கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 18, 2013

சிலம்பில் வேட்டுவர்



சிலம்பில் இனவரைவியல் கூறுகள்


கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகமென்ற முத்தமிழுக்கு முதன்மை நல்குகின்றது. குடிமக்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு படைக்கப்பட்ட இக்காப்பியம் சேர, சோழ, பாண்டிய நாட்டின் நாட்டுவளம், நகர்வளம் போன்றவற்றை விளக்குகின்றது. மேலும் பாமரர் முதல் படித்தவர் வரை அறிந்த தொல்பழம் காப்பியமான இச்சிலப்பதிகாரத்தில் ஆயர், வேட்டுவர், குறவர் எனும் இனக்குழுக்களின் பழமையை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இனவரைவியல் கூறுகள்     அந்தணர், வணிகர், வேளாளர் என பிரிக்கப்பட்ட இனப்பகுப்பு 19ஆம் நூற்றாண்டில் பல மாற்றங்களைப் பெற்றது. இன்று அழிந்து வரும் இனங்களின் இனக்குழு கூறுகளுக்கு முதன்மை தரப்படுகிறது. இத்தகு நோக்கின் அடிப்படையில் பக்தவத்சலபாரதி 35 இனவரைவியல் கூறுகளை பண்பாட்டு மானிடவியல் என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பக்தவத்சல பாரதி கூறும் கூறுகளில் சுற்றுச்சூழல், குடியிருப்பு முறை, வாழ்க்கைப் பொருளாதாரம், சமய நம்பிக்கைகள், இசை போன்றன சிலம்பில் பயின்று வரக்காணலாம்.
சிலப்பதிகாரத்திற்கு முன்    
"ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
     ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே" (தொல். அகம். 967)
என்ற நூற்பா ஆயர், வேட்டுவர் என்ற இனமக்களும், இவைபோன்ற பழங்குடி இன மக்களும் தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்தனர் என்பதை உறுதிசெய்கின்றன. தொல்காப்பியர் காலத்தில் மட்டுமின்றி, சங்ககாலத்திலும் ஆயர், வேட்டுவர், குறவர் இனமக்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இலக்கியங்களில் சான்றுகள் கிடைக்கின்றன.
     "குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
     நுண்பல் அழிதுளி பொழியு நாட!"  (ஐங்குறுநூறு : 251)
     குன்றக் குறவர்கள் மழை பொழிவதற்காக ஆரவம் செய்தனர் என்பதை ஐங்குறுநூற்றின் வழி அறியமுடிகின்றது.
     "குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
     நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்"
               (பெரும்பாணாற்றுப்படை : 162-163)
     ஆய்மகள் இல்லத்தில் பாலும், பால்சோறும் மிகுதியாகக் காணப்பட்டன என்ற குறிப்பும் உள்ளது.
     வேடர்கள் நடுஇரவில் பன்றியின் வரவை வேட்டையாடுவதற்காக எதிர்பார்த்தனர் என்பதை பெரும்பாணாற்றுப்படையும் குறிப்பிடுகின்றது. எனவே இவ்வாறு தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் இவர்கள் குறித்த குறிப்புகள் உள.
சிலப்பதிகாரத்தில் இனவரைவியல்    
இனவரைவியல் போக்கில் காணுதல் தொடங்கப்படாத காலத்திலேயே, இனவரைவியல் கூறுகள் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார்.
     இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை புகார்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரித்துள்ளார். இக்காண்டங்களில் மதுரைக்காண்டத்தில் இடம்பெறும் வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை என்பன வேடுவர், ஆயர் இன மக்களையும், வஞ்சிக் காண்டத்தில் உள்ள குன்றக்குரவை, குறவர் இன மக்களையும் பற்றிப் பேசுகின்றது. எட்கர் தாஸ்டனும் குறவர், ஆயர், இனமக்களைப் பற்றிய தகவல்களைத் தமது நூலில் சுட்டிக்காட்டியுள்ளர்.
சூழல்    
சுற்றுச்சூழல் என்பது காப்பியத்தில் பதிவாகியுள்ள இடம் குறித்த சூழலை இயற்கையின் வழியாக விளக்குவதே ஆகும்.

     "செம் பொன் வேங்கை சொரிந்த@ சேயிதழ்
     கொம்பல் நல இலவங்கம், குவிந்தன@
     பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு - இளந்
     திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே".
               (சிலம்பு.வேட்டுவ. 79-82)
   கொற்றவையின் பீடத்தின் முன் மரங்கள் செம்பொன் மலர்களைச் சிந்தின. அழகிய இலவ மரங்கள் பூவிதழ்களை உதிர்த்து குவித்தன என்ற வரிகளின் வழியாக சுற்றுச்சூழலை அறிய முடிகின்றது.
குடியிருப்பு முறை
     வேடுவர்கள் தங்கள் ஊரினை சுற்றி முள்வேலிகளைச் சுற்றியிருப்பார்கள் என்பதையும், ஆயர்களின் குடியிருப்புகள் காட்டுப் பகுதிகளில் அமைந்திருந்தன என்பதையும் குறவர்கள் மலையில் தங்கள் குடியிருப்புகளை அமைத்திருந்தனர் என்பதையும் சிலப்பதிகாரம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
வாழ்க்கைப் பொருளாதாரம்    
மனிதன் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பொருளாதாரம் மிக இன்றியமையாத பங்குவகிக்கின்றது.
     வேடுவர்கள் பாலைவழியில் செல்லக் கூடியவர்களிடம் உள்ள பொருட்களைக் கொள்ளையடித்துக் கிடைக்கும் பொருட்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.
     ஆயர்கள் பசுக்களில் கரந்த பாலினை-தயிராக்கி வெண்ணெய், நெய் எடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்தனர்.
     "கடை கயிறும் மத்தும் கொண்டு
     இடை முதுமகள் வந்து தோன்றும்-மன்"
               (சிலம்பு. ஆய்ச்சியர்குரவை 9-10)
     குறவர்கள் மலையில் கிடைத்த தேன், கிழங்கு, வேட்டையாடிக் கிடைத்த இறைச்சி போன்றவற்றின் மூலம் தங்களது வாழ்க்கையை மேற்கொண்டனர் என்ற செய்தியை சிலம்பு சுட்டிக்காட்டுகின்றது.

சமயநம்பிக்கைகள்    
சிலப்பதிகார வேட்டுவரி கொற்றவை வழிபாட்டைச் சித்தரிக்கின்றது. இவ்வழிபாட்டில் மந்திரமும், கலந்து காணப்படுகின்றது. தெய்வம் ஏறப்பெற்ற வேட்டுவக்குலப்பெண்ணை கொற்றவையாக நினைத்து வழிபடுகின்றனர்.
     சாலினி எனும் பெண், தெய்வம் ஏறப்பெற்று, அவள் கூறும் மொழிகளை தெய்வமொழியாக நம்புகின்றனர். அதன்படி தங்கள் தலையினை வீரர்கள் நேர்த்திக்கடனாக கொற்றவைக்குச் செலுத்துகின்றனர்.
     "கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது,
     சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்@"
               (சிலம்பு வேட்டுவவரி – 16-17)
என்ற வரிகள் இதனை உறுதி செய்கின்றன.
     ஆய்ச்சியர் குரவையில் பால் உறையாமல் இருப்பதையும், எருது கழுத்தில் உள்ள மணி அறுந்து நிலத்தில் விழுவதையும் தீ நிமித்தமாகக் கருதி, நன்மையுண்டாக கண்ணணை வணங்குகின்றனர்.
     "மாயவனுடன் தம்முன் ஆடிய
     வால சரிதை நாடகங்களில்
     வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய
     குரவை ஆடுதும் யாம்| என்றாள்:
     கறவை, கன்று துயர் நீங்குக எனவே"
               (சிலம்பு ஆய்ச்சியர்குரவை - 26-31)
என்ற அடிகளின் வாயிலாகப் புலப்படுகின்றது.
     குன்றக் குரவையில் தலைவியின் பெற்றோர், தன் மகளின் மெலிவிற்கு வேலன் வெறியாட்டு நிகழ்த்தினால் சரியாகும் என்று நம்புகின்றனர். என்ற செய்தியின் வழியாக அக்கால பழங்குடி இனமக்கள் சமயநம்பிக்கைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருந்துள்ளனர் என்பது வெளிப்படுகின்றது.

ஆடலும் பாடலும்    
இசை மனிதனின் வாழ்வில் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றது. இசைக்கு மயங்காதவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை என்றே கூறலாம். ஆடியும், பாடியும் இறைவனை வழிபட்டுள்ளனர்.
     "அசுரர் வாட, அமரர்க்கு ஆடிய
     குமரிக் கோலத்துக் கூத்து உள்படுமே"
               (சிலம்பு வேட்டுவவரி – 114-115)
என்ற வரிகள் கொற்றவை அசுரர்கள் தோற்றுப் போகவும் தேவர்கள் வெற்றிபெறவும் வெற்றிக் கூத்தினை ஆடினாள் என்பதை விளக்குகிறது.
     ஆய்ச்சியர் குரவையில் தீ நிமித்தமாக ஏற்பட்டுள்ள துன்பம் விலக பெண்கள் இணைந்து ஆடிப்பாடினர்.
     "மாயவன் என்றாள், குரலை, விறல் வெள்ளை-
     ஆயவன் என்றாள், இளி-தன்னை ஆய்மகள்
     பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை மற்றையார்
     முன்னை ஆம் என்றாள் முறை."
               (சிலம்பு ஆய்ச்சியர்குரவை 35-37)
     யாழ் நூலில் கூறப்பட்ட முறைப்படி இசை நரம்பின் பெயர்களை பெண்களுக்கு சூட்டி தம் துன்பம் தீர ஆடினர். இதன் வழியாக அக்கால மக்கள் இசைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
தொகுப்புரை    
சிலப்பதிகாரத்தில் இனவரைவியல் கூறுகள் இழையோடி நிற்கின்றன.
     ஆயர், குறவர், வேடுவர் இன மக்களின் பழமையை தொல்காப்பியர் முதல் எட்கர் தாஸ்டன் வரை விளக்கிக் கூறுகின்றனர்.
     பழங்குடி இன மக்கள் சமய நம்பிக்கையில் ஈடுபாடு உடையவர்களாகக் காணப்படுவதுடன், யாழ் நூலில் கூறப்பட்ட இசை மரபுப் படி இசை இசைத்து நடனம் ஆடினார்கள் என்ற கூற்றின் வழி, அக்கால மக்களின் அறிவுநுணுக்கம் புலப்படுகின்றது. கொற்றவை கண்ணன், முருகன் ஆகியோரை வழிபட்டமையை அறிய முடிகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.