகாலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். உள் நிறைந்த விருப்போடு அம்பினை ஊன்றினார். இச்செய்கை கண்டு தேவதேவர் தரித்திலர். தம் திருக்கையாற் தடுத்தனர். "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க"என்று அமுத வாக்கு அருளினார். இதனை ஞானமா முனிவர் கண்டனர்; கேட்டனர். தேவர்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினர். இதனிலும் பெரிய பேறுண்டோ. 

இதுவோ கடவுட்பற்று" 
ஆதி சங்கரர் 
சிவபெருமான் பெருமையை 100 சுலோகங்களில் பறை சாற்றும் சிவானந்தலஹரி என்ற தன்னுடைய (வடமொழி) நூலில் ஆதி சங்கரர் 61 வது சுலோகத்தில் கடவுட்பற்று என்பதற்கு உயர்ந்த இலக்கணம் சொல்கிறார். அவ்விலக்கணத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் 63 வது சுலோகத்தில் கண்ணப்பரின் உள்நிறைந்த அன்பின் மூன்று செய்கைகளையும் குறிப்பிட்டுவிட்டு இதுவன்றோ பக்தி , கடவுளன்பர் என்பதற்கு இவ்வேடுவனே இலக்கணம் என்கிறார். அச்சுலோகத்தின் உரை கீழ்வருமாறு: 
வழிநடைநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது; 
வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது; 
சிறிதுண்டு சுவைகண்ட ஊனமுது தேவனுக்கும் படையலாகிறது; 
பக்தி என்னதான் செய்யமாட்டாது? அன்பரென்போர் வேடுவனன்றி வேறு எவர்? 
இந்த சுலோகத்திற்கு உரையாசிரியர்கள் உரை எழுதும்போது, இதனில் தீவிர பக்தியின் மூன்று படிகள் சித்தரிக்கப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். 
சுலோகத்தின் மூன்றாவது வரி முதல் படி. தான் சிறிது சுவைத்துவிட்டு மீதமுள்ளதும் அதே விதத்தில் தேனொழுக இனிக்கும் என்று சொல்வதில் ஒருவித நம்பிக்கைதான் இருக்கிறதே தவிர முழுமையாக அறுதிப்படுவது இயலாது. அதனால் இது தீவிர பக்தியில் ஒரு சாமானியப்படிதான். 
சுலோகத்தின் இரண்டாவது வரி அடுத்த படி. வாயிலிருந்து உமிழ்ந்த நீர் ஆண்டவனுக்கு அபிஷேகமாகிறது. ஆனால் 'அது' என்னும் ஆண்டவனின் ஆனந்தத்தில் சங்கமமாகும் 'இது' என்னும் இந்த ஜீவனின் உமிழ்நீர் இன்னும் 'அது', 'இது' என்ற இரட்டையின் மயக்கத்தில்தான் இருக்கிறது. அதனால், இது தீவிரபக்தியின் அடுத்த மேல் படி என்று சொல்லலாமே தவிர தீவிரபக்தியின் உச்சகட்டமாகச்சொல்லமுடியாது. 
சுலோகத்தின் முதல் வரியை தீவிரபக்தியின் உச்சநிலையாகச் சொல்லலாம். ஏனென்றால், பக்தன் தன் மிதியடியையே தேவனின் கண்ணில் வைக்கும்போது, அங்கு தேவன் வேறு தான் வேறு என்ற பாகுபாடெல்லாம் பறந்து போய்விட்டது. 'தத் த்வம் அஸி' (அதுவே நீ) என்ற உபநிஷத்து மகாவாக்கியப்படி, அந்தப் பரம்பொருளே இந்த ஜீவன் என்ற இலக்கணம் ருசுவாகிறது! 


மாணிக்கவாசகர் 
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் 
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள 
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் [1]குறிப்பிடுகின்றார். 
"கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.